The wind in the willows
இந்தக் கதை 1908ல் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. கென்னத் க்ரஹாம் என்ற ஓய்வுபெற்றவங்கி அதிகாரி இதை எழுதியுள்ளார். தன் மகன் சிறுவனாக இருக்கும் பொழுது அவனுக்குக் கூறிய சிறுகதைகளைச் சற்றுப் பெரிதாக்கி நாவல் வடிவத்தில் கிரஹாம் உருவாக்கியுள்ளார். பலமுறை பதிப்பிக்கப்பட்ட இந்த நூல், திரைப்படமாகவும் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்துள்ளது. இதன் பல பகுதிகள் சிறுகதைகளாகவும் நாடகங்களாகவும் இயற்றப்பட்டுள்ளன. நான்கு நண்பர்களின் உன்னதமான நட்பை பற்றிப் பேசுகிறது இந்தக் கதை. வித்யாசமான மிருகங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறது.
இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்:
Mole- மூஞ்சுறு
Water rat- நீர் எலி
Toad- தேரை
Badger- தேன் வளைக் கரடி
மற்றும் கீரிப்பிள்ளைகள், நீர் நாய் முதலிய விலங்குகள்.
1. ஆற்றில் ஒரு இனிய பயணம்
அன்றைய தினம் மூஞ்சுறு தன்னுடைய வளையை சுத்தம் செய்து, அழகுபடுத்தி அதிக வேலை செய்ததால் களைத்துப் போனது. அப்பொழுதுதான் தொடங்கியிருந்த வசந்த காலத்தை வெளியில் சென்று அனுபவிக்கலாம், இனிமையான காற்றையும் மரம் செடி கொடிகளையும் ரசிக்கலாம் என்று தன் வளையை விட்டு வெளியே வந்தது.
தன் மனம் போன போக்கில் நடந்ததில் ஒரு ஆற்றை சென்றடைந்தது. இதுவரை ஆறுகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் முதன்முறையாக இப்போதுதான் ஒரு ஆற்றினைப் பார்க்கிறது அந்த மூஞ்சுறு.
ஆறு ஓடுவதையும் ஆற்றின் கரைகளில் இருக்கும் மரம் செடி கொடிகளையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஆற்றின் எதிர்க்கரையில் சிறிய ஓட்டையில் இருந்து ஒரு எலி வெளிவந்தது. அதை பார்த்தவுடன் மூஞ்சுறு நட்பாகப் புன்னகைக்க, ‘இங்கே வாயேன்’ என்று கையசைத்து மூஞ்சூறுவைக் கூப்பிட்டது எலி.
“எனக்கு நீந்தத் தெரியாது” என்று மூஞ்சூறு சத்தமாக பதிலளிக்க, “இரு வரேன்!” என்றபடி அங்கு கட்டிவைத்திருந்த தன்னுடைய அழகான சிறிய படகை இழுத்து நீரில் விட்டது எலி. பின் அந்தப் படகில் ஏறி இக்கரைக்கு வந்த எலி, மூஞ்சுறுவையும் தன்னுடன் படகில் ஏற்றிக் கொண்டது.
“இப்போதான் நான் முதல் தடவையாக ஆற்றைப் பார்க்கிறேன். படகையும் கூட..” என்று மூஞ்சுறு கூற,
“வா அப்படியே ஒரு உலா போகலாம்.. நான் சும்மா இருக்கிற நேரமெல்லாம் இப்படி படகை ஓட்டிக்கிட்டே போவேன்.. ரொம்ப நல்லா இருக்கும்” என்றது எலி. போகும் வழியில் இருந்த காட்சிகளை எல்லாம் காட்டி விளக்கிக் கொண்டே வந்தது எலி.
“நீதான் நான் எனக்கு இதுவரை கிடைத்ததிலேயே ரொம்ப நல்ல நண்பன்” என்று மூஞ்சுறு எலியைக் கட்டிப் பிடித்துக் கொண்டது.
அப்போது ஆறு ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி வழியாகப் போக, “இது என்ன?” என்று கேட்டது மூஞ்சுறு.
“இது அடர்ந்த காடு. அங்கே நாங்க பொதுவா போறதில்ல.. கீரிப்பிள்ளைகள் எல்லாம் நிறைய இருக்குது அங்க. அதெல்லாம் நம்மளோட எதிரிகள். அணில்கள், முயல்கள்களும் கூட நிறைய இருக்கு.. ஆனா அதெல்லாம் ரொம்ப நல்ல மிருகங்கள். அவங்களால நமக்கு எந்த பாதிப்புமில்லை” என்று எலி கூற, மூஞ்சுறு தலையாட்டிக் கொண்டே அதைக் கேட்டது. ஆற்றின் போக்கில் செல்லும் அந்தப் பயணம் மூஞ்சுறுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அமைதியாகச் சென்று கொண்டிருந்த படகுப் பயணத்தில் திடீரென்று மூஞ்சுறுவுக்குத் தானும் படகை ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது.
“அந்தத் துடுப்பை என்கிட்டத் தாயேன்.. நான் ஓட்டிப் பார்க்கிறேன்” என்று அது கேட்க, “இல்லல்ல.. இந்தப் பக்கம் ஆற்றோட ஓட்டம் அதிகமாக இருக்கும். உனக்கு நான் கொஞ்சம் கொஞ்சமாப் படகோட்டக் கத்துத் தரேன்” என்றது எலி.
ஆனால் ஆர்வம் தாங்க முடியாத மூஞ்சுறு, “பரவாயில்லை! நான் ஓட்டிப் பார்க்கிறேன்” என்று பிடிவாதமாக எலியின் கையிலிருந்து துடுப்பைப் பறித்துப் படகைச் செலுத்த முயன்றது. வேகமாக அது செய்த செயலால் படகு ஒரு பக்கமாகக் கவிழ்ந்தது. மூஞ்சுறுவுக்கு நீச்சல் தெரியாததால் அது சற்றுத் திணறவே எலி வேகமாக நீந்தி மூஞ்சுறுவை இழுத்து மீண்டும் படகில் போட்டது.
“ஒரு ஆர்வத்தில் செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கோ” என்று மூஞ்சுறு கூற, “பரவாயில்லை. பொறுமையா உனக்கு படகு ஓட்ட கத்துத் தரேன்” என்று அதனை சமாதானப் படுத்தியது எலி. “நிஜமாவே நீ ரொம்ப நல்ல நண்பன் தான்” என்று மூஞ்சுறு மனதாரக் கூறியது.
அப்போது ஒரு நீர்நாய் ஆற்றுக்குள் இருந்து தலையை வெளியே விட்டு அவ்வப்போது பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக் கொண்டு மீண்டும் தலையை உள்ளே விட்டவாறு இருந்தது. எலி அதைப் பார்த்து கையசைக்க, “இது யாரு புது நண்பனா?” என்று கேட்டது நீர்நாய்.
“ஆமா! இவன் மூஞ்சுறு. எனக்கு நல்ல நண்பனாயிட்டான்” என்று எலி பதில் கூறியது.
“இன்னைக்கு நிறைய பேர் ஆற்றுக்கு சுற்றுலா வந்துருக்கீங்க போல தெரியுதே?” என்று நீர்நாய் கேட்க,
“வேறு யார் வந்துருக்கா?” என்று எலி கேட்டது.
“நம்ம தேரையார் புதுப் படகில் வந்திருக்கார்” என்று ஒரு சிரிப்புடன் கூறியது நீர்நாய்.
“ஐயோ! அவனா? படகிலயா?” என்று என்ன எலி கேட்க,
“ஏன்? தேரைக்கு என்ன? ஏன் அதிர்ச்சியாகவும்?” என்று கேட்டது மூஞ்சுறு.
“அந்தத் தேரை நல்ல வசதியானாவன். அவனுக்கு ஒரு அழகான வீடு இருக்கு. ஆனால் புதுசு புதுசா நிறைய விஷயங்கள் மேல ஆசைப்படுவான். ஒரு விஷயத்துல தீவிரமா இறங்கியிருக்கையிலேயே அதை விட்டுட்டு வேற விஷயத்துக்கு போயிடுவான். இப்ப படகு ஓட்டுறதை தேர்ந்தெடுத்து இருக்கான் போல..” என்று விளக்கமாக கூறியது எலி.
அவர்கள் பேசி முடிக்கவும் அந்தத் தேரை இவர்கள் பக்கமாகப் படகில் வரவும் சரியாக இருந்தது. நல்ல உடைகள் அணிந்து பளபளப்பான புது படகை ஓட்டி வந்தது அந்தத் தேரை.
“வணக்கம்! வாங்க நண்பர்களே! என்னோட வீட்டுக்கு ஒரு நாள் விருந்துக்குப் போகலாம்” என்று நண்பர்கள் இருவரையும் தேரை அழைத்தது.
-தொடரும்
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.