ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தினம்.

சிறு குழந்தையிலிருந்தே தேசியக் கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும்  ஞாபகம் வருவது “கொடி காத்த குமரன்” என்ற பெயரைத் தான்!

ஆம், சாகும் தறுவாயிலும் நமது தேசியக் கொடியைத் தரையில் விழாமல் தாங்கிப் பிடித்தவர் அல்லவா!  இன்று அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

kumaran

திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர்  4, 1904 அன்று  பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னி மலையில் நாச்சிமுத்து – கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே  குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆதலால் கைத்தறி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார்.

1923ஆம் ஆண்டு தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். கைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கப்பெறாததால் ஈங்கூர் என்னும் ஊரில் கந்தசாமி கவுண்டர் நடத்திய பஞ்சு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

பிறகு காந்திய சிந்தனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட குமரன், தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார்.

1932 ஆம் ஆண்டு காந்தியைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.

இந்த கட்டுப்பாட்டுகளை எல்லாம் மீறி 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.

ஊர்வலம் காவல் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த காவலர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களைத் தடியடியுடன் சரமாரியாகத் தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.

திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டுக் கொட்டியது. ஆனாலும்

உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. காவலர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேயில்லை.

கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது.  படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதாவது ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரனாகவும் இருந்த குமரன், “கொடி காத்த குமரன்” என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய அரசு இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு அக்டோபரில் அவரின் நினைவாகத் தபால் தலையை வெளியிடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments