நம் கற்பனை உலகத்தில் பல கோடி வருடங்களுக்கு முன்னால் இப்போதிருப்பது போலவே நீலநிற வானம், அந்த அழகு வானத்தைப் பேரழகு செய்ய காலையில் சூரியன் இரவில் நிலா, பல கோடி நட்சத்திரங்கள்    எல்லாம் இருந்தன.  அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கடமையும் இருந்தது. சூரியனுக்கு உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தையும், பளிச்சென்ற ஒளியையும் காலை முழுதும் கொடுக்க வேண்டும். நிலவிற்கு இரவில் உயிர்கள் ஓய்வெடுக்க குளிர்ச்சியான, மிதமான ஒளி தர வேண்டும்.  

எண்ண முடியாத அளவிற்கு வானெங்கும் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின் வேலை என்ன தெரியுமா? இரவு வேளையில்   பூமி எங்கும்  உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வாசம் வீசச்‌செய்வது. அந்த வாசத்தில் காலையில் அலைந்து திரிந்த உயிர்களெல்லாம் மனம் மயங்கி உறக்கத்தைத் தழுவின.

இந்த நடைமுறையில் நட்சத்திரங்களுக்கு கர்வம் வளர ஆரம்பித்தது.  தங்களால் தான் பூமியில் இருக்கும் உயிர்கள் எல்லாம் நிம்மதியாக உறங்குகின்றன. தாங்கள்தான் வானத்திலும்‌ பூமியிலும்  மிகவும் முக்கியமானவர்கள்  என்று பெருமை பேசின. சூரியன், நிலா, நம் பூமி எல்லோரையுமே கேலி செய்ய ஆரம்பித்தன.

 இதற்கு ஒரு முடிவு கட்ட சூரியன், நிலா, பூமி எல்லோரும் முடிவு செய்தன. அதற்கு சரியான வேளையாக பொன்மாலைப்பொழுதை முடிவுசெய்தன.  மேற்கே செவ்வானத்தில் திலகமாய் சூரியன் வீற்றிருந்து.  கிழக்கே நிலவு ஒளிவீச ஆரம்பித்திருந்தது. ஆங்காங்கே நட்சத்திரங்களும் மினுக்க ஆரம்பித்தன.  எங்கும் நறுமணம் வீசத் தொடங்கியது.

 எப்போதும் போல நட்சத்திரங்கள் இன்றும் சூரியனையும் நிலவையும், பூமியையும் கேலி செய்ய, சூரியன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தது, “நட்சத்திரங்களே! உங்கள் வாசம் உன்னதமாய் இருப்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் எங்களைத் துச்சமாய்ப் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்களும் மிகுந்த வல்லமை உடையவர்கள்தான். இந்த பூமியில் வாழும் உயிர்களுக்கு மிகத் தேவையானவர்கள்தான்” என்றது.

அதைக் கேட்ட நட்சத்திரங்கள், “ஹா! ஹா!ஹா!” என்று சிரிக்க ஆரம்பித்தன.  ஒரு நட்சத்திரம் பேச ஆரம்பித்தது, “சரிதான்.. ஒத்துக் கொள்கிறோம். ஆனால் என்னதான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவை என்றாலும் நான்கு மணி நேரம் நீ சுளீரென்று ஒளி வீசினால் பூமியில் இருக்கும் உயிர்கள் அனைத்தும் புலம்பத் தொடங்கி விடுவார்கள்.. எப்போதடா நீ இடத்தைக் காலி செய்வாய் என்று நேரத்தை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்..” என்று நக்கலாகச் சொல்ல, சூரியன் தலை குனிந்தது.

” ஏன் இப்படி மற்றவர் மனது புண்படும்படி பேசுகிறீர்கள்?” என்று கேட்ட நிலவைப் பார்த்து மற்றொரு நட்சத்திரம் பேசியது, “தப்புதான்! இப்போதே மன்னிப்பு கேட்டு விடுகிறோம்.. ஏனென்றால் நாளை நீ இருக்கவே மாட்டாயே! மாதத்தில் ஒரு நாள் தான் முழுதாக இருக்கிறாய்.. அதற்குப் பின்பு தேய்ந்து தேய்ந்து காணாமல் போய் விடுகிறாய்..  உன் கட்டாய விடுமுறை அமாவாசை இருட்டில் உயிர்கள் எல்லாம் எப்படி தடுமாறுகின்றன என்று தெரியுமா?” என சொல்ல, நிலவும் வாடியது.

“இப்படி எல்லாம் படைத்ததற்கு  ஏதாவது ஒரு காரணம் இருக்கும்” என்று சொன்ன பூமியைப் பார்த்து மற்றொரு நட்சத்திரம் பேச ஆரம்பித்தது, “அடடா! நீங்களா! உன் மேல் இருப்பதால் இந்த உயிர்களுக்குத்தான் எத்தனை பிரச்சனை.. நிலநடுக்கம் என்று பிளந்து விடுகிறாய்.. எரிமலையாய் வெடித்து நெருப்பைக் கக்குகிறாய்.. உன்னை பற்றிப் பேசுவதற்கு  எதுவுமே இல்லை..” என்று சொல்ல பூமி திகைத்து விட்டது. 

தொடர்ந்து பேசிய மற்றொரு நட்சத்திரம், “எங்களை விரும்பாத ஏதாவது உயிரைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று மினுக்கிச் சிரித்தது.

இந்த நட்சத்திரங்களுக்கு பாடம் சொல்லித் தர சூரியனும், நிலவும், பூமியும் முடிவு செய்தன. அதற்காக ஒரு பெரிய திட்டத்தையும் போட்டன. அதன்படி சூரியன்‌தன்‌ வெப்பத்தால் பூமியின் கடலிலிருந்து நீரைச் சூடு பண்ணியது. நீர் நீராவியாகி, மேலெழுந்து மேகங்களாக மாறியது. பெரிய மேகங்கள் மாலையில் வானிலிருந்த நிலவையும் நட்சத்திரங்களையும் சூழ்ந்து கொண்டன. நட்சத்திரங்களைச்‌ சூழ்ந்த மேகங்கள் அதன் வாசத்தையெல்லாம்  தங்களுக்குள் உறிந்து கொண்டன.  பின் நிலவு தன் குளிர்க் கரங்களால்  மேகங்களைத் தொட, அந்த மேகங்கள் மழையாய் பூமியில் பொழியத் தொடங்கின.

 அந்த மழைத் துளிகள் விழுந்த இடத்தில், சின்ன சின்னச் செடிகளும் கொடிகளும் துளிர்விட்டன.  அந்தச்   செடி கொடிகளில் பார்ப்பதற்கு நட்சத்திரங்களைப் போலவே இருக்கும் ஐந்து அல்லது ஆறு  வெள்ளை நிறத்தில் இதழ்கள் கொண்ட மலர்கள் பூக்க ஆரம்பித்தன. அந்த மலர்களில் இருந்து வெளிவந்த மயக்கும் வாசம் காற்றில் கலந்து எங்கும் பரவியது. அந்த வாசத்தில் பூமியின் மீதிருந்த உயிர்கள் அனைத்தும் தங்களை மறந்தன.

 தங்களைச் சூழ்ந்திருந்த மேகங்கள் எல்லாம் விலகிய பின்னர் நட்சத்திரங்கள் மீண்டும் மினுக்கத் தொடங்கின.  ஆனால்,அந்தோ! அவற்றிலிருந்து இம்மியளவும் வாசம் வரவேயில்லை! பூமியைக் குனிந்து பார்த்தால் நட்சத்திரங்கள் கீழே விழுந்து விட்டதோ என்ற சந்தேகம்  வரும்படி அழகான வெள்ளைப் பூக்கள் எங்கும் மலர்ந்திருந்தன.  அவற்றின் வாசத்தில் ஈர்க்கப்பட்ட வண்டுகளும் பூச்சிகளும் அவற்றைச் சுற்றி ரீங்காரித்துக்  கொண்டிருந்தன.

minmini
படம் : அப்புசிவா

அப்போது தான் நட்சத்திரங்களுக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. வாசம் இல்லாமல் போனால் தங்களுக்கு வானத்தில் எந்த வேலையும் இல்லையே என்று கலங்கிவிட்டன.‌” மன்னித்து விடுங்கள்! மன்னித்து விடுங்கள்!” என்று சூரியனிடமும், நிலவிடமும், பூமியிடமும் கெஞ்சின.

  சிரித்த சூரியனும், நிலவும், பூமியும், “நிச்சயமாக மன்னித்து விடுகிறோம். இனி இப்படிச் செய்யாதீர்கள்!” என்றன.

“எங்கள் வாசத்தை எப்படி திரும்பப் பெறுவது?” என்ற நட்சத்திரங்களிடம் சூரியன் சொன்னது, ” நல்ல விஷயங்களை இழப்பது எளிது. ஆனால் இழந்ததைத் திரும்பப் பெறுவது ரொம்பவே கடினம்.  மீண்டும் அந்த வாசத்தைப்  பெறுவதற்கு நீங்கள்  தினமும் இரவு பூமிக்குச் சென்று, பூக்களிடமிருந்து சிறிது சிறிதாக சேகரித்துக் கொள்ள வேண்டும்..” என்றது.

 தங்கள் கர்வத்திற்கும், மற்றவர் மனம் புண்படும்படியான பேச்சுக்கும் சரியான தண்டனைதான் என்று உணர்ந்த நட்சத்திரங்களும் தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டன.  தினமும் இரவு சில நூறு நட்சத்திரங்கள்   பூமிக்கு வந்து, ஒவ்வொரு வெள்ளை நிறப் பூவாகச் சென்று அதன் வாசத்தை உறிஞ்சி, கொஞ்சம் கொஞ்சமாக வானத்துக்கு கொண்டு சேர்க்கின்றன.  அப்படி இறக்கை கட்டி பறக்கும் நட்சத்திரங்கள் தான் இரவில்  அங்கும் இங்கும் “மினுக் மினுக்” என்று பறக்கும் மின்மினிப் பூச்சிகள்!

 மின்மினிப் பூச்சியைப் பிடித்து கண்ணாடி குடுவைக்குள் போட்டு  பார்த்திருக்கீங்களா குட்டீஸ்? அப்படி‌செய்திருந்தால் நட்சத்திரத்தையே பிடித்து வைத்த பெரிய வீரன் நான் என்று சட்டை காலரைத் தூக்கிவிட்டு கோங்க!!

 சரி.. மின்மினிப்பூச்சி ஏன், எப்படி மினுக்குது என்பதைத்  தெரிஞ்சுக்கலாமா?

 மின்மினிப் பூச்சியின் உடலில், ‘LIGHT ORGAN’  அதாவது ‘ஒளி உறுப்பு’ என்று ஓர் உறுப்பு உள்ளது. அதில் ஆக்ஸிஜன் உள்ளே புகும்போது வேதிவினை மாற்றங்கள் நிகழ, ஒளி ஆற்றல் உருவாகிறது. அதுவே மின்மினிப்பூச்சியை மினுக்க வைக்கிறது.

 இதனால் அந்த பூச்சிக்கு என்ன பயன்?

 அவ்வாறு ஒளிரும் போது நெருப்பு என்று நினைத்து பல்லி, தவளை போன்ற சிறு உயிரினங்கள் இவற்றை சாப்பிட முயற்சி செய்யாது.

 மேலும் ஒரு தகவல்.. நீங்கள் ஒன்று கவனித்திருக்கிறீர்களா குட்டீஷ்? காலையில் பூக்கும் பூக்கள் எல்லாம் பெரும்பாலும் சிகப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு என்று பல வண்ணங்களில் இருக்கும். ஆனால் இரவில் பூக்கும் பூக்கள், வெள்ளை நிறத்தில் மிகுந்த வாசம் கொண்டவையாக இருக்கும். உதாரணம்:மல்லி, முல்லை, பிச்சி.

இது ஏன் தெரியுமா?  வெள்ளை பூக்கள் இரவு நேரத்தில் பளிச்சென்று, வாசத்தோடு இருந்தால் வண்டுகளுக்கு கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். அப்போதுதானே வண்டுகளின் காலில் மகரந்தங்களைக் கட்டிவிட்டு உலகெங்கும் பூக்கள் பூக்கச் செய்யமுடியும்.

ஓகே குட்டீஷ்.. அடுத்த‌மாதம் மற்றுமொரு கலாட்டா கற்பனைக் கதையோடும் ஓர் அறிவியல் உண்மையோடும் சந்திக்கலாம்.. பை..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments