உலக பார்வையற்றோர் தினம் அல்லது பிரெய்லி தினம் ஜனவரி 4-ந்தேதி கடைப்பிடிக்கப் படுகிறது. பார்வையற்றவர்களும் தகவல் தொடர்பு கொள்ள வசதியாக அவர்களுக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்லி.

லூயிஸ் பிரெய்லி 1809-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிரான்சில் பிறந்தார். பார்வையற்றவர்களின் வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த அவரது எழுத்து முறையே அவரது பிறந்த தினத்தை உலக பார்வையற்றோர் தினமாகக் கொண்டாடப்பட முக்கிய காரணமாகும்.

பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள கூப்வெரி கிராமத்தில் (1809) பிறந்தவர். தந்தை குதிரை லாடம், சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். 3-வது குழந்தையான லூயி, தந்தையின் பணிமனையில் ஊசியை வைத்து விளையாடியபோது, கண்ணில் குத்திக் காயம் ஏற்பட்டது.

முறையான சிகிச்சை பெறாததால் அந்தக் கண் பார்வை பறிபோனது. கண் நோயால் இன்னொரு கண்ணிலும் பார்வை இழந்தார். தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் கேட்டு, தொட்டு, முகர்ந்து பார்த்து உணர்ந்து அவை பற்றி அறிந்து கொண்டார்.

பார்வையற்றோருக்கான உலகின் ஒரே பள்ளியான ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஃபார் பிளைண்ட் யூத்’ அமைப்பில் 10 வயதில் சேர்க்கப்பட்டார். அங்கு எழுத்துகளை விரலால் தொட்டு உணர்வதற்கு ஏற்ப அவற்றை மேடாக்கிப் புத்தகங்கள் தயாரித்து மாணவர்களுக்கு கல்வி புகட்டப்பட்டது.

அனைத்து எழுத்துகளும் மேடாக இருப்பதால், பெட்டிகள் போல புத்தகங்கள் தடிமனாக இருக்கும். மொழிகள், இலக்கணம், இசை, கணிதம், கைத்தொழில் பயிற்சி அனைத்தும் இந்த முறையிலேயே கற்பிக்கப்பட்டன. அப்பள்ளியில் படிப்பது, இசை கற்பது, கணக்குப் போட்டு பார்ப்பது, கைத்தொழில் கற்பது எனப் புதிய அனுபவங்களில் உற்சாகமாக மூழ்கினார்.

போர்க்களத்தில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக ‘நைட் ரைட்டிங்’ என்ற முறையை சார்லஸ் பார்பியர் என்ற ராணுவத் தளபதி உருவாக்கியிருந்தார். இதுபற்றி விளக்க அவர் இப்பள்ளிக்கு வந்தார். அவரது எழுத்து முறை 12 புள்ளிகளைக் கொண்டிருந்தது.

மாணவர்களுக்கு கற்றுத் தர இந்த முறை பின்பற்றப்பட்டது. ஏற்கெனவே இருந்த அளவுக்கு சிரமம் இல்லை என்றாலும், இதிலும் சற்று சிரமப்பட்டும் மெதுவாகவும் தான் படிக்க முடிந்தது. எனவே, இதற்கு மாற்றாக எளிதாகவும், வேகமாகவும் பயில ஒரு புதிய முறையை உருவாக்க உறுதியேற்றார் லூயி.

இரவும் பகலும் பாடுபட்டு ஆராய்ச்சியில் இறங்கினார். புள்ளிகளைப் பலவிதமாக மாற்றி மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து, புதிய குறியீட்டு மொழியை உருவாக்கினார். வெறும் ஆறே புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த மொழியில், பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம்.

இந்த அற்புதத்தை நிகழ்த்திய போது இவருக்கு 20 வயது கூட பூர்த்தியாகவில்லை. இவரது அற்புதமான இந்தக் கண்டுபிடிப்பை பாராட்டி, ஊக்கப்படுத்திய பள்ளியின் இயக்குநர், பள்ளியிலும் அதை அறிமுகம் செய்தார்.

பட்டப்படிப்பு முடித்த பிறகு, அதே பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 6 புள்ளிகள் கொண்ட பிரெய்ல் முறையின் முதல் புத்தகத்தை 1829-ல் வெளியிட்டார். இதே முறையைப் பயன்படுத்தி ‘ஹிஸ்டரி ஆஃப் பிரான்ஸ்’ என்ற நூலை இவரது பள்ளி நிர்வாகம் 1837-ல் வெளியிட்டது.

தொடர்ந்து அறிவியல், கணிதம் தொடர்பான பிரெய்ல் புத்தகங்களை வெளியிட்டார். தன் நண்பர் பியரியுடன் இணைந்து பிரெய்ல் தட்டச்சு இயந்திரத்தைத் தயாரித்தார். பார்வையற்றோர் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்த மேதை லூயி பிரெய்ல், காசநோயால் பாதிக்கப்பட்டு 1852 ஜனவரி 6-ம் தேதி மறைந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments