ஒரு மலைப்பகுதியில் இரண்டு முயல்கள் வாழ்ந்து வந்தன. ஒரு முயல் கேரட் தோட்டம் வைத்திருந்தது. அதனால் அதன் பெயரும் கேரட் முயல் என்றே ஆகி விட்டது. அதையும் செல்லமாக சுருக்கி கேட் என அழைக்க ஆரம்பித்து விட்டன மற்ற விலங்குகள்.

இன்னொரு முயல் பீட்ரூட் தோட்டம் வைத்திருந்தது. அதனால் அதனை காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் பீட் என அழைத்தன.

சிறு வயதில் கேட், பீட் இருவரும் நல்ல தோழிகளாக இருந்தன. எப்போதும் ஒன்றாகவே விளையாடுவார்கள். வளர வளர இருவருக்கும் வேலைகள் அதிகமாகின.

கேட் தன்னுடைய கேரட் தோட்டத்தையும், பீட் தன் பீட்ரூட் தோட்டத்தையும் கவனிக்க ஆரம்பித்தன. அதனால் அவைகளுக்கு சந்திக்க நேரமே கிடைக்கவில்லை.

கேட் எப்போதும் கேரட்டாக சாப்பிட்டு ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறி விட்டது. பீட் பீட்ரூட்டாக சாப்பிட்டு சாப்பிட்டு சிகப்பு நிறத்திற்கு மாறி விட்டிருந்தது.

raji
படம்: அப்புசிவா

கேரட்டாக சாப்பிட்டு சாப்பிட்டு வெறுத்துப் போன கேட்-டிற்கு வேறு எதாவது சாப்பிட வேண்டும் போல தோன்றியது.

அருகிலிருந்த பீட்-டின் தோட்டத்தில் இருந்து வந்த பீட்ரூட்டின் வாசனை அவ்வப்போது கேட்-டின் ஆவலை அதிகரித்தது.

தன் தோழியான பீட்-டிடம் பீட்ரூட் கேட்டால் கொடுக்கும் தான்.. ஆனாலும் இப்போது இருவருமே வளர்ந்து விட்டார்கள். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்தால் கூட நின்று நிதானமாக பேச முடியவில்லை. அதனால் பீட் தன்னுடைய நட்பை நியாபகம் வைத்திருக்குமா என்பதே தெரியவில்லை கேட் முயலுக்கு.

தான் கேட்டு பீட் முயல் பீட்ரூட் கொடுக்கவில்லை என்றால் வருத்தமாக இருக்குமே என யோசித்த கேட், பீட் முயலுக்குத் தெரியாமல் பீட்ரூட் தோட்டத்தில் இருந்து இரண்டு பீட்ரூட்களை இரகசியமாக திருடிக் கொண்டு வந்து விட்டது.

திருடுவது இது தான் முதல் முறை என்பதால் கேட்-டிற்கு மிகவும் நடுக்கமாக இருந்தது. தான் செய்வது தவறு என்பது புரிந்ததால் அதற்கு வியர்வை பெருக்கெடுத்தது. இதயம் ஏறுமாறாக துடித்தது.

இல்லை இல்லை நான் ஆசைக்கு ஒரே ஒரு நாள் தான் பீட்ரூட் எடுத்தேன். நாளை இதற்கு பதிலாக இரண்டு கேரட்டுகளை பீட்டின் தோட்டத்தில் வைத்து விடலாம் என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்ட கேட் ஆசை ஆசையாக பீட்ரூட்டை சாப்பிட்டது.

கேரட் மட்டுமே சாப்பிட்டு சாப்பிட்டு துவண்டு போயிருந்த நாக்கிற்கு அந்த பீட்ரூட்டின் சுவை மிகவும் பிடித்திருந்தது. சப்புக் கொட்டி இரண்டு பீட்ரூட்களையும் காலி செய்த கேட் முயல் நன்றாக அசந்து உறங்கி விட்டது.

மறுநாள் காலை கண் விழித்த கேட் தன் வளையில் இருந்த கண்ணாடியில் தனது உருவத்தைக் கண்டு திடுக்கிட்டது.

கேரட் மட்டுமே சாப்பிட்டு அச்சு அசல் கேரட் நிறத்தில் பளபளவென மின்னிய அதனை புசுபுசு சருமத்தில் ஆங்காங்கே மை தெளித்தாற்போல சிவப்புப் புள்ளிகள் வந்து விட்டிருந்தன.

பார்க்க மிகவும் அழகாக மாறி இருந்தாலும் தான் பீட்ரூட் திருடி சாப்பிட்டது காட்டில் எல்லா விலங்குகளுக்கும் தெரிந்து விடுமே என எண்ணி மிகவும் வருந்தியது கேட்.

தான் செய்த தவறின் அளவு அப்போதுதான் புரிந்தது. தனது தவறை சரிசெய்ய நேராக தன் தோழி பீட்டிடமே வழி கேட்கலாம் என தைரியமாக முடிவெடுத்த கேட், இரண்டு கூடைகள் நிறைய கேரட்டுகளுடன் பீட்டின் வளையை நோக்கி குதித்து ஓடியது.

கேட்-ஐப் போலவே பீட்ரூட் மட்டுமே சாப்பிட்டு வெறுப்பின் உச்சியில் இருந்த பீட், கேட்டை அன்போடு வரவேற்றது.

கேட்டின் உடலில் புதிதாகத் தோன்றிய சிவப்பு புள்ளிகளைப் பார்த்தாலும், அதை கவனிக்காதது போல நடந்து கொண்டது பீட்.

கேட், மிகத் தயக்கத்தோடு தான் திருடியதைக் கூறி பீட்-டிடம் மன்னிப்பு கேட்டது.

பீட் கேட்-ஐ இறுக கட்டிக் கொண்டது மிகவும் அன்பாக.

கேட்-டின் கூடையில் இருந்த கேரட்டுகளை எடுத்து கொறிக்க ஆரம்பித்தது பீட்.

பீட்டின் சிகப்பு நிற தேகத்தில் ஆரஞ்சுப் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. தங்களது புதிய தோற்றத்தோடு  கேட்-டும் பீட்-டும் ஒன்றாகவே மகிழ்வாக வேலைகளையும் பகிர்ந்து செய்து கொண்டன

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *