முன்னொரு காலத்தில் கந்தன் தாத்தா என்பவர்  காட்டுப் பகுதிக்கு அருகே குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். காட்டில் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் சந்தையிலிருந்து வாங்கி வந்த திராட்சைப் பழத்தை உண்டுவிட்டு, அதன் விதையை தன் தோட்டத்தில் போட்டார் கந்தன்.

சிறிது நாட்களில் தாத்தா போட்ட விதைகள் அனைத்தும் முளைத்து, திராட்சைக் கொடி வளர்ந்து, சுவையான திராட்சைப் பழங்கள் காய்த்துத் தொங்கத் தொடங்கின. திராட்சைப் பழங்கள் ஒவ்வொன்றும் பச்சைக் கிளி போல் பச்சையாகவும், கோலிகுண்டு போல் உருண்டையாகவும், கற்கண்டு போல் இனிப்பாகவும் இருந்தது.

திராட்சைப் பழங்களைப் பறித்து, சந்தைக்குக் கொண்டு போய் விற்க நினைத்திருந்த தாத்தா கால் இடறி கீழே விழ, வலது கால் சுளுக்கிக் கொண்டது.

“அய்யோ! இந்த திராட்சை எல்லாம் இப்ப எப்படி கொண்டு போய் சந்தையில விப்பேன். எனக்கு கால் சரியாகறத்துக்குள்ள திராட்சை எல்லாம் வீணாப் போயிடுமே” என்ற பெரும் கவலை அவரை ஆட்டிப் படைத்தது.

அன்றைய தினம் இரவு நேரத்தில், காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த குள்ள நரி ஒன்று, தாத்தாவின் தோட்டத்தை எட்டிப் பார்த்தது. கண் முன்னே கொத்து கொத்தாகக் காய்த்துத் தொங்கிய பச்சை நிற திராட்சை பழங்களைப் பார்த்தும் நரிக்கு எச்சில் ஊறியது.

maathiyosi

“ஆஹா! திராட்சைப் பழத்தை பார்க்கவே அருமை இருக்கே, அதை சாப்பிட்டா எப்படி இருக்கும்!” என்று நினைத்த நரி திராட்சை பழத்தைப் பறிக்க எம்பி எம்பி குதித்தது. ஆனால் பாவம் குள்ள நரிக்கு திராட்சைக் கொத்து எட்டவேயில்லை.

தன்னால் முடிந்த மட்டும் குதித்து குதித்துப் பார்த்த நரிக்கு திராட்சை பழம் கிட்டவில்லை.

“சே! இந்த பழம் புளிக்கும்” என்று நினைத்துத் திரும்பிப் போக நினைத்த நரியின் முன் பெரிய கழியோடு வந்து நின்றார் தாத்தா.

“தாத்தா! நான் திராட்சையை சும்மா பார்க்கத்தான் வந்தேன், என்னை அடிக்காதீங்க!” என்று பயந்து போய் சொன்ன நரிக்கு ஒரு சிறு மரக் கட்டையைத் தந்தார்.

“குள்ள நரியே! இந்த கட்டையில ஏறுனா திராட்சைப் பழத்தை எளிதாய் பறிக்கலாம்.  உனக்கு வேணுங்கற அளவு திராட்சைப் பழத்தை சாப்பிட்டுக்கலாம் ஆனா ஒரே ஒரு விதிமுறை இருக்கு!” என்ற தாத்தாவையே ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தது நரி.

“விதிமுறை என்னன்னா, என் தோட்டத்து திராட்சையோட சுவையைப் பத்தி நீ காடு முழுக்க உள்ள விலங்குகள் கிட்ட போய் சொல்லணும், அந்த விலங்குகள் பக்கத்து கிராமத்துல உள்ள மனுஷங்ககிட்ட சொல்றா மாதிரி நீ பாத்துக்கணும்” என்றார் தாத்தா.

சிறிது நேரம் யோசித்த நரி, “சரி தாத்தா நான் போய் என்ன சொல்லணும்” என்றது.

“காட்டுப் பக்கத்துல இருக்குற கந்தன் தாத்தா வீட்டு திராட்சை மாதிரி சுவையான திராட்சை இந்த ஊர் உலகத்துலேயே இல்லன்னு நீ சொல்லணும், சரியா” என்று கம்பை ஆட்டிக்கொண்டே கேட்டார் கந்தன்.

“ம்ம் சரி தாத்தா, எனக்கு இப்ப ஒரு கிண்ணம் நிறைய திராட்சை குடுங்க நான் சாப்பிட்டுட்டு, நாளைக்கு காலையிலே போய் காட்டுக்குள்ள முழக்கம் போடுறேன்” என்றது தந்திரக்கார குள்ள நரி.

“அது முடியாது தந்திரக்கார நண்பனே! நீ முதல்ல காட்டுல போய் முழக்கம் போட்டுட்டு வா, அதுக்கு அப்புறம் நான் உனக்குக் கிண்ணம் நிறைய திராட்சை பழங்கள் தரேன்” என்றார் கந்தன் தாத்தா.

குண்டு குண்டு திராட்சையின் மேல் உள்ள ஆசையில் நரியும் அந்த தீர்மானத்திற்கு ஒப்புக் கொண்டது.

அடுத்த நாள் காடு முழுவதும், தாத்தா சொன்னது போல் முழக்கம் போட்டது. நரியின் முழக்கத்தை சில மிருகங்கள் ஆச்சரியத்தோடும், சில மிருகங்கள் கேலியோடும் பார்த்தன. நரியின் முழக்கம் ஒரு பச்சைக் கிளியைக் கவர, அது கிராமத்தில் உள்ள தன் நண்பனான மற்றொரு கிளியிடம் சென்று இந்த செய்தியைச் சொன்னது.

கிராமத்துக் கிளி நாயிடம் சொல்ல, நாய் பூனையிடம் சொல்ல, பூனை பச மாட்டிடம் சொன்னது. பசு மாடு பால்க்காரரிடம் சொல்ல, அந்த செய்தி கிராமம் முழுவதும் தீயாய்ப் பரவியது. தாத்தாவின் தோட்டத்து திராட்சையைப் பற்றிய செய்தி இறுதியில் பண்ணையாரை அடைந்தது.

அவர் தன் ஆட்களை அனுப்பி தாத்தாவின் தோட்டத்து திராட்சை அனைத்தையும் விலைக்கு வாங்கி வருமாறு பணித்தார்.

பண்ணையாரின் ஆட்களும் அவர் சொன்னது போல் தாத்தாவின் வீட்டிற்குச் சென்றனர்.

“தாத்தா! நாங்க பண்ணையாரோட ஆளுங்க தாத்தா. உங்க தோட்டத்து திராட்சை ரொம்ப அற்புதமா இருக்குதாமே கிராமம் முழுக்க இது தான் பேச்சா இருக்கு. அதான் அதை சோதிச்சுப் பார்த்துட்டு, எல்லா திராட்சையையும் வாங்கிட்டு வரச் சொன்னாரு பண்ணையார்” என்றான் பணியாள்.

தாத்தா கொடுத்த திராட்சையை சாப்பிட்டதும் அந்தச் செய்தி உண்மை தான் என்று பணியாட்களுக்குப் புரிந்தது. உடனே அனைத்து திராட்சைகளையும் பறித்துக் கொண்டவர்கள் அதற்குப் பதிலாக நிறைய காசும் கொடுத்துவிட்டு சென்றனர்.

தாத்தா தன் தந்திரக்கார நண்பனுக்காக இரண்டு கிண்ணம் நிறைய திராட்சையை எடுத்து வைத்து, அன்றிரவு வந்த நரியிடம் தந்தார்.

“ஐ! ரெண்டு கிண்ணம் நிறைய திராட்சை எனக்கே எனக்கா! ஒரு கிண்ணம் தானே சொன்னீங்க, இப்ப ரெண்டு கிண்ணம் தந்துருக்கீங்க!” என்று ஆச்சரியப்பட்டது குள்ள நரி.

“ஒரு கிண்ணம் உன்னோட உதவிக்காக இன்னொரு கிண்ணம் என்னோட மன மகிழ்ச்சிக்காக” என்று சொல்லி சிரித்தார் தாத்தா கந்தன்.

“ஆஹா! ஆஹா! இனிப்பான திராட்சைகள்” என அனைத்து திராட்சைப் பழங்களையும் ஆசையுடன் விழுங்கியது நரி.

கதையின் நீதி : தக்க சமயத்தில் செய்யும் உதவி தகுந்த சன்மானத்தை ஈட்டித் தரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments