சித்திரக்குள்ளன் தனது கதையை துருவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தான்.

இங்கிருந்து வெகு தூரத்தில் எங்களுடைய தேசம் இருக்கிறது‌. சித்திக்குள்ளர்களின் தேசமான சித்ரபுரி தான் எனது தேசம். நான் அந்த தேசத்தின் இளவரசன். என்னுடைய பெயர் அபூர்வன். என்னுடைய தாய், தந்தையருக்கு நான் ஒரே மகன் என்பதால் எல்லோருக்கும் அதிக செல்லம்.

கண்டிப்பே இல்லாமல் வளர்ந்ததால் குறும்புத்தனமும் என்னிடம் மிகவும் அதிகமாக இருந்தது. வளர‌வளர எனக்கு இளவரசன் என்ற அகந்தையும் கூடியது. யார் பேச்சையும் கேட்காத பணிவில்லாத குணமும் பெரியோரின் பேச்சைக் கேட்காத திமிரும் எனக்குள் ஊறிப் போயின.

பொறுப்பில்லாமல் நான் விளையாட்டுத் தனமாக சுற்றிக் கொண்டிருந்ததால் என்னுடைய தாய், தந்தை கவலையில் ஆழ்ந்தார்கள். ” நாளை எனக்குப் பிறகு அரியணையில் ஏறவேண்டிய நீ இப்படியே பொறுப்பில்லாமல் இருந்தால் எப்படி நாட்டில் நல்லாட்சி செய்யமுடியும்? இதற்கு ஒரே வழி நீ இளவரசன் என்ற சுகபோகத்தைத் தியாகம் செய்து பல்வேறு இடங்களுக்குச் சென்று நல்ல அனுபவங்களைப் பெற்று வா. அந்த அனுபவங்கள் மூலம் தான் உனக்கு வாழ்க்கைக்குத்  தேவையான பல அறிவுரைகள் உனக்குக் கிடைக்கும்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

என்னுடைய தாய் எனக்கு வருத்தத்துடன் விடை கொடுத்தார். எனக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவை மட்டுமே தந்தார்கள். தங்க நாணயங்களும் சிறிதளவு எனக்குக்  கொடுத்தார்கள்.

“நீ இவ்வளவு நாட்களாகக் கற்ற கல்வியே உனக்குத் துணையாக இருக்கும். அந்தக் கல்வியை வைத்து உழைத்து உனக்கு வேண்டியவற்றை நீயே சம்பாதித்துக் கொள்.‌ வேறெந்த உதவியும் உனக்கு நாங்கள் தர இயலாது” என்று திட்டவட்டமாக எனது தந்தை சொல்லி விட்டார்.

 எனக்கு  ஆரம்பத்தில் ஒன்றும் பயமாகவே இல்லை. எங்களுடைய தேசத்தில் நாங்கள் எல்லோருமே உருவத்தில் சிறியவர்களாக என்னைப் போலத் தான் இருப்பார்கள். எங்கள் தேசத்தைச் சுற்றி நெடிய மனிதர்களின் நெட்டை தேசம், மிகவும் பருத்த உருவத்தைக் கொண்ட மனிதர்களின் உருண்டை தேசமும், மனிதர்களை விடப் பல மடங்கு பலசாலிகளான அரக்கர்களின் அரக்க தேசமும்  இருந்தன.

எங்கள் நாட்டில் இயற்கை வளமும் நீர்வளமும் சிறப்பாக இருந்ததால் இந்த மூன்று தேசத்தினருமே எங்கள் நாட்டின் மீது அடிக்கடி படையெடுத்து வந்து யுத்தத்திற்கு அறை கூவிக் கொண்டே இருப்பார்கள். எப்படியாவது எங்கள் தேசத்தைக் கைப்பற்றி எங்களை அடிமையாக்க அவர்களுக்கு ஆசை.

நாங்கள் உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும் அறிவுக் கூர்மை உடையவர்கள். தந்திரசாலிகளாகவே இருக்கிறோம். எங்களுக்கு மாயமந்திரக் கலைகள் இயற்கையாகவே வந்தன. ஒரு குறையோடு இறைவன் எங்களைப் படைத்திருந்ததால் அதை ஈடு செய்யும் அளவு எங்களுக்குத் தற்காப்பிற்காக மாயமந்திரக் கலைகளில் நல்ல திறமையையும் கொடுத்திருந்தார்.

எங்களுடைய திறமையை வைத்து எங்களுடைய முன்னோர் காலத்தில் இருந்து, தேவைப்படும் போதெல்லாம் ஒரு மாய அரணை எங்களுடைய மந்திர சக்தியால் எங்கள் நாட்டைச் சுற்றி எழுப்பி விடுவோம். நாடே மறைந்து போகும்படியாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்துவிடுவதால் எதிரிகளால் அந்த மாய அரணை உடைத்து எங்களைத் தாக்கி வெல்ல முடிவதில்லை.

என்னை திடீரென்று ஒரு நாள் அரணை விட்டு வெளியே அனுப்பி வைத்தார்கள். எனது அறிவு மற்றும் மாயக்கலைகளின் திறமையையும் நினைத்து கர்வத்துடன் எங்கள் தேசத்தை விட்டு வெளியே வந்தேன். முதலில் எல்லாமே விளையாட்டாகத் தான் இருந்தது.

ஆனால் போகப் போக விளையாட்டு வினையாக ஆரம்பித்தது.

கையிலிருந்த உணவு தீர்ந்து போனது . எனது தேசத்தில் இருந்து நீண்ட தூரம் வந்துவிட்டேன். காட்டுப் பகுதிக்குள் இருந்தேன் நான். என் கையில் பொற்காசுகள் இருந்தும் அருகில் இருக்கும் சிற்றூர்களுக்குச் சென்று கடைகளில் எதுவும் வாங்க முடியாத நிலை. என்னுடைய உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடி என்னைத் துரத்தி விடுவார்களோ என்று மனதில் பயம்.

நான் நடந்து வந்து கொண்டிருந்த வனப்பகுதியில் பழமரங்கள் பல இருந்தன. கண்ணைப் பறிக்கும் நிறங்களில் கனிந்த பழங்கள் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்குப் பசியும் தாகமும் மிகவும் அதிகமாகி விட்டன.

கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்தப் பழங்கள் உண்ணத் தகுந்தவையா என்று கூட யோசிக்காமல் வேகவேகமாக அவற்றைப் பறித்து உண்டுவிட்டேன்.

அந்தப் பழங்கள் உண்மையில் அறிவை மழுங்கச் செய்து போதையேற்றும் பழங்கள். அவற்றை உண்டதும் எனது மூளை மழுங்கிப் போய் வினோதமாக நடந்துகொள்ள ஆரம்பித்தேன். எனது நடவடிக்கைகளை எனது அறிவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தேறல் என்று சொல்லப்படும் மதுபானத்தை எங்கள் தேசத்தில் பெரியவர்கள் அருந்தி விட்டு வினோதமாக நடந்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி என்னுடைய நிலை ஆகியிருந்தது.

அந்தக் குழப்பமான மனநிலையில் நான் ஆடிப்பாடிக் கொண்டே மயக்கத்தில் நடந்து வந்தபோது ஒரு முனிவர் தனது தவத்தை முடித்துக் கொண்டு உணவு உண்பதற்கு முன் நீராட அருகிலிருந்த நீரோடைக்குச் சென்றிருந்தார்.  சில கனிகளை ஒரு தட்டில் வைத்து விட்டு அருகில் ஒரு மண்குவளையில் குடிப்பதற்குக் குடிநீரையும் வைத்து விட்டுச் சென்றிருந்தார்.

விளையாட்டுத் தனமாக அந்தப் பழங்களைக் கசக்கி எறிந்த நான் தண்ணீரையும் கீழே கொட்டிவிட்டேன்.

அந்த முனிவர் திரும்பி வந்ததும் நான் செய்த செயலைப் பார்த்து

அதிர்ச்சியடைந்தார்.

” குள்ளா, நீ மிகப் பெரிய பாவம் செய்து விட்டாய். நான் மாதம் முழுவதும் தவம் செய்து விட்டு உணவு உண்பதற்காக இந்தப் பழங்களைத் தயாராக எடுத்து வைத்து விட்டு நீராடச் சென்றேன். ஒரு மாதத் தவத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு மாதம் தவம் செய்வதற்கு முன்னால் நான் உண்ணும் ஒருவேளை உணவை நீ பாழ்படுத்தி விட்டாய். உனது தவறை என்னால் மன்னிக்க இயலாது. நீ இன்றிலிருந்து அருகிலிருக்கும் சிறிய ஆற்றில் முதலையாக மாறி வாழக் கடவது. உன் தவறுக்கு இதுவே சரியான தண்டனை” என்று சொல்லி சாபமளித்து விட்டார்.

அதற்குள் சுயநினைவை அடைந்த நான் எனது தவறை உணர்ந்து அவருடைய காலடியில் விழுந்து கதறினேன்.

“தெரியாமல் செய்து விட்டேன் ‌. நான் சித்திரபுரி நாட்டின் இளவரசன். உலக அனுபவம் வேண்டி நாட்டை விட்டு வெளியேறி வந்தேன். நான் முதலையாக மாறி வாழ்ந்தால் என்னுடைய தாய், தந்தையிடம் திரும்பச் செல்ல முடியாது. என்னைக் காணாமல் அவர்கள் தவித்துப் போவார்கள். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லிக் கதறினேன். அவர் உடனே,

“நான் கொடுத்த சாபத்தை என்னால் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. நீ செய்த தவறுக்கு நீ தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால் உனக்கு ஒருநாள் சாபமுக்தி கிடைக்கும். உன்னை இரண்டு பறவைகள், அணிலுடன் வரும் ஒரு சிறுவன் சந்திக்கும் போது உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும். அன்னப் பறவைகளாக நதியில் நீராடவரும் கந்தர்வர்கள் உனக்கு என்னுடைய  சாபத்தில் இருந்து முக்தி அளிப்பார்கள். ஆனால் உனக்கு உன்னுடைய தேசத்திற்குத் திரும்பும் வழி மறந்து போய்விடும்‌. அந்தச் சிறுவன் ஒரு மகத்தான காரியத்தைச் செய்வதற்காகப் பயணம் செய்து கொண்டிருக்கும் போது வழியில் தான் உன்னைச் சந்திப்பான். நீ அவனுக்கு உதவி செய்வாய். அவன் தனது காரியத்தில் வெற்றி அடையும் போது உனக்கும் உங்கள் நாட்டிற்குத் திரும்பும் வழி நினைவிற்கு வரும். உன்னுடைய மந்திரசக்திகள் தேவைப்படும் போது மட்டும் உனக்கு நினைவிற்கு வரும். மற்ற சமயங்களில் உனக்கு அவை பற்றிய நினைவிருக்காது. நல்ல செயல்களைச் செய்யும் போது உனக்கு எப்போதெல்லாம் உயிருக்கு ஆபத்து வருகிறதோ அப்பொதெல்லாம் உனது சக்திகள் உனக்கு உதவி செய்யும். அந்தச் சிறுவனுக்கு நீ உதவி செய்து அவன் நினைத்த காரியத்தில் வெற்றி ஈட்டும் போது நீயும் உன் நாட்டிற்குத் திரும்பும் நாள் வரும்” என்று சொல்லி விட்டார்.

malaikottai

நானும் உடனே அந்த ஆற்றில் நீந்துகின்ற  முதலையாக மாறி அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அணில், கிளி, மயிலுடன் உங்களைப் பார்த்தவுடனே அந்த அன்னப்பறவைகளையும் பார்த்தேன். எனக்கு சாபமுக்தி கிடைக்கும் நேரம் நெருங்கி விட்டதென்று புரிந்து கொண்டு விட்டேன். முனிவர் சொன்னபடி எனக்கு சாபமுக்தி கிடைத்து விட்டது.

தன்னுடைய கதையை அபூர்வன் சொல்லி முடிக்க, அவர்கள் எல்லோரும் அந்தக் கதையைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார்கள். துருவனுடைய குழு இப்போது ஐவர் குழுவானது. அன்றைய இரவை அந்த நதிக் கரையில் கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் தங்களது பயணத்தை மீண்டும் தொடங்கினார்கள்.

சித்திரக்குள்ளன் அபூர்வனும் சேர்ந்து கொண்டதும் அவனுடைய பேச்சிலும் கலகலப்பான பண்பிலும் நெகிழ்ந்து போன கிளி, மயில், அணில் மூன்று பேரும் மகிழ்ச்சியுடன் அபூர்வனுடன் பேசிக் கொண்டே நடந்ததில் நடையின் களைப்பே தெரியவில்லை.

நடுவில் முடிந்த போது இளைப்பாறி ஓய்வெடுத்த பின்னர் வனத்தில் கிடைத்த பழங்களையும் கிழங்குகளையும் உண்டு நதியில் நீராடித் தங்கள் களைப்பைப் போக்கிக் கொண்டார்கள்.

கதிரவன் உதிக்கும் திசையைக் குறி வைத்துக் கொண்டே நடந்ததால் கிழக்குத் திசையில் பயணம் செய்வது அவர்களுக்குக் கடினமாகவே இல்லை.

மயில் அடிக்கடி இளவரசி ஐயை பற்றிப் பேசிக் கொண்டே வந்தது‌. ஐயையின் அழகையும் மற்ற‌ உயிரினங்களுடனும் மனதில் நேசத்துடன் பழகும் பண்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தது. துருவன் தன்னிடமிருந்த இளவரசியின் ஓவியத்தை அனைவருக்கும் பிரித்துக் காண்பித்தான்.

ஒருவழியாக அபூர்வனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்து ஐந்து நாட்களுக்குப் பிறகு நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்து விட்டார்கள். அவர்கள் கண்ணெதிரே மலைக்கோட்டை பிரம்மாண்டமாக மலையுச்சியில் காட்சி அளித்தது.

மலைக்கோட்டை மாயாவி வசித்த அந்த மலையின் அடிவாரத்தில் இருந்தே மலைக்கோட்டை மாயாவியின் படைவீரர்களின் காவல் பலமாக இருந்தது.

மலையிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த வனத்தின் உட்பகுதியில் இருந்தே மரங்களின் அடர்ந்த கிளைப்பகுதிகளில் தங்களை மறைத்துக் கொண்டு ஐவரும் மலையின் அடிவாரத்தில் இருந்த ஆட்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.

தங்களுடைய எதிரியின் பலம் மிகவும் அதிகம் என்பதால் சரியானபடி திட்டம் தீட்டியபின்னர் தான் ஏறவேண்டும் என்று நினைத்தார்கள். மலையடிவாரத்தில் இருக்கும் காவலாளிகளை எப்படியாவது ஏமாற்றி விட்டு மேலே ஏற ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டு அதற்குத் தகுந்த தருணத்திற்காக துருவன் தனது நண்பர்களுடன் வனத்தின் எல்லைப்பகுதியில் காத்துக் கொண்டிருந்தான்.

-தொடரும்.

(ஹலோ குட்டீஸ்! துருவன் தன்னுடைய சாகசங்களைத் தன்னோட விசித்திரமான நண்பர்களின் உதவியோடு எப்படியெல்லாம் நடத்தப் போறான்னு இனிமே வரப்போற பகுதியில பாக்கலாமா? தொடர்ந்து படியுங்க குழந்தைகளா!

உங்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments