காலை எழுந்ததும் எப்போதும் போல அடித்துப் பிடித்து ஆரவாரத்தோடு பள்ளிக்குக் கிளம்பினாள் தினு. பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கியதும் வகுப்புக்கு ஓடினாள்.

முதல் வகுப்பு அவளுக்கு ரொம்பவும் பிடித்த சயன்ஸ் வகுப்பு. சயன்ஸ் வகுப்பு அவளுக்குப் பிடிக்கக் காரணம் சயன்ஸ் டீச்சர், சிந்தியா. நீண்ட ஜடையைக் கொண்டையாகப் போட்டு, காட்டன் சேலை கட்டி கண்களை விரித்து, கைகளை ஆட்டி அவர்‌ என்ன பேசினாலும் ஆச்சர்யமாக இருக்கும்.

ஓடிப்போய் அனன்யாவிற்கும் நிரஞ்சனாவிற்கும் இடையில் போய் உட்கார்ந்தாள். ப்ரேயர் முடிந்து, சிறிது நேரத்தில் வந்த சிந்தியா மிஸ், ‘மழை எப்படி வருகிறது’ என்று  பாடம் எடுக்கத் தொடங்கினார். பிள்ளைகள் அனைவரும் ஆர்வமாய் பார்த்திருக்க, ‘ஸ்..ஸ்..’ என்று சத்தம் வந்தது.

‘என்ன சத்தம்?’ அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தாள் தினு. ரோசன் அவளையே பார்த்திருந்தான். “என்ன?” என்று உதடுகளை சத்தமின்றி அசைத்து கண்களால் கேள்வி கேட்டாள்.

கலர் கலராய் ரப்பரை பின்னே பின்னே செருகிய டிசைனில் வந்திருந்த புது ரப்பரை காட்டி, ‘பௌ.. பௌ’ என்று ஒழுங்கு காட்டினான்.

கண்களை சுருக்கி அவனை முறைத்தவளுக்கு பயங்கரமாய் கோபம்‌ வந்தது. ‘ச்ச.. இந்த பேட் பாயைக் காப்பாத்துறதுக்காக என் சூப்பர்‌ பவரை முதன்முதல்ல யூஸ் பண்ணிட்டேனே! வெரி பேட்! வெரி பேட்!” என்று மனதிற்குள்ளேயே பொங்கினாள்.

“தினு.. நீ சொல்லு!”

“எ.. என்ன மிஸ்”

“எங்கே வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

கேள்வியே தெரியாதே! பதிலை எப்படி சொல்வது?

“எவாபரேசன்” என்று பின்னே இருந்து ஒரு குரல் வந்தது. ‘தேங்க் காட்.. நோநோ.. தேங்க் ராகவி! பின்னே கேட்டதை  அப்படியே முன்மொழிந்தாள். “ம்.. வெரி குட்.. வாட்டர் ஸ்டீம் ஆகுற ப்ராசெஸ் பேரு எவாபரேசன்” என்று தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கட்டி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் சிந்தியா மிஸ்.

வெரிகுட் வாங்கிய சந்தோசத்தில் துள்ளி அமர்ந்தவள் பின்னே திரும்பி, “தேங்க்ஸ்!” என்றாள்.

எப்போதும் போல ‘வெல்கம்’ வரும் என்று நினைத்தால், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு தினு.” என்று மெல்லிய குரல் வந்தது.

“என்ன?” திரும்பாமலே கேள்வி கேட்டாள்.

“ப்ரேக்ல சொல்றேன்.”

இடக்கையைத் தூக்கி‌ தம்ப்ஸ் அப் சிக்னல் காட்டி அமைதியாய் அமர்ந்தாள் தினு.

காலை வகுப்பு இடைவேளையில் எல்லாம் மறந்துவிட ஓடி ஓடி விளையாட ஆரம்பித்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்துதான் அமைதியாயிருந்த ராகவி கண்ணில் பட்டாள்.

“ஹேய் ராகவி! சாரி.. சாரி.. நீ ஏதோ ஹெல்ப் கேட்ட இல்ல.. மறந்தே போயிட்டேன். என்ன சொல்லு.”

ராகவி அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்கு கணக்குப் பாடம் எடுக்கும், மிருதுளா மிஸ்ஸின் பெண். பயங்கர அறிவு.. அதைவிட பயங்கர அமைதி. துறு துறு தினுவை ரொம்பவும் பிடிக்கும்.

ஒரு பேப்பரை எடுத்து அவள்‌கையில் கொடுத்தாள். அதில் அவள்‌வகுப்பில் இருந்தவர்களின் பெயர்கள் இருந்தன. “இவங்க ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கித் தர்றியா?”

“ஏன்?”

“நான் வேற ஸ்கூல் போறேன். உங்களை எல்லாம் இனி பார்க்க முடியாதுன்னு அழுதேனா, அம்மாதான் எல்லோரோட  நம்பரையும் வாங்கிக்க சொன்னாங்க.. என் பர்த் டேக்கு உங்களை எல்லாம் இன்வைட் பண்றேன்.”

“அச்சோ! வேற ஸ்கூல் போறியா? ஏன்?” தினுவின் குரலில் உண்மையான கவலை கலந்திருந்தது.

“எங்க அம்மாவுக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலையாம்..”

“ஏன்? நம்ம ஸ்கூலுக்கு என்ன குறை?” பள்ளிப்பற்று!

“ம்ப்ச்.. தெரியலை. அப்பாகூட கேட்டார், ஏன்னு. அம்மா சொல்லவே இல்லை. எனக்கு அட்மிஷன் வாங்கினதும் இங்கே வேலையை விட்டுடுவாங்க..”

“ஓ..”

“எங்க அம்மாவை பிரின்சிபல் திட்டியிருப்பாங்களோ?”

“இதென்ன அநியாயம்? நம்மைக் கூடத்தான் மிஸ் திட்டுறாங்க.. அதுக்காக ஸ்கூல் மாத்திப் போயிடுவோமா..‌வெரி பேட்..‌வெரி பேட்!” என்று அளந்தாள்.

ராகவியின் முகம்‌ சுருங்குவதைக் கண்டு சட்டென்று, “ஹே..‌ஒன்னும் பிரச்சனையில்லை கவி. நான் தினமும் உனக்கு வீடியோ கால் போடுறேன். நாம பேசிக்கிட்டே இருக்கலாம். ஓகே?”

“ம்ம்ம்.. ஓகே..” ராகவியும் புன்னகைத்தாள்.

அதே நேரத்தில் மிருதுளா மிஸ், அந்த பள்ளியின் காரிடரில் பதட்டமாக நடந்து கொண்டிருந்தார். இந்த பக்கம் அந்த பக்கம் பார்த்து விட்டு சட்டென்று அடுத்து வந்த அறையின் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்தார். அது பழைய ரெக்கார்டுகளை வைக்கும் அறை. பல அடுக்கு ரேக்குகள் புத்தகங்களோடு வரிசையாக நின்று கொண்டிருந்தன.

நெற்றியில் பூத்திருந்த வியர்வையை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டார். படபடவென்று இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அவர் பார்த்த காட்சிக்குப் பொருள் என்ன? இது எப்படி சாத்தியமாகும்?

என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ தப்பாக நடக்கிறது. அதுவும் சின்ன தப்பு இல்லை. ஏதோ பெரிய தப்பு என்று அவர் உள்ளுணர்வு சொல்லியது.

இதுவரை மூன்று முறை இந்த வித்தியாசத்தைக் கண்டு விட்டார். இது நான்காவது முறை. முதல் முறை தன் கண்ணில்தான் கோளாறு என்று நினைத்தார். அடுத்த முறை சந்தேகம் வந்தது. அதற்கடுத்த முறை பயம் வந்தது. இந்த முறை படம் பிடித்து விட்டார்.

தன் கைப்பேசியை எடுத்து கேலரி திறந்து, தற்போது எடுத்த வீடியோவை தன் விரல் சொடுக்கில் உயிர்ப்பித்தார்.

பிரின்சிபல் பரதன் தெரிந்தார். அவர் கண்கள் அசையாமல் பொம்மை போல இருந்தன. சில நொடிகள் அப்படியே நின்றிருந்தார் பரதன். பின் ஏதோ ரோபோட் போல அர்த்தமில்லாத வகையில் S N U என்று வரிசையாக ஆல்பபெட் நான்கு சொன்னார். மறுபடியும் அமைதி. அடுத்த நொடி தூக்கதத்தில் இருப்பவரை  தண்ணீர் தெளித்து எழுப்பியது போல சட்டென்று மீண்டு வந்து, தான் விட்ட இடத்திலிருந்து மீண்டும் பேச ஆரம்பித்தார்.

கடந்த மூன்று முறையும் ஏற்பட்ட குழப்பத்தில் இருந்ததால் இந்த முறை மிருதுளா உடனடியாக தன் ஃபோனை எடுத்து வீடியோ பிடித்து விட்டார்.  பரதன் சார் இப்படி செய்வது இது இரண்டாவது முறை. இதே போல செய்த மற்றொருவர், வேதவள்ளி மிஸ், தமிழாசிரியை.

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். யாரோ ரிமோட் வைத்துக் கன்ட்ரோல் செய்யப்படும் பொம்மை போல ஏன் சில நொடிகள் நிற்கிறார்கள். மற்ற யாரும் இதை பார்க்கவில்லையா? மீண்டும் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தார்.

அந்த அறையில் இருந்த சிசிடீவி கேமரா வழியாக அவரைப் பார்த்திருந்தான் செக்ரட்டரி என்ற மர போர்டு வைக்கப்பட்டிருந்த டேபிளின் பின்னே உட்கார்ந்திருந்த எக்ஸ் மனிதன்.

“விஷ்ணு.. உங்க மிருதுளா மிஸ்ஸுக்கு சந்தேகம்‌ வந்துடுச்சி.. ஆதாரமா ஒரு வீடியோவே எடுத்துட்டார்”

“அச்சோ! என்ன பண்றது? நான் மாட்டிக்குவேனா?” டென்சனானார் அந்த பெரிய ஏசி அறையில் பள்ளி உரிமையாளர் என்ற போர்டுக்கு பின்னால் உட்கார்ந்திருந்த விஷ்ணு.

“ம்ப்ச்.. பயபப்டாதே! எப்போதும் போல சின்ன அடிபட‌ வை. நம்ம ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப்‌போய் சிப்பை வச்சிடலாம. அவளையும் நம்ம கன்ட்ரோலுக்கு நடமாடும் பொம்மையாக்கிடலாம்! ஹா!ஹா!ஹா!” என்று இடிபோல சிரித்தான் அந்த எக்ஸ்.

– தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments