மலையடிவாரத்தில் இருந்த அந்த சிறிய கிராமத்தில் பத்ரி என்ற சிறுவன் வசித்து வந்தான். பயங்கரமாகக் குறும்பு செய்வான். ஆனால் சில சமயங்களில் இளகிய மனது கொண்டவனாக நடந்து கொள்வான். யாருக்காவது கஷ்டம் என்றால் உடனே ஓடிப்போய் உதவியும் செய்வான். வேண்டும் என்று விஷமம் எதுவும் செய்ய மாட்டான். ஆனால் அவன் செய்யும் குறும்புத்தனத்தின் விளைவு பயங்கரமாக இருந்தாலும் புரிந்து கொள்ள மாட்டான். பொறுப்புடன் நடந்து கொள்ள மாட்டான்.

அவன் செய்யும் குறும்புத்தனமான செயல்களால் சிலருக்கு சில சமயங்களில் கஷ்டம் ஏற்பட்டாலும் அவனை யாரும் அதிகம் கோபித்துக் கொள்வதில்லை. “அடிப்படையில் நல்லவன் தான்; ஏதோ புரியாமல் குறும்பு செய்கிறான்; ஒருநாள் தானாகவே புரிந்து கொள்வான் ” என்று சொல்லி மன்னித்து விடுவார்கள். அதனாலேயே அவனுக்கு, தான் செய்யும் தவறுகளின் தீவிரமோ, அதன் விளைவுகள் புரியவேயில்லை.

ஒருநாள் கீழே கிடந்த கற்களைப் பொறுக்கிக் கண்டபடி அங்குமிங்கும் எறிந்து கொண்டிருந்தான். அப்படி எறியும் போது

தவறுதலாக ஒரு கல், தேன்கூட்டில் பட்டுவிட்டது. தேன்கூடு கலைந்து எண்ணற்ற தேனீக்கள் பறக்கத் தொடங்கின. அந்த மரத்தடியில் எதுவுமறியாமல் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளை அந்தத் தேனீக்கள் கடிக்க ஆரம்பித்தன. வலியால் துடித்துக் கத்தினார்கள் அவர்கள்.

May Story 1
படம்: அப்புசிவா

பத்ரி எதிர்பாராமல் நடந்த இந்த செயலால் முதலில் வருத்தப்பட்டு பயந்து போய் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டான். இருந்தாலும் கண்டபடி கல் எறிவதை நிறுத்தவில்லை. இன்னொரு தடவை, பத்ரி எறிந்த கல் ஒரு பறவையின் கூட்டில் பட்டு அந்தக் கூடு பிய்ந்து போனது. கீழே விழுந்த அந்தக் கூட்டில் பறக்கத் தெரியாத சின்னக் குஞ்சுகள் நான்கைந்து இருந்தன. தாய்ப்பறவை மிகவும் மனம் வருந்தியது.

“பறக்கத் தெரியாத என் குஞ்சுகளை நான் எப்படி காப்பாத்தப் போறேனோ எனக்கே தெரியலை. கல்லை எறிஞ்சு எறிஞ்சு எல்லாரையும் துன்புறுத்தற இந்தப் பையனுக்கு ஏதாவது தண்டனை தந்தா நல்லா இருக்கும். அப்பத் தான் இவன் திருந்துவான். நான் படற மனக் கஷ்டம் இவனுக்கும் புரியணும்” என்று மனம் வருந்தி இறைவனை வேண்டியது.

அந்தப் பறவையின் குரல் ஆண்டவனின் செவிகளை எட்டி விட்டது போலத் தான் தெரிந்தது. கையில் கற்களை வைத்துக் கொண்டு திரிந்த பத்ரி திடீரென ஒரு கல்லாக மாறிப் போனான். பயந்து நடுங்கிப் போனான் பத்ரி.

“அச்சச்சோ, இப்படி ஆயிடுச்சே? நான் இனிமே கல்லாவே இருந்துடுவேனா? யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்” என்று கத்திப் பார்த்தான். அவனுடைய குரலே யாருக்கும் கேட்கவில்லை.

காட்டுக்குள் நடந்து கொண்டிருந்த மனிதர்கள் அவனைக் காலால் எத்தி எத்தி விட்டதில் அவன் கொஞ்ச கொஞ்சமாக நகர்ந்து மலை அடிவாரத்தை அடைந்து விட்டான். அங்கே இருந்த பெரிய பாறைகள் அவனைப் பார்த்து சிரித்தன.

“வா வா, இன்னைக்கு எங்களோட சேர வந்திருக்கும் புது வரவு நீ தானா?” என்று அந்தப் பாறைகள் பத்ரியை வரவேற்றன.

“உங்களுக்கெல்லாம் பேச வருமா? நீங்கள் எல்லோரும் என்னை மாதிரி மனுஷங்களா இருந்து மாறினீங்களா?” என்று பத்ரி ஆச்சரியத்துடன் கேட்டான்.

“மனுஷங்களா ஆமாம். பெரிய உருவம் கொண்ட மனுஷங்களா இருந்தோம். அதோ அங்கே தூரத்தில் தெரியுதா ஒரு சின்ன நதி, இந்த மலையைச் சுத்தி ஓடுதில்லையா? அந்த நதியோட எதுத்த பக்கத்தில் எங்களோட கிராமம் இருக்கு. நாங்க ஒரு பத்து பேர் சேந்து சுத்துவோம். நல்ல வளத்தியாப் பெரிய உருவங்களா இருந்ததுனால எங்களைப் பாத்து ஊரில மத்த பசங்க பயப்படுவாங்க.

அவங்க பயப்படறதைப் பாத்து எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். வேணும்னே ஏதாவது செஞ்சு சின்னப் பசங்களை அழ வைப்போம். அவங்க சாப்பிட வச்சிருக்கற தின்பண்டங்களைப் பிடுங்கித் தின்னுடுவோம்.

அப்புறம் நதியில் இருக்கற சின்ன மீன்கள் எல்லாத்தையும் பிடிச்சு நதிக்கரையில் போட்டு அந்த மீன் குஞ்சுகள் துடிக்கறதைப் பாத்துக் கை கொட்டி சிரிப்போம். வெள்ளரித் தோட்டத்தில் புகுந்து செடிகளை எல்லாம் மிதிச்சு உடைப்போம். வாழை மரங்களை ராத்திரியில் போய் வெட்டி சாய்ப்போம்.

இப்படியே இருந்தபோது ஒரு நாளைக்கு ஒரு பறவை மேல கவண் கல்லால அடிச்சு விழ வச்சோம். அதோட றெக்கை பிய்ஞ்சு போய்த் தரையில் விழுந்து துடிச்சுது. அதைத் தூக்கித் தண்ணிக்குள்ள போட்டு சிரிச்சோம்.

அப்போ அந்தத் தண்ணியில் தங்க நிறத்தில்  அன்னப் பறவை ஒண்ணு மிதந்து, நாங்க நின்னுக்கிட்டு இருந்த கரைப்பக்கம் வந்தது. ‘உங்களுக்கெல்லாம் மனசில கருணையோ இரக்கமோ இல்லையா? எல்லாரையும் துன்புறுத்தறீங்களே? கல் மனசா உங்களுக்கு?’ அப்படின்னு கேட்டுச்சு.

‘ஆமாம். கல் மனசு தான். இப்படியே தான் இருப்போம். உன்னோட வேலையைப் பாத்துட்டுப் போ. உனக்கென்ன வந்தது’ அப்படின்னு கேலியாப் பேசி அதைத் துரத்தி விட்டோம். போகும் போது அந்த அன்னம், ‘இனிமேல் மனசு மட்டுமில்லை. உங்க உடம்பும் கல்லா மாறட்டும்’னு சொல்லிட்டுப் போச்சு. அன்னைலேந்து இப்படியே பாறைகளா மாறி இங்கே கெடக்கறோம். தினம் யாராவது புதுசா வந்து எங்களோட சேரறாங்க” என்று ஒரு பாறை, தங்களது கதையைச் சொல்லி முடிக்க, பத்ரி பயந்து போனான்.

அப்படியே சில நாட்கள் கடந்தன. திரும்பவும் மனிதனாக மாற மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்தான் பத்ரி.

ஒரு நாள் மாலை நேரம், அந்த மலை அடிவாரத்தில் சில மனிதர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். “நாளை காலையில் அந்தக் கட்டிட கம்பெனிக்காரர்கள் இங்கே வந்து இங்கேயிருக்கும் பெரிய பாறைகளை வெடி வச்சுத் தகர்க்கப் போறாங்க. அவங்களோட புதுக் கட்டிடத்துக்கு நிறையக் கற்கள் தேவையா இருக்காம்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அங்கேயிருந்த பாறை மனிதர்களும், கற்களும் கலங்கிப் போனார்கள்.

“நாமும் ஒருநாள் மனுஷங்களா மாறிடுவோம்னு காத்துக்கிட்டு இருந்தோம். நாளைக்கே அந்த கம்பெனிக்காரங்க வந்து நம்மையெல்லாம் உடைச்சுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்திட்டாங்கன்னா நாம திரும்ப மனுஷங்களா மாறவே முடியாதோ? நம்ம வாழ்க்கை இப்படியே கற்களாகவே முடிஞ்சு போயிடுமோ?” என்று பாறைகளும், சின்னக் கற்களும் அழ ஆரம்பித்தன.

அந்த சமயத்தில் ஒரு சின்னக் குழந்தை அழும் குரல் கேட்டது. சற்றுத் தொலைவில் ஒரு சிறு குழந்தை, மூன்று, நான்கு வயது இருக்கலாம். அழுதுகொண்டே ஓடி வந்து கொண்டிருந்தது. அதன் தோளில் ஒரு கிளிக் குஞ்சு, பறக்கத் தெரியாத சிறிய குஞ்சு. ஒரு பெரிய காட்டுப் பூனை பின்னாலேயே அந்தக் குழந்தையைத் துரத்திக் கொண்டு வந்த காட்சி அவர்களுக்குத் தெரிந்தது.

உடனேயே அந்தக் கற்கள் உருண்டு உருண்டு ஓடி அந்தக் குழந்தையைச் சுற்றி அரணாக உருவாகிக் கொண்டன. சிறிய கற்கள் பூனையின் மேல் மோதி மோதி அதைத் தாக்கித் துரத்தி விட்டன. குழந்தையும், கிளியும் கற்களின் உதவியால் காட்டுப் பூனையிடமிருந்து தப்பித்தன. சிறிது நேரத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்த பெரியவர்கள் வந்து குழந்தையை அழைத்துப் போனார்கள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து, பூனை, கிளிக்குஞ்சைக் குறி வைத்ததையும், அந்தக் குழந்தை எப்படியாவது அந்தப் பறவையைக் காப்பாற்ற முயற்சி செய்ததையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

“சின்னக் குழந்தையா இருந்தாலும் மத்த உசுருங்க மேல எவ்வளவு கருணை காமிக்குது! நாம தான் புரியாமல் நிறையத் தப்பு செஞ்சிருக்கோம். இன்னுமொரு வாய்ப்பு கெடைச்சா இந்த மாதிரித் தப்பு எதுவும் செய்யாமல் ஒழுங்கா இருக்கலாம். அது கூட நமக்குக் கிடைக்காது போல இருக்கு” என்று அழ ஆரம்பித்தன. உடனே என்ன அதிசயம்! கற்களும் பாறைகளும் மீண்டும் சிறுவர்களாக மாறின.

அந்தச் சிறுவர்கள் அனைவரும் அவரவர் கிராமத்துக்கு சந்தோஷமாகத் திரும்பிப் போனார்கள்.

நிறைவு.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments