பாரதி 131வது பிறந்தநாள் கவிதை
நூற்றான்டு கடந்தும்
நம் உள்ளங்களில் சுடர்விட்டெரியும் பாயுமொளி
அச்சம் தவிரென்பான்
ஓடி விளையாடென்பான்
ரௌத்திரம் பழகென்பான்
முரசெடுப்பான்
இனி எங்கெங்கும் அன்பே என்று முழங்கிடுவான்
கொட்டெடுப்பான்
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென ஆர்ப்பரிப்பான்
எங்கும் தமிழென்பான்
இன்பதமிழினிமை வேறெங்கும் காணோம் என மார்த்தட்டிடுவான்
மாதர் மாண்புதனை கொண்டாடிடுவான் அதை
பேணாத மடமையை கொளுத்திடுவோமென்பான்
வஞ்சகர் கூட்டத்தை வம்புக்கிழுப்பான்
வர்ண பேதங்களையெல்லாம் வீணென்றிடுவான்
நெஞ்சு பொறுக்குதில்லை என்றரற்றிடுவான்
அஞ்சி நடுங்கிடும் மனத்தை தட்டி எழுப்பிடுவான்
வல்லமை தாராயோ என்று வேண்டி நிற்பான்
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோவென எள்ளி நகைத்திடுவான்
சென்றது இனி மீளாதென்பான்
இன்று தான் புதிதாய் பிறந்தோமென்பான்
கனவு மெய்ப்பட வேண்டுமென்பான்
காணி நிலம் கேட்டிடுவான்
இந்த வையம் பாலித்திட என்றும்
பாடித்திரியவேணுமென்பான்
காணும் அனைத்தும் காட்சிப்பிழையென்பான்
மாயை பழித்திடுவான்
கண்ணம்மா கண்ணம்மா என்று மருகிடுவான்
இது பார் கன்னத்து முத்தமொன்று என உருகித் திளைப்பான்
காற்று வெளியிடையில் காதலிப்பான் – மிச்சமிருக்கும்
சோற்று பருக்கையை பறவைக்கு பகிர்ந்து
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட்டெடுப்பான்
ஞாலம் செழிக்க நாளும் குரல் கொடுத்த
எங்கள் ஞான கிறுக்கன்
நாவில் நெருப்பெழுதி
நாடி துடி துடிக்க
மீசை முறுக்கி
நெஞ்சம் நிமிர்த்தி
முன்பே சொல்லி வைத்தான்
“பல வேடிக்கை மனிதரைப்போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”
கணித்தவன் கவிசித்தன்
காலம் வென்று நின்றான்!