செல்லக்கண்ணு பத்து வயது சிறுவன்! அவனுக்கு திடீரென்று இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்று மிகவும் ஆசை ஏற்பட்டது.

அதுவும், அவர்கள் ஊர் பண்ணையார் மகன் வரதன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து கொண்டு கழுத்தில் புலிநகம் பதித்த தங்கச் சங்கிலியும் பெரிய சைஸ் தோசைக் கல்லைப் போல இரண்டு கண்களையும் மறைக்கும்படியாக குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு புடுபுடுவென்று பெரிய சத்தத்துடன் ஓட்டி வந்த புல்லட்டைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு இந்த ஆசை வந்துவிட்டது. அந்த வண்டியைப் பார்த்தாலே அவன் சொக்கிப் போவான்.

மற்றவர்கள் எல்லாம் அந்த புடுபுடு சத்தம் கேட்டதும் முகத்தைச் சுளித்தபடி தன் காதுகளைப் பொத்திக் கொண்டு நகரும் போது சிறுவனான செல்லக்கண்ணு மட்டும் ஏதோ இனிய இசையைக் கேட்டது போல ரசிப்பான்.

பள்ளிக்குச் செல்லும்போதும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் தன் கைகளை வண்டியின் ஹேண்டில் பாரை பிடிப்பது போல நீட்டிக் கொண்டு புடுபுடுவென்று தன் வாயால் சத்தம் செய்தபடியேதான் ஓடுவான்.

அதுவும் வரதனின் வண்டியைப் பார்த்து விட்டாலோ புடுபுடு சத்தம் கேட்டு விட்டாலோ அவன் குதூகலமடைவான்.

அவனுடைய அப்பா அவன் பிறக்கும் முன்பே இறந்து விட்டார். அதனால் உடன் பிறந்தவர்களும் கிடையாது. அவனும் அவனுடைய அம்மாவும் ஊரின் கடைசியில் இருக்கும் குடிசை வீடுகளில் ஒன்றில் வசித்தார்கள். அவனுடைய அம்மா நாலு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் மகனின் வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டாள். அவனுக்கு இதெல்லாம் புரியாத வயது. பசித்தால் சோறு. படுத்தால் தூக்கம். மற்ற நேரங்களில் விளையாட்டு என்றிருந்தான்.

ஒரு நாள் அவனுடைய அம்மா அண்ணாச்சி கடையிலிருந்து எதையோ வாங்கி வரச் சொல்லி அனுப்பினாள்.

அவனும் வண்டியோட்டுவது போல அபிநயம் பிடித்துக் கொண்டு கடைக்கு ஓடினான்.

அண்ணாச்சி கடை வாசலில் வரதனின் வண்டியைப் பார்த்துவிட்டு ஜெர்க்காகி நின்றான்.

அதை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை எழுந்தது.

மெதுவாக அதனருகே சென்று, வண்டியின் ஹேண்டில் பாரின் மேல் கையை வைத்து மென்மையாகத் தடவியவனை, “டேய்!” என்ற அதிகாரக் குரல் நிறுத்தியது.

செல்லக்கண்ணு அதிர்ந்து போய் கையை எடுத்து விட்டு திரும்பிப் பார்த்தான்.

அவனருகே கட்டையாய் பெரிய கரிய உருவத்துடன் வரதன் நின்றிருக்கக் கண்டு செல்லக்கண்ணு நடுங்கினான்.

“என்னடா பண்ற?” என்று அதட்டலாய்க் கேட்டுக் கொண்டே வண்டியில் லாவகமாய் ஏறிய வரதன், அவன் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு போயே விட்டான்.

Chellakannu

செல்லக்கண்ணுவுக்கு வரதன் தன்னை ஒன்றும் சொல்லவில்லையென்ற மகிழ்ச்சி ஒரு புறமும் அந்த வண்டியைத் தொட்டுப் பார்த்து விட்ட மகிழ்ச்சி மறுபுறமும் ஏற்பட்டு மனம் துள்ளாட்டம் போட்டது.

வண்டியைத் தொட்ட தன் கையில் பல முறை முத்தம் கொடுத்துக் கொண்டான். அன்று முழுதும் அவன் கை கழுவவே இல்லை!

அவனுடைய அம்மாவும் நண்பர்களும் அவனைக் கிண்டல் செய்து சிரித்தார்கள்.

ஆனால் அவன் அவர்களைப் பொருட்படுத்தவேயில்லை. ஒவ்வொரு நாளும் வரதனின் வண்டியில் ஒரு முறையாவது ஏறி அமர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் வளர்ந்து கொண்டே இருந்தது.

புடுபுடு சத்தம் எந்த மூலையிலிருந்து கேட்டாலும் அதனைக் காண தெருவுக்கு ஓடி வருவதை வழக்கமாக்கிக் கொண்டான்.

பள்ளியில் இருக்கும் போது கூட புல்லட் தரிசனம் செய்ய எப்படியாவது வகுப்பறையை விட்டு வெளியே ஓடி வந்து விடுவான்.

அவன் நடந்து யாரும் பார்த்ததில்லை. எப்போதும் புடுபுடுவென்று சத்தமிட்டுக் கொண்டு புல்லட் ஓட்டுவதைப் போல கற்பனை செய்து கொண்டு ஓடுவதுதான் அவன் பழக்கமாக இருந்தது. அதுவே அவனுடைய அடையாளமாகவும் ஆகியது.

ஒருநாள் பள்ளியில், அவனுடைய ஆசிரியர் சாக்பீஸ் எடுத்து வருமாறு அவனிடம் சொல்ல, அவனும் புடுபுடுவென்று சத்தமிட்டபடி தன் கற்பனை வண்டியை ஓட்டிக் கொண்டு பள்ளியின் ஆசிரியர்களின் அறைக்கு ஓடினான்.

அந்த நேரம் பார்த்து அவனுடைய பள்ளியில் திடீர் சோதனைக்காக மாநில கல்வித்துறையிலிருந்து அதிகாரிகள் வந்திருக்க, அவர்களில் ஒருவர் மீது நன்றாக மோதினான்.

அவர் பெரிய உருவத்துடன் இருந்தாலும் இப்படி ஒருவன் வந்து மோதுவான் என்று எதிர்பார்க்காதால் நிலை தடுமாறி விழுந்து விட்டார்.

அப்போதும் செல்லக்கண்ணு ஒழுங்காய் நிற்காமல் புல்லட் நிறுத்துவது போல நிறுத்தி அவரருகே சென்று அவர் எழுந்து கொள்ள உதவி செய்தான்.

அவர் அவனை முறைத்துக் கொண்டே எழுந்தார். தன் சட்டை பேன்டை தட்டிக் கொண்டே,

“டேய்! வகுப்பு நேரத்தில எங்கடா ஓடி வர?” என்று அதட்டலாகக் கேட்டார்.

“கணக்கு சார் சாக்பீஸ் எடுத்தார சொன்னார் சார்!” என்று துடுக்காக பதிலளித்தவன் அவருடைய பதிலுக்குக் காத்திராமல் மீண்டும் தன் வண்டியைக் கிளப்புவது போல புடுபுடுவென்று சத்தமிட்டபடி ஓடிப் போனான்.

அவனுடைய செய்கையைப் பார்த்தவரின் முகம் கடுமையாக மாறியது.

சிறிது நேரம் கழித்து அவனுடைய வகுப்பறைக்கு வந்த அந்த அதிகாரிகள் ஆசிரியரிடம் மாணவர்கள் பற்றி விசாரித்தனர்.

அப்போதுதான் செல்லக்கண்ணுவுக்கு வந்திருப்பவர்கள் கல்வித்துறை அதிகாரிகள் என்று தெரிந்தது. அவன் யார் மீது மோதினானோ அவர்தான் எல்லாரையும் விட பெரிய அதிகாரி என்பதும் புரிந்தது. அவர் இவனை ஒற்றை விரலால் சைகை செய்து தன்னருகே அழைத்தார்.

அவன் நடுங்கியபடி அவரருகே சென்றான்.

“ஒம் பேரென்ன?”

“செல்.. செல்லக்கண்ணு!”

“அப்பா என்ன பண்றாரு?”

“அ.. அப்பா இல்ல சார்.. அம்மா மட்டும்தான்.. வீட்டு வேலை செய்றாங்க சார்..” மெல்லிய குரலில் பதிலளித்தான்.

“ம்.. பள்ளிக்கூடத்தில இப்டிதான் கண்ணு மண்ணு தெரியாத மாதிரி ஓடுவியா?” அதட்டலாகக் கேட்டார்.

“ம்.. ம்ஹூம்.. சாரி சார்..” என்று அவன் தடுமாறியபடி சொல்ல, அதற்குள் அவனுடைய நண்பர்கள்,

“ஆமா சார்! அவன் நடக்கவே மாட்டான் சார்.. எங்க போனாலும் இப்டி கைய வச்சிகிட்டு புடுபுடுன்னு சத்தம் போட்டுகிட்டேதான் ஓடுவான் சார்..” என்று அவனைப் போலவே செய்து காட்டி அவனை வசமாகப் போட்டுக் கொடுத்தனர்.

“வா என் கூட!” என்று கோபமாக அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்.

“நல்லா வேணும்..” என்று சில மாணவர்களின் குரல் கேட்டது.

“சார்! சார்! வேணாம் சார்! சின்ன பையன்! ஏதோ விளையாட்டுக்கு.. செய்யப் போய்.” என்று அவனுடைய ஆசிரியர் பதறியபடி பின்னால் ஓடி வர முயல அவரை மற்ற அதிகாரிகள் தடுத்தனர்.

செல்லக்கண்ணு, “வேணாம் சார்! வுட்ருங்க சார்! இன்மே இப்டிலாம் பண்ண மாட்டேன் சார்!” என்று கதறியழ, அதைப் பொருட்படுத்தாத அவர் அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்றார்.

பள்ளியின் விளையாட்டுத் திடலுக்கு அவனை இழுத்துச் சென்றவர் அவனை கோபமாக முறைத்தார்.

“பள்ளிக்கூடத்தில இப்டிலாம் ஓடக் கூடாதுன்னு ஒனக்கு தெரியாதா?” என்று கடுகடுவென்ற குரலில் கேட்டார்.

அவன் அழுதான்.

“ம்.. பதில் சொல்லு..”

“இல்ல.. சார்.. எனுக்கு அந்த புடுபுடு வண்டின்னா ரொம்ப புடிக்கும்.. அதுல எப்டியாது ஒரு ரவுண்டு போகணும்னு ஆசை சார்.. அதான் சார்..” என்று அழுது கொண்டே கூறியவனை கூர்மையாகப் பார்த்தார்.

பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏறிக் கொண்டு அவனைப் பார்த்து,

“வண்டில ஏறு!” என்றார்.

அவனுக்கு குழப்பமாக இருந்தது.

“ஏறுடா!” என்று அதட்டினார்.

அவன் பயந்தபடி வண்டியில் ஏறி அவர் பின்னால் அமர்ந்து கொண்டான்.

அவர் வண்டியைக் கிளப்பிக் கொண்டு வேகமாக அந்த விளையாட்டுத் திடலை மூன்று முறை வலம் வந்தார்.

செல்லக்கண்ணுவுக்கு பயமும் மகிழ்ச்சியும் ஒரு சேர வந்தது.

மூன்று வேகமான சுற்றுகள் வந்தபின், அவனை இறக்கி விட்டு விட்டு,

“நல்லா படிக்கணும்! நல்லா படிச்சா நீயும் என்ன மாதிரியே பெரிய ஆஃபீசரா வரலாம்.. அப்றம் பைக் என்ன? சொந்தமா காரே வாங்கி ஓட்டலாம்.. சரியா?” என்று கட்டைக் குரலில் கூறினார்.

“ரொம்ப டேங்க்ஷ் சார்!” என்று அவன் சிரிக்க அவரும் அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்துக் கொண்டே வண்டியை ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவிட்டு அவனை வகுப்புக்கு திருப்பி அனுப்பினார்.

அழுது கொண்டே வந்த செல்லக்கண்ணு இப்போது சிரித்துக் கொண்டே வகுப்பறைக்குச் செல்ல அவனுடைய ஆசிரியரும் அவனைப் போட்டுக் கொடுத்த நண்பர்களும் ‘ஙே!’ என்று விழித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments