கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா ரொம்ப நல்ல பொண்ணு தான்.
பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அவளுக்குப் பிடிச்ச உணவுப்பண்டம், நொறுக்குத்தீனி எல்லாமே பாட்டி அவளுக்கு வீட்டிலயே செஞ்சு தருவாங்க. அப்புறம் அவளுக்கு தினம் தினம் புதுசு புதுசாக் கதையெல்லாம் சொல்லுவாங்க.
அன்னைக்கு சாயந்திரம் கருணா ஸ்கூலில இருந்து திரும்பி வரும்போதே முகமெல்லாம் வாடிப் போயிருந்தது.
பாட்டிக்கு அவளைப் பாத்ததுமே புரிஞ்சு போச்சு. ‘பள்ளியில ஏதோ கருணாவுக்குப் பிடிக்காத விஷயம் நடந்திருக்கு’ ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டாங்க.
உடனே ஒண்ணுமே கேக்காம அவளுக்கு சாப்பாடெல்லாம் கொடுத்து அவளோட பிரியமாப் பேசிக்கிட்டே இருந்தாங்க .
கொஞ்ச நேரத்தில் அவளோட மூட் சரியாயிடுச்சு. அவளே பாட்டி கிட்டே வந்து அன்னைக்கு ஸ்கூலில நடந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா. இது தினமும் நடக்கிற விஷயம் தான்.
அம்மா, அப்பா இல்லைன்னா பாட்டி கிட்டே அன்னைக்குப் பள்ளியில் நடந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டால் தான் அவளோட மனசுக்கு நிறைவா இருக்கும். சில சமயம் அம்மா கிட்ட. சில சமயம் பாட்டி கிட்ட. அப்பா அந்த நேரத்தில் வீட்டில இருந்தா அப்பா கிட்ட சொல்லுவா. அன்னைக்கு அம்மா காய்கறி வாங்கக் கடைக்குப் போயிருந்தாங்க. அதுனால தான் பாட்டி கிட்ட சொல்ல ஆரப்பிச்சா.
“பாட்டி, பாட்டி இன்னைக்கு எங்க ஸ்கூலில ஒரு பொண்ணு புதுசா வந்து சேந்திருக்கா. அதுவும் எங்க வகுப்புக்கே வந்தா. அவங்க காஷ்மீரிலிருந்து இங்க சென்னைக்கு வந்திருக்காங்க தெரியுமா? அவளோட அப்பா அரசாங்கத்தில பெரிய வேலை பாக்கறாராம்” என்று சொல்ல ஆரம்பித்தாள் கருணா.
“அப்படியா! அவளுக்குத் தமிழ் தெரியுமா? எப்படி சமாளிக்கறா?” என்று பாட்டி கேட்டார்.
“அதெல்லாம் பிரச்சினை இல்லை. கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்ச கொஞ்சம் தமிழ் கலந்து பேசி எப்படியோ சமாளிச்சிடறா. அவளோட அம்மாக்குத் தமிழ் நல்லாத் தெரியுமாம். சென்னையில தான் படிச்சாங்களாம். அதுனால கஷ்டமாயிருக்காது. சீக்கிரமா எங்கம்மா மாதிரியே நானும் கத்துக்குவேன்னு சொல்லிருக்கா” என்று கருணா சொல்ல,
“அப்படின்னா உனக்கு இன்னைக்கு அந்தப் புதுப் பொண்ணு கூடப் பேசிப் பழகவே நேரம் சரியா இருந்திருக்குமே? ஜாலியா இருந்ததா?” என்று பாட்டி கேட்டதும் கருணாவின் முகம் மீண்டும் வாடிப் போனது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் குதூகலமாகப் பேச ஆரம்பித்தவள் திரும்ப மௌனமானாள்.
பாட்டி அவளிடம் திரும்பத் திரும்ப எதுவும் கேட்டு வற்புறுத்தவில்லை. கொஞ்ச நேரத்தில் கருணா தானாகவே பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
“பாட்டி, புதுசா வந்திருக்கற காஷ்மீர் பொண்ணு ரொம்பச் செவப்பா அழகா இருக்கா பாட்டி. அப்படியே புதுசாச் செடியில பூத்த ரோஜாப்பூ மாதிரி இருக்கா. அதுனாலயே எங்க க்ளாஸில எல்லோரும் அவளைச் சுத்தி சுத்தி வந்தாங்க. எங்க வகுப்பில அனிதான்னு ஒரு பொண்ணு இருக்கா. அவ கொஞ்சம் நிறம் கறுப்பா இருப்பா. இவ்வளவு நாளும் எல்லாரும் அவ கூட நல்லாத் தான் பழகினாங்க. இன்னைக்கு இந்தக் காஷ்மீர் பொண்ணு வந்ததும் திடீர்னு எல்லாரும் அனிதாவை நீ ரொம்பக் கறுப்பா இருக்கேன்னு சொல்லிச் சொல்லி கேலி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அவ பாவம் அழுதுக்கிட்டே வீட்டுக்குப் போனா. அது எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு பாட்டி. என்னோட நண்பர்கள் செஞ்சது தப்புதானே பாட்டி” என்று வருத்தத்துடன் கருணா பாட்டியிடம் கேட்டாள்.
“ஆமாம். அவங்க செஞ்சது கண்டிப்பாத் தப்புத் தான். தோலின் நிறத்தை வச்சு மனுஷங்களை கேலி செய்யறது ரொம்பத் தப்பு. நாம என்ன நிறத்தில் பிறக்கிறோங்கறதோ, நம்மோட தோற்றம் எப்படி இருக்குங்கறதோ நாம முடிவு செய்யறதில்லை. பிறக்கற போதே அவையெல்லாம் நாம கொண்டு வரோம் அவற்றை நம்மால மாத்த முடியாது. நாம் நம்மோட பண்புகளாலயும் நமது எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளாலயும் தான் நம்மை உசந்தவங்களாக்கிணும். காஷ்மீர் தேசத்தில் எப்பவும் குளிர் இருக்கறதுனாலே அங்க இருக்கறவங்களில பெரும்பான்மையானவங்க அப்படித் தான் இருப்பாங்க. இங்க உஷ்ண தேசத்தில் இருக்கறவங்க உடல் நிறம் அவ்வளவு வெளுப்பா இருக்காது. நான் உனக்குக் காக்காவோட கதை சொல்லறேன். அதை உங்கள் வகுப்பில போய் நாளை கதை சொல்லும் நேரத்தில் சொல்லு. எல்லாரும் புரிஞ்சுக்குவாங்க” என்று சொல்லிய பாட்டி காக்காயின் கதையைக் கருணாவுக்கு சொன்னாள் .
ஒரு காட்டில ஒரு குட்டிக் காக்கா இருந்துச்சாம். அது ரொம்பத் துருதுருன்னு அங்கேயும் இங்கேயும் பறந்துக்கிட்டு ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சாம்.
ஆனா அது வளர வளரத் தன்னைச் சுத்தியிருக்கற மத்த பறவைங்களைப் பாத்து அதுக்கு மனசில ஒரு குறை வந்துதாம்.
‘கிளி பச்சை நிறத்தில அழகா இருக்கு. பஞ்சவர்ணக்கிளி இன்னும் பல நிறங்களோடு அழகா இருக்கு. மயிலுக்குத் தோகை எவ்வளவு அழகா இருக்கு? அன்னம் வெள்ளை வெளேர்னு இருக்கறது எவ்வளவு நல்லா இருக்கு? நாம மட்டும் இவ்வளவு கறுப்பாவே இருக்கோமே’ அப்படின்னு நெனைச்சு ரொம்ப வருத்தப் பட்டுச்சாம். அதோட அம்மா, அப்பா அதுக்கு எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்களாம். அது கேக்கவே இல்லையாம். ஒரு நாளைக்கு,
“அம்மா, நான் போயிக் கடவுளைப் பாத்து என்னோட நெறத்தை மாத்த சொல்லிக் கேக்கப் போறேன். கடவுள் எங்கே இருக்காரு?” ன்னு கேட்டதாம்.
அதோட அம்மாவும், “அவரு ஆகாசத்தில ரொம்ப உசரத்தில இருக்காரு. அங்கே போக ரொம்ப நாளாகும். நீ களைச்சுப் போயிடுவ” அப்படின்னு சொல்லிச்சாம். அந்தக் குட்டிக் காக்கா அம்மா பேச்சைக் கேக்காமப் பிடிவாதமாக் கெளம்பிடுச்சாம்.
பறந்து ரொம்ப தூரம் போனதும் ஒரு கிளி அதோட நட்பாயிடுச்சாம். அப்புறம் ஒரு சின்ன மயிலும் வந்து அவங்களோட சேந்துக்கிச்சாம். இந்தக் காக்கா மயில் அப்புறம் கிளி கிட்ட,
“நீங்க ரெண்டு பேரும் எங்கே போறீங்க?” ன்னு கேட்டதும், இரண்டுமே,
“நாங்களும் உன்னை மாதிரியே கடவுளைப் பாக்கத் தான் போறோம்” ன்னு சொன்னதைக் கேட்டதும் காக்காய்க்கு பயங்கர ஆச்சர்யம்.
“நீங்க எதுக்குப் போறீங்க?” ன்னு உடனே கேட்டுருச்சாம். முதலில் கிளி பதில் சொல்லிச்சாம்.
“என்னோட பச்சை நிறம் எனக்குப் பிடிக்கவேயில்லை. எங்களோட நிறத்தால மனுஷங்க கண்ணில எளிதாப் பட்டுடறோம். எங்க இனத்தைப் பிடிச்சுக் கூண்டில அடைக்கறாங்க. பேசச் சொல்லி எங்களைத் துன்புறுத்தறாங்க. மத்த பறவைங்க மாதிரி நானும் கறுப்பா இருந்தா நானும் சுதந்திரமா எப்பயும் திரியலாம் இல்லையா? அதுனால என்னையும் கறுப்பா மாத்தச் சொல்லிக் கடவுளைக் கேக்கப் போறேன்” ன்னு சொன்னதாம்.
அடுத்து மயில், “என்னோட தோகையைப் பறிச்சுடறாங்க. அப்புறம் தோகை ரொம்ப கனமா இருக்கறதால என்னால உங்களை மாதிரி அதிக உயரம் பறக்க முடியதில்லை. யாராவது என்னைப் பிடிக்க வந்தா உங்களை மாதிரி ஒளிஞ்சுக்க முடியலை. அதுனால என்னோட உருவத்தையும் சின்னதாக்கி நிறத்தையும் கறுப்பாக்கச் சொல்லிக் கடவுள் கிட்டக் கேக்கப் போறேன்” ன்னு சொல்லிச்சாம்.
காக்காய் சத்தமாச் சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு. தான் எதுக்காகக் கடவுளைப் பாக்க நினைச்சதோ அதையும் அவங்க கிட்ட சொல்லிச்சாம். மனக்குறையைப் பகிர்ந்து கொண்டதும் மூணு பறவைங்களுக்கும் தங்களோட எண்ணம் தவறுன்னு புரிஞ்சுதாம்.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் நிறமும் தோற்றமும் ஆண்டவன் வேற வேற மாதிரி கொடுத்திருக்கறது நல்லதுக்குத் தான் எல்லாத்துக்குமே நல்லதொரு காரணம் இருக்கு. நம்ம கிட்ட இருக்கறதை வச்சு சந்தோஷம் தான் படணும். இல்லாததை நெனச்சு வருத்தப் படக் கூடாது.
ஒற்றுமைக்கும் கூடி வாழறதுக்கும் காக்காவைத் தானே உதாரணமாச் சொல்லுறாங்க. அதே போலக் கிளிக்குப் பச்சை நிறம் இருக்கறதுன்னால அதால இலைகளுக்கு நடுவில் எளிதா ஒளிஞ்சுக்க முடியும்.
மயிலோட அழகான நடனத்தை எவ்வளவு பேர் பாத்து ரசிக்கறாங்க? அதுவும் மழை பெய்வதற்கு முன்னால் ஆனந்தமாகத் தோகை விரித்து எத்தனை பறவைகளால ஆடமுடியும்? இது எல்லாமே அந்தந்தப் பறவை இனத்துக்குக் கிடைச்சிருக்கற நல்ல விஷயம். இதை நெனைச்சு நாம பெருமைப் படணும். வருத்தப்படக்கூடாதுன்னு அந்த மூணு பறவைகளுக்கும் புரிஞ்சு போனதால மூணும் அவங்கவங்க இடத்திற்குத் திரும்பிப் போய் அதுக்கப்புறம் சந்தோஷமா வாழ்ந்தாங்களாம்.
பாட்டி கருணாவிடம் கதையைச் சொல்லி முடித்தார். கருணா அதைக் கேட்டு நன்றாகப் புரிந்து கொண்டாள்.
இந்தக் கதையை அடுத்த நாள் கருணா தன்னுடைய வகுப்பில் கதை சொல்லும் நேரத்தில் சொல்ல, எல்லோருமே தங்களுடைய தவறைப் புரிந்து கொண்டு அனிதாவிடம் மன்னிப்பு கேட்டார்களாம். கொஞ்ச நாட்களில் அந்தக் காஷ்மீர் பொண்ணும் அனிதாவும் கருணாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டார்களாம்.
கதையும் முடிந்தது.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.