குழந்தைகளே!
பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம். இம்மாதம் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர், ‘கொண்டு கரிச்சான்’ சில இடங்களில், இதனைக் குண்டு கரிச்சான் என்கிறார்கள்.
இது மைனாவை விடச் சற்றுச் சிறியது; மண்ணில் இருக்கும் பூச்சிகளைத் தின்னும். தலையும், உடலின் மேற்புறமும் கறுப்பாக இருக்கும். வயிறும் வாலின் பக்கவாட்டுப் பகுதியும், வெள்ளையாக இருக்கும். வால் நீண்டிருக்கும். தீனி தின்னும் போது, வாலைப் பெரும்பாலும் தூக்கியே வைத்திருக்கும்.
இதன் தனித்துவம் குரல் இனிமை தான். அதிகாலை நேரத்தில், சீழ்க்கை ஒலி போலத் தொடர்ந்து, இனிமையாகப் பாடும். சில பறவைகள் ஏன் பாடுகின்றன? கீச் கீச்சென்று இயல்பாக அவை எழுப்பும் ஒலிக்கும், பாட்டுக்கும் என்ன வேறுபாடு?
இனப்பெருக்கக் காலத்தில் சில ஆண் பறவைகள், தம் இணையைத் தேடுமுன் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, ‘இது என் இடம்; இங்கு வேறு எந்தப் பறவையும் வரக்கூடாது,’ என்பதைப் பாடல் மூலம் அறிவிக்கின்றன என்கிறார்கள்.
குயில் மாதிரி ஆண் பறவைகள் மட்டுமே பாடும். அப்படி ஓர் ஆண் பறவை பாடினால், அந்த இடம் அதற்கு ‘முன் பதிவு’ செய்யப்பட்டதாக அர்த்தமாம். பெட்டையைக் கவர்வதற்கு, இது ஒரு உத்தி என்கிறார், கானுயிர் ஆர்வலரான சு.தியடோர் பாஸ்கரன்.
இக்குருவிக்கு ராபின் என்ற பெயர் இருந்தாலும், இது அமெரிக்க அல்லது ஐரோப்பிய ராபின் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்ததல்ல. இது இந்தியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் வாழும் குருவி அமெரிக்க ராபின் என்றவுடன், ‘மெளன வசந்தம்’ என்ற நூல், நினைவுக்கு வருகிறது. அது பற்றி ஒரு சிறு தகவல்:-
அமெரிக்காவில் 1920ல் எல்ம் மரங்களைப் பாதித்த பூஞ்சைக்காளான் நோய்க்கு (DDT) எறும்பு மருந்தை, வண்டி வண்டியாகக் கொட்டினார்கள். மருந்து அடிக்கப்பட்ட இலைகளைத் தின்ற புழுக்கள் செத்து விழுந்தன. அந்தப் புழுக்களைத் தின்ற ராபின் பறவைகளுக்கும், பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவற்றின் எண்ணிக்கை, 1954 ஆம் ஆண்டுக்குப் பின் வெகுவாகக் குறைந்து விட்டது. அதன் பிறகு தான், எறும்பு மருந்தை உலகமுழுதும் தடை செய்தார்கள்.
தம் பாடல் மூலம் வசந்தத்தை வரவேற்கும் ராபின் பறவைகள் இல்லாமல், அமெரிக்காவின் வசந்த காலத்தில், மயான அமைதி நிலவியது. இதைப் பற்றி ரெய்ச்சல் கார்சன் என்பவர் எழுதிய, ‘SILENT SPRING’ என்ற நூலை, ‘மெளன வசந்தம்’ என்ற தலைப்பில், பேராசிரியர் ச.வின்சென்ட். மொழியாக்கம் செய்திருக்கிறார்
சரி குழந்தைகளே! இக்குருவியை நீங்கள் பார்த்து அடையாளம் கண்டு கொண்டால், மறக்காமல் எங்களுக்கு எழுதுங்கள்.
முகவரி:- feedback@poonchittu.com.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.