அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வரவும், சிட்டு பறந்து வந்து கிளையில் அமரவும், சரியாக இருந்தது.

எல்லோரும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிவிட்டு, வட்டமாக அமர்ந்தனர். 

“ஹலோ! எல்லாருக்கும் வணக்கம்.  நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு.

“இருக்கோம் சிட்டு” என்றனர் குழந்தைகள், ஒரே குரலில்.

“ஓகே. டைனோசர் கதையை ஆரம்பிச்சிடலாம்.  போன மாசம் சொன்னதைக் கொஞ்சம் நினைவு படுத்திட்டு, மேலே சொல்றேன்”

“நானே சொல்றேன் சிட்டு.  சரியான்னு நீ சொல்லு. டைனோசரோட இடுப்பெலும்பு அமைப்பை வைச்சி, பல்லி இடுப்பு வகை,‌ பறவை இடுப்பு வகைன்னு, இரண்டு பெரிய பிரிவாப் பிரிக்கிறாங்க.  இந்தப் பல்லியிடுப்பு வகையில, ரெண்டு காலால நடக்குற டைனோசருக்கு, தெரோபோடு (Theropod)ன்னு பேரு.  மற்ற விலங்குகளைக் கொன்னு, இறைச்சியைத் திங்கிற டைனோசர் எல்லாமே தெரோபோடு  வகையைச் சேர்ந்தது.  சரியா?”

“சூப்பர் கயல். ரொம்பச் சரியாச் சொல்லிட்டே!” 

இதுவரைக்கும்  டி-ரெக்ஸ், வெலோசிராப்டர், டைய்னானிக்கஸ், அப்படீன்னு   மூனு வகையைப் பார்த்திருக்கோம்.  அடுத்ததா, நான் சொல்லப் போறது, ‘அலோசரஸ்’ (Allosaurus).   

Allosaurus
Pic.1 .Allosaurus – Source – britannica.com

இந்தப் பேருக்கு, என்ன அர்த்தம் சிட்டு?” என்று கேட்டான் பாபு.

“வித்தியாசமான பல்லின்னு, அர்த்தமாம்”

“இதோட காலம் எப்போ?” என்றான் முத்து.

“இது ஜூராசிக் காலத்தோட பிற்பகுதியில வாழ்ந்திருக்குது.  இதோட பெரும்பாலான புதைபடிவம், கிடைச்சிருக்கிற இடம் மேற்கு அமெரிக்கா..  இதுக்கு பெரிய மண்டையும், நீண்ட கனமான வாலும் இருந்திருக்கு.  அந்த வாலை வைச்சு தான், ஒடம்பைச் சம நிலையை வைச்சிருந்துச்சி.   ரெண்டு காலால நடந்த இதுக்கு, சின்ன கைகள்.  ஆனா டி-ரெக்ஸ் மாதிரி, கை அவ்ளோ சின்னது இல்ல.  அதுல இருந்த மூனு விரல்ல கூர்மையான வளைஞ்ச நகம் இருந்திருக்கு.

இது ஒடம்போட நீளம் 35 அடி வரைக்கும் இருக்குமாம். மிருகங்களைக் கொன்னு தின்னுறதுக்கு வசதியா,  இதோட பல்லு கூர்மையாவும், வாள் மாதிரியும் இருந்துருக்கு.  நாம ஏற்கெனவே ஸ்டெகோசரஸ்னு பார்த்தோமே, அதப் பத்தி, யாருக்காவது நினைவிருக்கா?”

“ம்.  எனக்குத் தெரியும்.  முதுகுல பிளேட் மாதிரி, நீட்டிக்கிட்டு இருக்குமே? அது பேரு தானே ஸ்டெகோசரஸ்?” என்றான் கதிர்.

“ஆமாம் கதிர்.. ரொம்பச் சரி. அந்த ஸ்டெகோசரஸை, இந்த அலோசரஸ் தாக்குனதுக்கு, சான்று கெடைச்சிருக்காம்”..

“அச்சோ!  அது முதுகில கூர் கூராப் பயங்கரமாயிருக்குமே?  அம்மாம் பெரிய டைனோசரை, இது தாக்கியிருக்குதா?  அப்ப உண்மையாலுமே, இது பயங்கரமான டைனோசர் தான்,” என்றான் வினோத், ஆச்சரியத்துடன்.  

“அடுத்தது மலர் கேட்டுக்கிட்டே இருந்தாளே, கொம்புள்ள டைனோசர் பத்திச் சொல்லு, சொல்லுன்னு.  அதனால இன்னிக்குக் கார்னோடரஸ். (Carnotaurus) டைனோசரைப் பத்திச் சொல்லப் போறேன்”. 

carnotaurus
Pic.2 – Carnotaurus – Source-bbcearth.com.

 “ம். சீக்கிரம் சொல்லு சிட்டு” என்று அவசரப்படுத்தினாள் மலர்.

“இந்தப் பேருக்கு, என்ன அர்த்தம் தெரியுமா?  கறி தின்னும் காளை!”

“அப்பிடியா? ஆச்சரியமாயிருக்கே!  காளை மாடு வைக்கோல், புல்லு தான் தின்னும், மாமிசக் கறி தின்னாது.  இது எப்பிடி?”  என்றான் முத்து..

“இது மாமிசம் தின்னுற டைனோசர் வகையைச் சேர்ந்தது தான்.  காளை மாடு மாதிரி இதுக்குக் கொம்பு இருந்ததால, இந்தப் பேரு வைச்சிருக்காங்க”.

“ஓஹோ! புரியுது” என்று தலையாட்டினான் முத்து..

“66 மில்லியன் ஆண்டுக்கு முன்னாடி, இது வாழ்ந்துருக்கு.  தென்அமெரிக்காவுல இதோட புதைபடிவம் கிடைச்சிருக்கு.   இதுவரைக்கும், இந்த வகையில ஒன்னே ஒன்னு தான், கெடைச்சிருக்காம்”

“இது எவ்ளோ பெரிசு, இருந்துச்சி சிட்டு?”  என்றான் கதிர்.

“ஒடம்பு 24 லேர்ந்து 29 அடி வரைக்கும் நீளம் இருந்துருக்கு.  2500 கிலோ வரைக்கும் எடையாம்..   சரி.  அடுத்த மாசம் வேற வகை டைனோசர் பத்திப் பார்க்கலாம்.  மழை வர்ற மாதிரி, இருட்டிக்கிட்டு இருக்கு. எல்லாரும் பத்திரமா இருங்க.  போயிட்டு வரேன்”.

“ஓகே சிட்டு!  நீயும் பத்திரமா போயிட்டு வா”.

டாட்டா காட்டிவிட்டுக் குழந்தைகளும், வீட்டுக்குக் கிளம்பினர்.

என்ன குழந்தைகளே! சிட்டு சொன்ன டைனோசர் கதை, ஒங்களுக்குப் பிடிச்சிருக்கா?  மறக்காம ஒங்கக் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்க.

முகவரி:-  feedback@poonchittu.com

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments