குட்டி பீமாவும் அவனது தங்கை மித்ராவும் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். ‘கல்லா மண்ணா’ விளையாடிக் கொண்டிருக்கையில் வேகமாக ஒரு வாகனம் தெருவில் வந்தது. அதைப் பார்த்தவுடன் ஒதுங்குவதற்காக வேகமாக ஓடினாள் பீமா, மித்ராவின் தோழி ஸ்ருதி. அப்போது கால் தடுக்கி விட அவளது நெற்றியில் ஒரு கல் குத்தி ஆழமாகக் காயம் ஏற்பட்டுவிட்டது. ரத்தம் நிற்காமல் வந்தது.

“அச்சச்சோ நிறைய ரத்தம்!” என்று அனைவரும் பதற, பீமா தன் காற்சட்டைப் பையிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து ஸ்ருதியின் நெற்றியில் அழுத்திப்பிடித்தான். மித்ரா ஓடிச்சென்று ஸ்ருதியின் அம்மாவை அழைத்து வந்தாள். ஸ்ருதியின் அம்மா ரத்தத்தை பார்த்தவுடன் மிகவும் பயந்து போய் விட்டார். அவர் ஸ்ருதியின் பாட்டியை அழைக்க பாட்டி வந்து, “கொஞ்சம் மண்ணை எடுத்து காயத்துல அப்பினா சரியாயிடும்” என்றார்.

 அதற்கு பீமா, “இல்லை பாட்டி! அப்படி செய்யக்கூடாது. அது ரொம்பத் தப்பு. எங்க ஸ்கூல்ல முதலுதவி பற்றி வகுப்பு எடுத்துருக்காங்க. மண்ணிலே நிறைய கிருமிகள் இருக்கும். காயத்துல அதை வச்சு அழுத்தினா தோல் வழியா கிருமிகள் ரத்தத்தில் கலந்துடும். முக்கியமா டெடனஸ் கிருமி. அதனால அது ரொம்ப தப்பு அப்படின்னு சொல்லிருக்காங்க” என்றவாரே மேலும் அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தான்.

 வலி தாங்க முடியாமல் ஸ்ருதி அழுதாள். அப்போது ஸ்ருதியின் அம்மா “சின்ன வயசுல எனக்கு இப்படி ஒரு தடவ அடி பட்டப்ப காபி பொடியை வைத்து அழுத்தினாங்க” என்றார்.

“காபி பொடி கூட கொஞ்சம் பரவாயில்லை. ஏன்னா வீட்டுக்குள்ள டப்பாவில் தானே போட்டு வச்சுருக்கோம்.. ஆனா அப்படி எதுவுமே போட அவசியம் இல்லை. இப்படி அழுத்திப்பிடித்திருந்தாலே சரியாயிடும்” என்றவாறு தன் பலம் மொத்தத்தையும் கூட்டி பீமா அவளது நெற்றியில் அழுத்திப் பிடித்தவாறு இருந்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி பிடிச்சிருக்கணும் அண்ணா?” என்று மித்ரா கேட்க,

“வழக்கமா ஆரோக்கியமா இருக்கிற மனுஷங்களுக்கு ரத்தம் உறையுறதுக்கு 8 நிமிஷம் ஆகும். அதிகபட்சம் போனால் இருபது நிமிஷம் ஆகலாம். அதனால அவ்வளவு நேரம் அழுத்திப் பிடிச்சிருந்தா போதும். இரத்தம் தன்னாலேயே உறைஞ்சுடும்” என்றான்.

 மித்ரா, “அண்ணா அதான் எட்டு நிமிஷத்துல தன்னாலயே ரத்தம் நின்னிடுமே.. அப்புறம் எதுக்காக அழுத்திப் பிடிக்கணும்? பாவம் ஸ்ருதிக்கு வலிக்குது பாருங்க. அவள விடுங்க” என்றாள்.

“அந்த எட்டு நிமிஷத்துக்குள்ள நிறைய ரத்தம் வீணாப் போயிடும்ல.. அதை தடுக்கறதுக்குத்தான் அழுத்திப் பிடிக்கணும்.. இவ்வளவு சின்னக் குழந்தைக்கு கொஞ்ச நேரத்துக்குள்ள எவ்வளவு ரத்தம் போயிடும் தெரியுமா?” என்றார் ஸ்ருதியின் அம்மா. பீமாவால் அதிக நேரம் அழுத்திப் பிடிக்க முடியாததால் இப்போது ஸ்ருதியின் அம்மா அழுத்திப் பிடித்திருந்தார்.

 வெளியே என்ன சத்தம் என்று பார்த்து பீமாவின் பெற்றோர் வெளியே வருவதற்குள் பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அப்போது அழுத்திப் பிடித்திருந்த கைக்குட்டையை எடுக்க, ரத்தம் வடிவது நின்றிருந்தது. ஆனால் நெற்றியில் புருவத்தின் அருகே பாதி விரல் அளவுக்குப் பெரிய காயம் தெரிந்தது. “அச்சச்சோ காயம் பெருசா இருக்கே?” என்று வருத்தப்பட்டாள் மித்ரா. அதை பார்த்த உடன் ஸ்ருதியின் அம்மாவுக்கும் பாட்டிக்கும் கண்கள் கலங்கி விட்டன. ஆனால் ரத்தம் நின்று விட்டது தெரிந்ததும் ஸ்ருதி ஓரளவுக்குத் தெம்பாக ஆகிவிட்டாள்.

“என்னாச்சு விழுந்துட்டாளா? விளையாடும்போது நீளமான கவுன் போடக்கூடாது. காலைத் தடுக்கி விட்டுடும்னு நேத்தே சொன்னேனே ஸ்ருதி?” என்ற மித்ராவின் அம்மா, “இருங்க, அவளுக்குக் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்றபடி உள்ளே சென்று கொஞ்சம் பால் கலந்து எடுத்து வந்தார்.

அதற்குள் ஒரு சிறிய டார்ச் லைட்டால் காயத்தைப் பார்த்த பீமாவின் அப்பா, “தையல் போட வேண்டியதிருக்கும். தையல் போட்டால் சரியாகிடும். வாங்க ஹாஸ்பிடலுக்குப் போயிடலாம்” என்று கூப்பிட்டார். அவரது காரையும் தயாராக எடுத்து நிறுத்தினார்.

“ஐயோ! தையல் வேண்டாம்” என்று ஸ்ருதி அலற,

“காயம் பெருசா இருக்கு. தையல் போடலைன்னா தினமும் மருந்து வச்சுக் கட்ட வேண்டியிருக்கும். ஆறுறதுக்கு ஒரு மாசம் கூட ஆகலாம். ஆனால் தையல் போட்டா அஞ்சாவது நாளே பிரிச்சுடலாம். சீக்கிரம் ஆறிடும். புருவத்துக்குப் பக்கத்துல தான் இருக்கு. தழும்பு கூடத் தெரியாது” என்றான் பீமா.

“எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்க?” பீமாவின் அப்பாவுக்கு ஆச்சரியம்.

“சொன்னேன்ல அப்பா? போன வாரம் தான் முதலுதவி பற்றி வகுப்பு நடத்தினாங்க. ஒரு டாக்டர் வந்து அதுல பேசினாங்க. அதனாலதான் இவ்வளவு தெரிஞ்சுகிட்டேன்” என்றான்.

 “முகத்துல, தலையில் இருக்கிற காயங்கள் ரொம்ப சீக்கிரம் ஆறிடும். ஏன்னா, தலைக்குள்ள இருக்கிற மூளையைக் காப்பாத்துறதுக்காக நிறைய ரத்தநாளங்கள் இருக்குதாம். அதனால காயம் சீக்கிரம் ஆறிடும்.”

 ஸ்ருதி, அம்மா, பாட்டி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர். பீமா கூறிய விஷயங்கள் அனைத்தும் சரிதான் என்று கூறிய மருத்துவர் ஸ்ருதியின் காயத்துக்குத் தையல் போட்டு விட்டார். அத்துடன் டிடி ஊசியும் வலிக்கான மாத்திரைகளும் வழங்கினார்.

“குட்! இப்படித்தான் நமக்குத் தெரிஞ்ச நல்ல விஷயங்களை சரியான நேரத்துல மத்தவங்களுக்குச் சொல்லணும்” என்று பீமாவைப் பாராட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *