சிங்கம் ஒன்று காட்டில் மிகுந்த பசியுடன் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது.
அன்று ஒரு விலங்கும் அதன் கண்களில் தட்டுப் படவில்லை. நீண்ட நேரம் அலைந்து களைப்புற்ற சிங்கம் கண்ணெதிரே ஒரு குகையைக் கண்டது.
நிச்சயமாக இந்த குகையில் ஏதாவது விலங்கு வசித்துக் கொண்டிருக்கும்.
இப்போது பகல் நேரத்தில் அந்த விலங்கும் இரை தேடி வெளியே சென்றிருக்கும். நாம் சென்று இந்த குகையில் ஒளிந்து கொண்டால் அந்த விலங்கு திரும்பவும்
குகைக்கு வந்து சேர்ந்தவுடன் அதைத் தாக்கிக் கொன்று தனது பசியைத் தீர்த்துக்
கொள்ளலாம் என்று முடிவு செய்தது.
குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டது. விலங்கின் வருகைக்காகப் பசியுடன் காத்துக் கொண்டிருந்தது.
அந்த குகையில் உண்மையிலேயே ஒரு நரி வசித்து வந்தது. சிங்கம் நினைத்தது போலவே அது இரை தேடி வெளியே சென்றிருந்தது.
இரை தேடிக் கண்டுபிடித்து உண்ட பின்னர்
இளைப்பாற குகைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தது.
நரி மிகவும் புத்திசாலி.நல்ல விழிப்புணர்வும் கொண்டது. குகைக்கு அருகில் வந்த நரி சிங்கத்தின் காலடிச் சுவடுகளைப் பார்த்து விட்டது.
காலடிச் சுவடுகள் குகையை நோக்கிச் சென்றிருந்தன. வெளியே வரவில்லை.
நரிக்குப் புரிந்து விட்டது. சிங்கம் தன்னைக்
கொல்வதற்காக உள்ளே காத்துக் கொண்டிருந்தது என்பது நரிக்குப் புரிந்து விட்டது.
இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு தந்திரம் செய்தது.
“குகையே! குகையே! வணக்கம்! நான் வெளியே சென்று திரும்பி விட்டேன்.நீ நலமா?”
என்று உரத்த குரலில் கேட்டது.
நரி பேசியதைக் கேட்ட சிங்கம் முதலில்
அமைதி காத்தது.
நரி திரும்பவும் உரத்த குரலில் பேசியது.
“என்ன குகையே! பதில் சொல்ல மாட்டாயா? என் மீது கோபமா? சரி நீ என்னுடன் பேசாததால் நான் திரும்பப் போகிறேன்.”
நரியின் வார்த்தைகளைக் கேட்ட சிங்கம் நினைத்தது.
‘இந்த குகை நரியுடன் தினம் பேசும் போல
இருக்கிறது. இன்று குகை பதிலளிக்காததால் நரி திரும்பிச் சென்று விடும்.நரி திரும்பிச் சென்றால் நமக்கு இரை கிடைக்காமல் போய்விடும். அதனால் நாமே குகையைப் போல் பதில் அளித்து விடுவோம்’ என்று மனதிற்குள் முடிவு செய்தது. குரலை மாற்றிக் கொண்டு சத்தமாகப் பேசியது.
“நரியே திரும்பி வந்து விட்டாயா? நான் களைப்புடன் இருந்ததால் நீ சொன்னதை கவனிக்கவில்லை. இப்போது தான் காதில் விழுந்தது. உள்ளே வா. உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.”
சிங்கத்தின் குரலைக் கேட்டுத் தனது சந்தேகம் உறுதியாகி விட்டது என்று எண்ணிய நரி அங்கிருந்து நீண்ட தொலைவு சென்று சிங்கத்திடம் இருந்து தப்பித்தது.
மற்ற விலங்குகளுக்கும் குகையில் சிங்கம் ஒளிந்திருப்பதைச் சொல்லி எச்சரித்ததால் எந்த விலங்கும் குகைக்கருகில் செல்லவில்லை. பசியால்
வாடி பலஹீனமான சிங்கத்தாலும் இரை தேடி அலைய முடியவில்லை. குகையிலேயே பசியுடன் மடிந்தது. மற்ற விலங்குகள் சிங்கத்தின் பயமின்றி சந்தோஷமாக வாழ்ந்தன.
அறிவும் விழிப்புணர்வும் உயிரைக்
காக்கும்.
அறிவைப் பயன்படுத்தி யோசித்து முடிவெடுத்தால் பயனளிக்கும்.
கத்தியைத் தீட்டாதே மனிதா புத்தியைத்
தீட்டு!
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.