குட்டி யானை ஒன்று சோப் வாங்கக் கடைக்குச் சென்றது..

கடையில் இருந்த புலியிடம் “ஒரு சோப் குடுங்க” என்று கேட்டது குட்டியானை.

புலியார், என்ன சோப் வேணும் உனக்கு என வரிசையாக அழகழகான சோப்புகளை எடுத்து அடுக்கினார்.

அப்போது, அதில் நீர்க்குமிழி போல இருந்த சோப்பின் வடிவத்தில் ஈர்க்கப்பட்டு அதைத் தனது தும்பிக்கையால் தொட்ட குட்டியானை அந்த குமிழியால் ஈர்க்கப்பட்டு சோப்புக்குள் போய் விட்டது..

அந்த நேரம் ஒட்டகத்துக்கு பற்பொடியும், ஆமைக்கு ஷூவும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த புலி இதைக் கவனிக்கவில்லை.

வெகு நேரம் ஆகியும் தன் குட்டி திரும்பி வராததால், கடைக்கு அதைத் தேடி வந்தது அம்மா யானை.

“புலியாரே என் குட்டி வந்தாளா?” எனக் கேட்டது அம்மா யானை.

“ஆமாம் வந்து சோப் கேட்டாள், விதவிதமான சோப்புகளை எடுத்து வைத்தேன். கூட்டமாக இருந்ததால் பிறருக்கு பொருட்கள் கொடுத்து விட்டுப் பார்த்தால்  அவளைக் காணவில்லை, வீட்டிற்குப் போயிருப்பாள் என நினைத்தேன்” என்றது புலியார்.

அப்போது கைகால் முளைத்த சோப் ஒன்று கடைக்குள் அங்கும் இங்கும் குதித்து ஓடி அனைத்தையும் கலைத்துப் போட்டு ரணகளம் செய்தது.

புலி சோப் ஓடுவதைக் கண்டு அதைப் பிடிக்க முயற்சிக்கவே அதற்கு உதவி செய்தது அம்மா யானை.

அம்மா யானை பிடித்ததும் சமத்தாக நின்றிவிட்டது சோப். அப்போது தான் அம்மா யானை கவனித்தது, நீர்க்குமிழி சோப்பிற்குள் குட்டியானை மாட்டிக் கொண்டிருந்தது.

neerkumizhi soap
படம் : அப்புசிவா

குட்டியானையை எப்படி மீட்பதெனத் தெரியாமல் அம்மா யானை மிகவும் பயந்து போய், அழ ஆரம்பித்து விட்டது.

அம்மா யானையை சமாதானம் செய்த புலியார், சிங்கராணியை அழைத்து வரச் சொல்லி கிளியை அனுப்பினார்.

விரைந்து வந்த ராணி சிங்கம், நீர்க்குமிழி சோப்பைத் தன் நாவால் தடவிப் பார்த்தது.

அதைக் கண்டு சோப்புக்குள் இருந்த குட்டி யானை பயத்தில் துள்ளிக்குதித்தது.

துள்ளிக்குதித்த வேகத்தில் நீர்க்குமிழி சோப்பில் இருந்து வெளியே வந்துவிட்டது குட்டியானை.

குட்டி யானையும் அம்மா யானையும் சிங்கத்திற்கும், புலிக்கும் நன்றி சொல்லி விட்டு சந்தனசோப் வாங்கிக் கொண்டு சென்றனர்.

அந்த நீர்க்குமிழி சோப்பை ஒட்டகத்தின் திமிலில் பாதுகாப்பாக வைக்கச் சொல்லிவிட்டு கம்பீரமாக நடை போட்டு விடை பெற்றது சிங்கராணி!

What’s your Reaction?
+1
0
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments