நமது அழகான கற்பனை  உலகத்தில் ஓர் அழகான நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ ராஜாவிற்கு சினுங்கன் என்ற அழகான மகன் இருந்தான்.  நாட்டின் இளவரசன்; வருங்கால அரசன். ஏன், எதற்கு , எப்படி என்று எங்கும் கேட்டபடி சுற்றிக்கெண்டிருக்கும்  நம் சினுங்கனுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருந்தன.  ஒன்று, வேலை செய்வது; எப்போது பார்த்தாலும் எல்லோரும் ஏதாவது வேலை செய்தபடி இருப்பதைப்  பார்த்தால் அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும். அவனுக்கு பிடிக்காத மற்றொரு விஷயம், அவன் கைகால்களை மற்றவர் தொடுவது. யாராவது  தொட்டாலே பயங்கரமாக கிச்சு கிச்சு சூட்டுவது போல இருக்க, காச் மூச் என்று கத்திவிட்டு அந்த இடத்தை விட்டு சிட்டாய்ப் பறந்து விடுவான். 

தன் மகனின் சோம்பேறி குணத்தை எப்படியாவது மாற்றி ஒரு நல்ல அரசனை நாட்டிற்க்குத் தர வேண்டும் என்று விரும்பிய அரசர்,  தன்னுடைய  மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க விரும்பினார்.  அவனை கூட்டிக்கொண்டு நகர்வலத்திற்குச் சென்றார். அங்கு எல்லோரும் அங்கேயும் இங்கேயும் நடந்து, நடந்து வேலை செய்வதைப் பார்த்து சினுங்கனுக்கு வழக்கம்போல  எரிச்சல்ஜவர  பெருமூச்சு ஒன்றை விட்டான், “அப்பா ஏன் எல்லோரும் எப்போது பார்த்தாலும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள்?” என்று கேட்கவும் செய்தான்.  அதற்கு ராஜா, “அப்போதுதான் மகனே உணவு கிடைக்கும்..* என்றார்.

அந்த பக்கமாக ஏர்கலப்பையோடு சென்ற மனிதனைப் பார்த்து  “அதோ அந்த விவசாயி எதற்காக வேலை பார்க்கிறான்?” என்றான்‌ சினுங்கன்.

” அவன் வயலில் வேலை பார்த்து, விளைவித்தால் தான்  நமக்கு உணவு கிடைக்கும்”

” சரி.. அந்த தச்சன் ஏன்  வேலை செய்கிறார்?”

“அவன் மேஜை  பலகைகள் செய்து விவசாயியிடம் விற்று, அதற்கு விலையாக உணவைப் பெற்றுக் கொள்வான்.”

”  அங்கிருக்கும் படைவீரர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள்?”

” பயிற்சி செய்கிறார்கள்..அவர்கள் இந்த நாட்டைப் பாதுகாத்து அதற்கு கூலியாக விவசாயிடம் உணவை பெற்றுக் கொள்வான்”.

“அப்போ எல்லோருமே வேலை செய்வது உணவிற்காகத்தானா?”

“ஆம் மகனே..‌மனிதர்கள் அனைவரும் தங்கள்‌வயிற்றுப் பசியைத் தீர்க்க வேலை செய்வதாக வேண்டும்தான்..” என்று முடிவாக சொன்னார் அரசன். 

அதற்குப்பின் சினுங்கன் ஏதும் பேசவில்லை. மாலை வீட்டிற்கு வந்ததும் நேரே தன் அறைக்குச் சென்றாள் என்று படுத்துவிட்டான். சொன்னதெல்லாம் நன்கு மனதில் பதியட்டும் என்றெனண்ணிய ராஜா அவனைக் தொந்தரவு செய்யவில்லை.

அடுத்தநாள் காலை விழித்து வந்த சினுங்கன் தன் தந்தையையும்‌தன் தாயையும்  பார்த்து, “அப்பா.. நான் ஒரு முடிவு செய்து விட்டேன்” என்றான்.

தன்‌மகன் சோம்பேறி என்றாலும் அறிவாளி‌என்று அறிந்திருந்த அரசர் ரொம்பவும்‌ஆர்வமாக,” என்ன முடிவு மகனே?” என்றார்.

” அப்பா.. எப்போது பார்த்தாலும் உணவுக்காக வேலை செய்துகொண்டே இருக்கும் இந்த மனிதப் பிறப்பை எனக்கு பிடிக்கவேயில்லை..  நான் வேறு ஏதாவது உயிராக மாறப் போகிறேன். அதற்கு எனக்கு உதவுங்கள்” என்றான்.

ஒரு நொடி‌மலைத்து நின்ற அரசர்ஜதன் இருக்கையில் சொத்தொன்று அமர, அவன் தாய், நம் அரசி முன்னே வந்தார், ” ஏன் மகனே.. இப்படி ஒரு முடிவு எடுத்தார்?” என்று பதற்றத்துடன்‌கேட்டார்.

” ஆமாம் அம்மா..  என்னைத் தடுக்காதீர்கள். என்னால் வாழ்நாள்‌முழுக்க வேலை செய்வதை நினைத்துக் கூட‌பார்க்க‌முடியவில்லை..  நான் நிச்சயமாக வேறு உயிராக தான் வாழப் போகிறேன்.. உணவுக்காக நாளெல்லாம் வேலை செய்ய என்னால் முடியாது!” என்று காலையும் கையையும் உதைத்துக் கொண்டு சொன்னான்.

‘ என்ன செய்வது?’ என்று சில நொடிகள் யோசித்த அரசர் ,  இப்படி சோம்பேறிப் பையன் எப்படியும் நாட்டைச் சரியாகப் போவதில்லை என்று முடிவெடுத்து,   சினுங்க விடம்,  “சரி மகனே! உன் தங்கையை நாட்டின் இளவரசியாக்கி அரசியாக ஆட்சி செய்யப் பயிற்சி தருகிறேன்.   சிறுவயதில் நான் செய்த ஓர்  உதவிக்காக ஒரு முனிவர் எனக்கு வரம் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். உன்னைப் பற்றி அவரிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வடக்கே உள்ள காட்டில் இருக்கும் அவரிடம் போய் வேண்டும் என்ற வரத்தை வாங்கிக் கொள்!” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

 தன் தாய் கட்டிக்கொடுத்த தானிய‌முட்டையோடு  காட்டுக்கு கிளம்பிவிட்டான் சினுங்கன். காட்டில் சினுங்கனைப் பார்த்து தான் வந்த விவரத்தைச் சொல்ல, சிறு புன்னகையோடு அவனைப் பார்த்தார் அந்த முனிவர்.   பின்‌நேரடியாக    காரியத்திற்கு வந்தார், “சரிதான் பையா.. உன் வாழ்க்கை, உன் விருப்பம்.. உனக்கு பத்து நாள்கள் தருகிறேன். காட்டை நன்கு சுற்றிப் பார். வரும் பவுர்ணமி அன்று வந்து நீ எந்த உயிராக விரும்புகிறாய் என்று சொல்.. “என்று கூறி விட்டு தவத்தில் ஆழ்ந்தார்.

அன்றுமுதல் காலையில் எழுந்து, ஒவ்வொரு விலங்காகப் பார்த்துப் பேசி, பின் மாலையில் தாய் தந்த கம்பு, கேழ்வரகு, நெல் தானியங்களைத் தின்றுவிட்டு முனிவர் இருந்த மரத்தின் அடியில் படுத்து தூங்கினான் சினுங்கன்.

 முதல் நாள் புல்வெளிக்கு நடுவிலே ஒய்யாரமாய்ப் படுத்திருந்த சிங்கத்திடம் சென்றான், “சிங்கராஜா! நீங்கள் பெரிய பலசாலி! உங்களுக்கு உணவு கிடைப்பது ரொம்பவும் எளிதான வேலை அல்லவா?” என்று கேட்டான்.

” அட போப்பா! அதோ அங்கே இருக்கிறதே அந்தமான்.. அதை வேட்டையாட இன்று மட்டும் மூன்று முறை முயற்சி செய்து விட்டேன். மூன்றும் தோல்வி..   முடியாமல் தான் இப்படி மூச்சு வாங்கி உட்கார்ந்து இருக்கிறேன்,” என்று ‘புஸ்! புஸ்!’ என்று மூச்சு விட்டது அந்த சிங்கம்.

அடக்கடவுளே! சிங்கராஜாவுக்கு இந்த நிலைமையா! என்று நினைத்த சினுங்கன் சுற்றிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த  புற்களைப் பார்த்து, அங்கிருந்த மானிடம் சென்றான். “மான் அண்ணா! இங்கு எங்கும் உங்கள் உணவான புற்கள் இருக்கிறது. உங்களுக்கு உணவு கிடைப்பது எளிதல்லவா?” என்றான்.

” அது எப்படி தம்பி? எங்கள் புல்வெளியில் காட்டு மாடுகள் ஆக்கிரமித்துவிட்டன. அதனால் சிங்கத்தின் எல்லைக்குள் உள்ள பகுதி என்று தெரிந்தும்ஃ இங்கே வந்து மேய்ந்து கொண்டிருக்கிறோம்.  அரை வயிறு சாப்பிடும்முன்  மூன்று முறை உயிருக்காக  ஓடி இருக்கிறேன்!”  என்று பெருமூச்சு விட்டது.

யோசனையோடு காட்டு மாடுகளின் சென்று, “உங்களுக்குப் பலமும் அதிகம். புற்களும் எங்கும் இருக்கின்றன. உங்களுக்கு உணவு கிடைப்பது எளிதல்லவா?” என்றான்.

“ம்கூம்.. அப்படியில்லையே.. உன்னைப் போன்ற  மனிதர்கள் விவசாயம் செய்வதற்கு எங்கள் இடத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். அதனால் நாங்களே உணவு தேடி அலைந்து செய்கிறார்கள் அதனால் உணவு கொண்டியுருக்காறோம்” என்று சோக கீதம் பாடின  அந்த காட்டு மாடுகள்.

  இப்படி ஒவ்வொரு விலங்கும்  உணவுக்காகத் தாங்கள் படும் பாட்டைச் சொல்ல   சினுங்கன் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தான்.

  நாளைதான் பவுர்ணமி.  நாளை இரவுக்குள் தான் எந்த உயிராக மாற விரும்புகிறோம் என்று முனிவருக்கும் சொல்ல வேண்டும். ஆனால் என்னவென்று சொல்வது..

யோசனையும் தூக்கமுமாய் இவரைக் கழித்தவர்,   காலையில் எழுந்து பார்த்தால் அவனை சுற்றி சின்ன சின்ன செடிகள் துளிர்த்திருந்தன.. அவன் அன்னை தந்தை தானியங்கள் சிதறி அவை முறை விட்டிருக்கின்றன.

சட்டென்று சினுங்கனின் கண்கள் பளிச்சிட்டன. “ஆஹா!  கண்டுபிடித்துவிட்டேன்! கண்டுபிடித்து விட்டேன்!” என்று  உற்சாகமாகக் கூவியபடி முனிவரிடம் ஓடினான்.

அவனைப் பார்த்த முனிவர், “ம்.. சொல் மகனே! நீ எந்த உயிராக விரும்புகிறாய்?” என்றார்.

 ” என்னை ஒரு செடியாக மாற்றி விடுங்கள் முனிவரே!” என்று பளிச்சென்ற சிரிப்போடு பதில் சொன்னான்.

அவன் புத்திசாலித்தனம் புரிந்து அவர் கண்களில் மென்னகை பரவ, 

” ஆம்.. நான் உணவுக்காக எங்குமே போகத் தேவையில்லை; சூரியன் தினமும் வந்து ஒளி தரும்; மேகம் வந்து மழை பொழியும்; மண்ணில் இருக்கும் சத்துக்கள் வேர் மூலம் என்னுள்ளே ஏறி  வரும். நான், உட்கார்ந்த இடத்திலேயே உணவு தயாரித்து வளர்ந்து கொள்வேன்.. எப்படி என் புத்திசாலித்தனம்?!” என்று  தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.

” புத்திசாலித்தனம்தான்.. ஆனால் ஒன்றை மறந்தாயே? உன் கைகால்களை தொட்டாலே ஓடுவாய்..  செடியாக மாறினால்,   உன்னால் எங்கும் ஓட முடியாது.. ” என்றார்.

அவனோ   அதற்கும் ஒரு யோசனை வைத்திருந்தான். ” யாராவது தொட்டால் சுருங்குவது போல எனக்கு இலைகளைத் தாருங்கள்”என்றான்.

”  சரிதான்.. உனக்கு உடல் வேலை செய்ய மறுத்தாலும், அதற்கும் சேர்த்து மூளை வேலை செய்கிறது.  உன் விருப்பம் போல இன்று முதல் தொட்டால் சுருண்டு கொள்ளும் இலைகளை உடைய செடியாக இருப்பாய்!” என்று வரமளித்தார் முனிவர். அந்த பௌர்ணமி அன்று தொட்டாசினுங்கி செடியாக மாறி விட்டான் நம் தொட்டால் சினுங்கும் சினுங்கன்.‌

இதுதான்  தொட்டாசிணுங்கி செடி, உருவான‌கதை..

Thottalsinungi

சரி குழந்தைகளே..  தொட்டாசிணுங்கி செடியை யாரேனும் தொட்டால் அதன் இலைகள் ஏன் சுருங்குகிறது என்பதற்கன் அறிவியல் காரணத்தைத் தெரிந்து கொள்வோமா? தொட்டா சிணுங்கி செடியின் இலைகளில் காம்பு பகுதியில் நிறைய நீர்ப்பைகள் இருக்கின்றன. இலைகளைத் தொடும் போது அந்த தொடு உணர்ச்சி,  மின்னலைகளளாக மாறி இலைகளில் கடத்தப்படுகிறது. இந்த மின்னலை காம்புகளை அடையும் போது நீர்ப்பைகளின் உள்ளே உள்ள நீர் சில மைக்ரோ நொடிகளில் வெளியேறுகிறது. அதாவது, நீர்ப்பைகள் பலூன் போல  உடைந்து விடுகின்றன.

இதனால் காம்பின் நீளம் குறைய, இலைகள் சுருங்குவது போலத் தெரிகிறது.

சரி.. இதனால் அந்த செடிக்கு என்ன பயன்?

பரிணாமத்தில் எந்த ஒரு பண்பு ஓர் உயிர், அது உயிர் வாழ்தலுக்கு தேவையானதாக, உதவுவதாக இருக்கிறதோ அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படும். இந்த தொட்டால் இலைகள் சுருளும் பண்பினால் என்ன பயன்? தாவர உண்ணிகள், இலைகளைச் சாப்பிடுவதற்காக அவற்றைத் கொடும் போது அவை சட்டென்று சுருங்கினால் ‘இது இலையில்லை.. ஏதோ பூச்சி!’ என்று  பயந்தபடி அந்த இலைகளை இந்த விலங்குகள் தவிர்த்து விடும். இப்படி தன்னைச் சாப்பிட வரும் விலங்குகளை இந்த செடி பயம்காட்டி விரட்டி விடுகிறது. அறிவான செடியாக இருக்கிறதில்லையா நம்ம தொட்டாச்சனுங்கி செடி..

ஓகே குட்டீஸ்.. அடுத்த மாதம் ஒரு ஜீ பூம் பா கதையோடும் அறிவியல் உண்மையோடும் சந்திக்கலாம்..  தீபாவளி வாழ்த்துகள் 🎉🎉

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *