சென்னையில் ரம்யமான நீல நிறக் கடற்கரையில் அமைந்துள்ள நீலாங்கரை எனுமிடத்தில் அழகான, அமைதியான பெரிய வீட்டில் யாஷினி எனும் சுட்டிப்பெண் தன் அம்மா அப்பாவுடன் வசிக்கிறாள். இரண்டு மணிக்கெல்லாம் பள்ளி முடிந்து ஆறாம் வகுப்புப் படிக்கும் அவள் வீட்டிற்கு வந்து விட்டாள். என்றைக்கும் இல்லாமல் அன்று அப்பாவின் கார் ஹாரன் சத்தம் மதியம் மூன்று மணிக்கெல்லாம் அவள் தன் அறையில் இருந்த போதே வெளியிலிருந்து கேட்டது. ஓடி வந்து பார்த்த பொழுது, வேறு யாருமல்ல! அப்பாவே தான்!!

அவளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. எப்பொழுதுமே இரவு அவள் தூங்கிய பிறகு வரும் அப்பாவை பகல் நேரத்தில் வீட்டில் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி இருக்காதா பின்னே அவளுக்கு.

நீலாங்கரையில் வசிக்கும் அவள், அங்கு உதயமாகும் சூரியனது ஒளிக்கற்றைகள் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் வானவில்லின் ஏழு வண்ணங்களில் ஒன்றான ஊதா நிறத்தை கடல் நீர் பிரதிபலிக்கும் அழகை பகல் நேரத்தில் தன் அப்பாவுடன் அவள் கண்டதே இல்லை. இன்று அதற்கு ஒரு வாய்ப்பு. அப்பாவிடம் இன்று வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி டாமியுடன் கடற்கரைக்குச் செல்ல அவளுக்கு ஆசை.

அப்பா காரிலிருந்து இறங்கி வந்தவுடன் ஓடிச் சென்று கழுத்தை கட்டிக் கொண்டாள். அவள் பேசுவதற்கு முன்பே,

அப்பா அவளிடம்,

“இன்று உனக்கு ஒரு சர்ப்ரைஸ் யாஷினி”, என்றார். என்னவாக இருக்கும்? அவளால் யூகிக்கவே முடியவில்லை.

“அப்பா எனக்கு சர்ப்ரைஸ் எல்லாம் வேண்டாம். நீங்க இன்னிக்கி சீக்கிரம் வந்ததே சர்ப்ரைஸ் தான். நீங்களே சொல்லிடுங்க” என்றாள்.

“நாளைக்கு காலையில அம்மா, நீ, நான் மூணு பேரும் ஏர்போர்ட்டுக்குப் போகப் போறோம். சீனு சித்தப்பா, சித்தி, விச்சு எல்லோரும் டெல்லியிலிருந்து சென்னைக்கு வராங்க. நம்ம வீட்ல ஒரு வாரம் தங்கப் போறாங்க. போன டிசம்பர் விடுமுறையில நாம அங்கே போனோம். இந்த விடுமுறைக்கு அவங்கள வரச் சொல்லிட்டேன்டா”, என்ற அப்பாவிடம், “ஹைய்யா!!” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புன்னகைப் பூக்க யாஷினி அம்மாவிடம் சொல்வதற்காக அவளைத் தேடி உள்ளே ஓடினாள்.

மெல்லச் சூரியனின் செங்கதிர்கள் யாஷினியின் அறையில் நுழைந்தது. படுக்கையில் உருண்டு கண்களை இதமாக அழுத்தி ஜன்னலை நோக்கிப் பார்த்தவளுக்கு மஞ்சளும் சிவப்பும் கலந்த தகதகவென மின்னும் கடலின் மேற்பரப்பு உற்சாகத்தைக் கொடுத்தது. இன்று விச்சுவின் வருகை வேறு கூடுதல் மகிழ்ச்சி. வருவதற்கு முன்பே மனதில் என்னவெல்லாமோ ஓடியது அவளுக்கு. கடந்த வருடம் டிசம்பர் மாதம் டெல்லிக்குச் சென்றிருந்த பொழுது சித்தப்பாவுடன் நிறைய இடங்களுக்குச் சுற்றிப் பார்த்து வியந்தது நினைவிற்கு வந்தது.

செங்கோட்டை, டெல்லி பாராளுமன்றம், இந்தியா கேட், குதுப்பினார், ஹூமாயூன் சமாதி என எல்லா இடங்களையும் பார்த்த பொழுது விச்சு பெருமையாகப் பேசிக் கொண்டே வந்தான்.  தானும் இவ்வாறு தனக்குத் தெரிந்த இடங்களையெல்லாம் விச்சுவுக்குக் காண்பித்து, அவனை வியப்படையச் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது அவளுக்கு.

இன்று சென்னை வருகின்ற விச்சுவிற்கு டெல்லியில் பார்க்க இயலாத சென்னையில் மட்டுமே இருக்கும் இடங்களைக் காண்பித்து அசத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுதே வழக்கமான காலைப் பணிகளை மூவரும் வீட்டில் முடித்துவிட்டு, யாஷினி அவளது அம்மா அப்பாவுடன் ஏர்போர்ட்டுக்குச் சென்றடைந்துவிட்டாள். செக்-இன் எல்லாம் முடித்துக் கொண்டு வெளியே வந்த சித்தப்பா, சித்தியை யாஷினி ஓடிச்சென்று ஆசையாக கட்டிக் கொண்டாள். விச்சு இப்பொழுது ஏழாம் வகுப்பு. ஒரு வருட இடைவெளியில் கொஞ்சம் வளர்ந்திருந்தான். மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டே அனைவரும் காரில் வந்தமர்ந்து பயணப்பட்டார்கள்.

விச்சுவிற்குப் பயணக் களைப்பில் உடல் அசதி. யாஷினியைப் பார்த்து புன்னகைத்ததோடு சரி.

ஒன்றும் பேசவில்லை. மனதிலேயே யோசித்துக் கொண்டிருந்த தனது ஆசைகளை வீட்டிற்குச் செல்லும் இந்த பயணத்தில் தான் அப்பாவிடம் பேச ஆரம்பித்தாள் யாஷினி.

“அப்பா நாளைக்கு விச்சுவை டெல்லியிலேயே இல்லாத ஒரு இடத்திற்கு சென்னையில நாம கூட்டிட்டுப் போறோம்”, என்றாள்.

“அதற்கு என்ன.. போயிட்டா போச்சு. நானும் யோசிச்சு வச்சேன். மாமல்லபுரம் போலாம் யாஷினி”, உடனே பதில் கொடுத்தார் அப்பா.

கார் ஓட்டும் பொழுது பேசுவது பாதுகாப்பு இல்லை என்பதால் யாஷினியின் அம்மா சுகந்தி அவ்வப்போது எச்சரித்துக் கொண்டே தான் இருப்பாள். இன்றும் அதே தான். சங்கர் நினைத்தவாறே அவள்,

“முதலில் வீட்டிற்கு வந்து சித்தி, சித்தப்பா நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் யாஷினி! விச்சுவுக்கு பிடித்த இடம் எதுவாக இருந்தாலும் கூட்டிட்டுப் போகலாம்”, என்றவாறு, “வெளியில போறதப் பத்தி நாம காலைல பேசிக்கலாம் சங்கர். காரை கவனமாக ஓட்டுங்க”, என்றாள்.

இந்த நினைவுகளுடனேயே வீடு வந்து சேர்ந்தார்கள். சித்தி சித்தப்பாவின் ட்ராலிகளை ஆளுக்கு ஒன்றாக வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து வரவேற்பறையில் சற்றுநேரம் உரையாடிவிட்டு ஃபிரிட்ஜில் வைத்திருந்த பழச் சாறை யாஷினியின் அம்மா ட்ரேயில் எடுத்து வந்து கொடுக்க அனைவரும் பருகினார்கள். நன்கு ஓய்வெடுத்து உறங்க, மதிய வேளையில் நீலாங்கரையின் நீல நிறமும் காலை வேளையில் மின்னும் மஞ்சள் கலந்த செங்கதிரும் மறைந்து, நிலவு ஒளி மட்டுமே வீசி அனைவரின் ஆழ்ந்த உறக்கத்திற்கு துணையாக இருந்தது.

மாமல்லபுரம் ஒரு நாள் பயணத்திட்டம் தான். வீட்டின் அருகிலேயே இருப்பதால் காலையில் அனைவரும் விரைந்து எழுந்து பயணத்திற்குத் தயாராகி விட்டார்கள். தண்ணீர், கேன், தரைவிரிப்பு, ஸ்னாக்ஸ் எனக் கார் டிக்கியில் வைத்துக் கொண்டு அனைவரும் கிளம்பினார்கள். விச்சுவிற்குப் புதிய இடம் எப்படி இருக்குமென்ற ஆர்வம் மேலிட,

“பெரியப்பா மாமல்லபுரத்தில பார்க்க என்ன இருக்கு?”, என்ற கேள்வியை எழுப்பினான்.

“அங்க கி.பி. மூன்றாம் நூற்றாண்டில ஆட்சி செய்த பல்லவர் காலத்து கல்லாலான சிற்பங்கள் நிறைய இருக்கு.. எல்லாத்தையும் பார்க்க ஒரு நாள் போதாது. ஒரு வாரம் இருக்கப் போற..ஒவ்வொன்றாக சொல்றேன். அப்போ தான் நாம எப்படியெல்லாம் வாழ்ந்தோம் என்ற வரலாறு தெரியும் உங்களுக்கு”, என்றவாறே காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் சங்கர்.

அதற்குள் சுகந்தி, “நீங்க சிற்பங்களைப் பற்றி சொல்றதெல்லாம் அவங்க கிட்ட நேராக் காண்பித்து சொல்லிக்கலாம். போன மாசம் நம்ம ப்ரொபசர் வீட்டுக்கு வந்திருந்தப்ப அங்க இருக்க தாவரங்களைப் பற்றி சொன்னார் இல்ல.. அத வேணும்னா நான் பிள்ளைங்களுக்கு விளக்கமா சொல்லிக்கிட்டே வரேன். நீங்க டிரைவிங்ல கவனமா இருங்க”, என்றாள்.

விச்சுவும் யாஷினியும் ஆர்வம் மேலிட, சுகந்தி சொல்லப் போவதை அவளது முகத்தைப் பார்த்துக் கேட்கத் தயாரானார்கள். அவளும் அங்கே இருக்கும் அரிய வகையான தாவரங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் எனும் மாமல்லையில் தாவரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தது. வெப்பமண்டல உலர் பசுமை மாறாக் காடு (tropical dry evergreen forest TDEF) என்பது இந்தியாவில் ஒரு அரிய வகைக் காடு. மாமல்லபுரம் இருக்கற இடத்தைச் சோழமண்டலம் அப்படின்னு சொல்லுவாங்க. காடுகளையெல்லாம் அழிக்கும் நம்ம நவீன வாழ்க்கை முறையில இவையெல்லாம் பெரும்பாலும் காணாமல் போய் விட்டாலும் அதிர்ஷ்டவசமாக இந்த சோழமண்டலத்தில் மட்டும் இந்த வகைக் காடுகள் இன்னும் எஞ்சியிருக்கிறது. இங்குள்ள காட்டுத் திட்டில் மரங்களும் ஏறு கொடிகளும் முக்கியமான தாவரங்களா இருக்கு‌. இவையெல்லாம் மருத்துவப் பயனையும் கொடுக்கிறது. நாட்டு மருத்துவர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்ட நோய்களையெல்லாம் குணப்படுத்துவதற்கு இங்கே இருக்கிற தாவரங்களைப் பயன்படுத்துறாங்க. நிறையத் தாவரங்கள் இருந்தாலும் சில முக்கியமானதைப் பற்றி மட்டும் இப்ப இருக்க பயண நேரத்துல உங்களுக்குச் சொல்றேன்.

தொண்டைன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது?  நாம பேசும்பொழுது ஒலியை வர வைக்கிற சிறு நாக்கு இருக்கிற நம்ம தொண்டை (throat) தானே? ஆனா நான் சொல்ற தொண்டை ஒரு செடி (Kapparis zeylanica). தொண்டைமான் எனும் அரச வம்சத்தினர் இந்த தாவரத்தின் பூவைத்தான் தன்னுடைய முத்திரையாக் கொண்டிருந்தாங்க. இந்த தாவரத்தின் இலைச் சாறு பாக்டீரியா நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது. இதோட வேரிலிருந்து நமக்கு மயக்கம் கொடுக்கிற மருந்த தயாரிக்கிறாங்க. வாந்தி பேதியைக் கட்டுப்படுத்தும் மருந்துப் பொருளும் இதிலிருந்து எடுக்கலாம். மாமல்லபுரச் சிற்பங்களில் ஒன்று மகிஷாசுரமர்த்தினி மண்டபம். இதன் பக்கத்துல இந்தச் செடி இப்பவும் இருக்கு.

maamalla1

அப்புறம் ஈர் கொல்லி(Cassine glauca) அப்படின்னு ஒரு மரம் இங்க இருக்கு. கணேச ரதம் அப்படின்னு ஒரு சிற்பத்தை நாம அங்க போன பிறகு பார்க்கப் போறோம். அதற்கு வடமேற்குப் பகுதியில இந்த மரம் ஒன்னு இருக்கு. இது மரச்சாமான் செய்யறதுக்குப் பயன்படுது. அந்த காலத்துல நெருக்கமான பற்கள் கொண்டு தலை வார சீப்பு செய்யறதுக்கு பயன்பட்ட மரம் அப்படின்றதால இந்த மரத்துக்கு ஈர் கொல்லி எனப் பெயர் வந்தது. யாஷினி தலையில நிறைய முடி இருக்கிறதால ஸ்கூலுக்குப் போனாலே பேன் வந்துடுது. அதோட முட்டையைத் தான் ஈர் என்று சொல்றோம். இந்த மரத்தாலான சீப்பில் தலை வாரினா, ஈர் கூட தலையிலிருந்து வந்துடும். அதனாலதான் ஈர்க்கொல்லி என்ற பெயர் இம்மரத்துக்கு வந்தது. இந்த மரத்தோட வேருக்கு பாம்புக்கடி விஷத்தைச் செயலிழக்கச் செய்யற ஆற்றல் இருக்குன்னு நம்புறாங்க.

maamalla2

இப்படி இங்கே மருத்துவ குணத்தைக் கொண்ட செடிகள் நிறைய இருக்கு. மக்கள் பரவலாக அறியாம இருக்காங்க. இதையெல்லாம் நம்ம மண்ணோட வளம் என்று தான் சொல்லணும். இன்னும் நிறைய இருக்கு, தொடர்ந்து சொல்றேன் கவனமா கேளுங்க”, என்றாள் சுகந்தி. அதற்குள் மாமல்லபுரம் சிற்பங்கள் காணப் போகும் வழியிலேயே புலிக்குகை வந்ததால் காரை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கிவிட்டார்கள். அதனாலென்ன? இன்னும் பேசுவோம். காத்திருங்க.

(தொடரும்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments