4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிஃபா (FIFA) உலக கால்பந்து போட்டி, கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் 20/11/2022 துவங்கி, 18/12/2022 ல் நிறைவு பெற்றது. இதனை நடத்தியதன் மூலம் உலக கால்பந்து போட்டியை நடத்திய முதல் அரபு நாடு என்ற பெருமையைக் கத்தார் நாடு பெற்றது.
இப்போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்சு நாட்டை வென்று கோப்பையை அர்ஜெண்டினா நாடு கைப்பற்றியது. இதன் அணியின் தலைவராக இருந்து, அதிக கோல்கள் அடித்துக் கோப்பையைக் கைப்பற்றக் காரணமாக இருந்த விளையாட்டு வீரர் தாம், லியோனல் மெஸ்ஸி.
1986 ஆம் ஆண்டு முன்னாள் கால்பந்து விளையாட்டு வீர் மாரடோனா அர்ஜெண்டினா அணிக்குத் தலைவராக இருந்து கோப்பையைக் கைப்பற்றினார். அதற்குப் பிறகு பரிசு கோப்பையை 2022 ஆம் ஆண்டு மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா நாடு வென்றுள்ளது. மெஸ்ஸியைத் தம் வாரிசு என்று மாரடோனா ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.
மெஸ்ஸி அர்ஜெண்டினா நாட்டில் ரொசாரியோ நகரில் பிறந்தவர். 4 வயதில் உள்ளூரிலிருந்த ஒரு கால்பந்து விளையாட்டு கிளப்பில் சேர்ந்த இவருக்கு, முதன்முதலில் பயிற்சியைத் துவங்கியவர், இவர் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி ஆவார்.
மெஸ்ஸி உலக கோப்பை விளையாட்டுகளில் அதிக தடவைகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். உலகளவில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில், மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார். இன்னும் ஏராளமான விருதுகளை இவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.