“எல்லோரும் எப்படியிருக்கீங்க? எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்து” என்று சொல்லியபடியே, சிட்டு பறந்து வந்து பூங்காவில் அமர்ந்தது.

அதற்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த கயல், முத்து, வினோத், கதிர் மற்றும் மலர் ஆகிய நால்வரும் பதிலுக்குப் புத்தாண்டு வாழ்த்து கூறினர்.

“சரி! நண்பர்களே!  இன்னிக்குச் சீக்கிரமாவே டைனோசர் கதையை ஆரம்பிக்கிறேன்.  இதுவரைக்கும், ரெண்டு காலால நடந்த, தெரோபோடு (THEROPODS) டைனோசர் வகை பத்திச் சொல்லிட்டேன். அதுங்க எல்லாமே இறைச்சி தின்ற வகைன்னு, நினைவு வைச்சிக்கோங்க.. இன்னிக்கு, நாலு காலால நடந்த, டைனோசர் வகை பத்திச் சொல்லப் போறேன்”

“ம்.சொல்லு, சொல்லு” என்று, சிறுவர்கள் எல்லோருமே, கதை கேட்கத் தயாராயினர்.

இந்த வகையோட பெயர் சாரோபோடு (SAUROPODS). நாலு காலால நடந்த  இந்த வகை டைனோசர், தாவரங்களை மட்டும் தான், தின்னும்; உருவத்துல ரொம்ப பெருசாயிருக்கும். இந்த வகையில, டிப்ளாடிக்கஸ் (DIPLODOCUS) பத்தி, ஏற்கெனவே சொல்லிட்டேன்.  அதைப் பத்தி, யாருக்காவது நினைவிருக்கான்னு, பார்ப்போம்.

“ம். எனக்கு இருக்கு” என்றான் முத்து.

“எங்க சொல்லு; சரியான்னு பார்க்கிறேன்”

“அதுக்குக் கழுத்து, ரொம்ப நீளமாயிருக்கும். மரத்தோட உச்சியிலேர்ந்து இலைகளைப் பறிச்சித் தின்னும்னு, நீ சொன்னே.  நான் ஒட்டகச் சிவிங்கி கழுத்து போல இருக்குமான்னு, கேட்டேன்.  அதை விட இன்னும் நீளம் அதிகமாயிருக்கும்னு, நீ அப்ப சொன்னே; சரியா சிட்டு?

“ஏ அப்பா! சரியான ஞாபக சக்தி ஒனக்கு!” என்று முத்துவைப் பாராட்டியது சிட்டு.

“இன்னிக்கு நான் சொல்லப் போறது, பிராக்கியோசரஸ் (BRACHIOSAURUS). இதுவும் பெரிய ஒட்டக சிவிங்கி மாதிரி தான், இருக்கும். கழுத்து ரொம்ப நீளமாவும், வால் குட்டையாவும் இருக்கும்.  மத்த டைனோசர் மாதிரி இல்லாம, இதுக்கு முன்னங்கால்,  பின்னங்காலை விட நீளமாயிருக்கும்”.

Brachiosaurus
படம் – 1  பிராக்கியோசரஸ் ((BRACHIOSAURUS).

“ரெண்டுமே ஒட்டக சிவிங்கி மாதிரி, இருக்கும்னு சொல்றே? அப்ப ரெண்டுக்கும், எப்பிடி வித்தியாசம் கண்டுபிடிக்கிறது?” என்று கேட்டாள் கயல்.

“நல்ல கேள்வி கயல்!  ரெண்டுமே, ஒட்டகசிவிங்கி மாதிரி இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு”. 

“ஒடம்பு அளவை பொறுத்தவரைக்கும், ரெண்டுமே, பெரிய டைனோசர் தான், அதுல சந்தேகமில்லை. டிப்ளாடிக்கஸோட அகலம், ரொம்ப அதிகம்; இதுவரைக்கும் கண்டுபிடிச்சிருக்கிற டைனோசர்ல, இதோட ஒடம்பு தான் ரொம்ப அகலமானது.  ஆனா பிராக்கியோசரஸ், இது மாதிரி அகலமாயில்லாம, உயரமாயிருக்கும்.. அது அகலம்னா, இது உயரம்!

டிப்ளாடிக்கஸ் ஒடம்பு எடை மாதிரி, பிராக்கியோசரஸுக்கு, ரெண்டு மடங்கு இருக்குமாம்.. அதுக்கு முன் கால், பின் காலை விட குட்டையாயிருக்கும். ஆனா பிராக்கியோசரஸோட முன்னங்கால் பின்னங்காலை விட உயரமாயிருக்கும்.  இந்த மாதிரி, சில வேறுபாடுகளை வைச்சித் தான் இந்த ரெண்டு வகையையும் பிரிக்கிறாங்க” என்றது சிட்டு.

“எனக்கொரு சந்தேகம் சிட்டு!” என்றான் கதிர், யோசனையுடன்.

“தயங்காமக் கேளு கதிர்.  சந்தேகம் கேட்டாத் தான், ஒங்களுக்கு எந்தளவு புரிஞ்சிருக்குன்னு என்னால தெரிஞ்சுக்க முடியும்” என்றது சிட்டு

“ஊனுண்ணி டைனோசரை விட,  தாவர உண்ணி டைனோசர் தான் எப்பவும், உருவத்துல ரொம்பப் பெருசா இருக்கு!  அது எப்படி சிட்டு? அதுக்கு ஏதாவது காரணமிருக்கா?” என்றான் கதிர்.

“நல்ல கேள்வி கதிர்!  டைனோசர் காலத்துல மட்டும், அப்பிடியில்ல; நம்ம காலத்துலேயும், இப்பிடித் தான் இருக்கு.  யாராவது யோசிச்சி, இதுக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்க பார்ப்போம்” என்றது சிட்டு.

“ஆமாம். நீ சொல்றது சரி தான் சிட்டு!. இலை, தழை திங்கிற யானை  உருவத்துல ரொம்பப் பெரிசாயிருக்கு..  ஆனா மாமிசம் திங்கிற சிங்கம், புலி யானையை விடச் சின்னதாயிருக்கு!”. என்றான் பாபு.

LionAndElephant
படம் 2 –  சிங்கம் & யானை

“வெரி குட், அப்புறம்? வேற ஏதாவது?” என்றது சிட்டு.

“காண்டாமிருகமும் தாவர உண்ணி தானே?” வினோத் கேட்டான்.

“ரொம்ப சரி! இன்னொன்னு?”

நீர் யானையா? என்றான் முத்து, சிறிது நேர யோசனைக்குப் பின்.

“ஆமாம்.  அதனால டைனோசர் காலத்துலேர்ந்து, இப்ப வரைக்கும் நிலத்துல வாழுற உயிரினங்கள்ல, தாவர உண்ணி தான், எப்பவுமே ஊன் உண்ணி விலங்கை விட உருவத்துல பெருசா இருக்கு!” என்றது சிட்டு.

“நீ சொல்றதைப் பார்த்தா, நிலத்துல மட்டும் தான், இப்பிடி இருக்குதா?  தண்ணியில இப்பிடியில்லையா?”  என்றாள் கயல்  

“ஆமாம். அண்டார்டிகாவில தண்ணியில வாழுற நீலத் திமிங்கலம் தான், இன்னிக்கு ஒலகத்துல எல்லாத்தையும் விட, பிரும்மாண்டமான விலங்கு.  இதோட ஒடம்பு எடை, எவ்ளோ இருக்கும் தெரியுமா?

“என்ன? ரெண்டு யானையோட எடை இருக்குமா?” என்றாள் மலர்.

“ஏறக்குறைய 33 யானையோட எடையைச் சேர்த்தா, எவ்ளோ இருக்குமோ, அவ்வளவு இருக்குமாம்! அப்படீன்னா, எவ்ளோ பெரிசுன்னு பார்த்துக்கோங்க!”

“ஏ அப்பா!  33 யானையா?” என்றனர், எல்லாக் குழந்தைகளும், ஒரே சமயத்தில்.

“சரி. இப்ப கதிரோட கேள்விக்கு வரேன்.  ஊனுண்ணியை விட தாவர உண்ணி பெருசா இருக்கிறதுக்கு ஏதாவது காரணம் இருக்கான்னு கதிர் கேட்டான்.

சைவமா இருக்குற விலங்குகளுக்குச் செடி, கொடி, தழைன்னு திங்கறதுக்கு, எக்கச்சக்கமாக் கெடைக்குது. எப்பப் பார்த்தாலும் அதிகப்படியாத் தின்னுக்கிட்டே இருக்குறதால, ஒடம்பு ஊதிப் பெருசாயிடுது.  அதனால  வேட்டையாடுற விலங்குகளுக்கிட்டேர்ந்து, தங்களைப் பாதுகாத்துக்கவும் முடியுது.  ஆனா ஊனுண்ணிகளுக்கு, அந்தளவு தீனி கிடைக்காது. அதுங்க ஒவ்வொரு முறையும் வேட்டையாடித் தான், திங்க முடியும். மேலும் ஒடம்பு ரொம்ப  பெருசாயிட்டா, அதுங்களால மத்த விலங்குகளைத் துரத்தி, வேட்டையாட முடியாது”.

“ஓ! இப்ப புரியுது” என்றான் கதிர்.

“சரி, நேரமாயிட்டுது. மத்த விஷயங்களை, அடுத்த மாசம் சொல்றேன். டாட்டா பை பை! சீ யூ!” என்று சொன்னபடி பறக்கத் துவங்கியது சிட்டு.

சிட்டுவிற்கு டாட்டா காட்டியபடியே, குழந்தைகளும் வீட்டுக்குக் கிளம்பினர்.

சரி! குழந்தைகளே! ஒங்களுக்குச் சிட்டு சொல்ற டைனோசர் கதை பிடிச்சிருக்கா? டைனோசர் பத்தி, ஏதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க!  அடுத்த மாசம் சிட்டு, ஒங்க கேள்விக்குப் பதில் சொல்லும்.

ஒங்க கேள்வியை, அனுப்ப வேண்டிய முகவரி:-

feedback@poonchittu.com  

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments