(ரஷ்ய சிறுகதை)

ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்

தமிழில்: அகிலாண்ட பாரதி

மார்ட்டின் என்ற ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ரஷ்யாவின் பனி படர்ந்த ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல குழந்தைகள் பிறந்தன. ஒரு மகனைத் தவிர அனைத்து குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்து போய்விட்டார்கள். மனைவியும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, தன் ஒரே மகனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். நல்ல இளைஞனாக அவன் வளர்ந்து வருகையில் அவனும் ஒரு கொடிய நோயால் உயிரிழந்தான்.

 இனி தான் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்? தன்னையும் கடவுள் அழைத்துக் கொள்ள மாட்டாரா என்று எண்ணி அவர் கலங்கி நின்றபோது துறவி ஒருவர், நம்மைப் படைத்த இறைவனுக்காக நாம் உயிர் வாழ வேண்டும் என்று எடுத்துக் கூறி, இறைப் புத்தகமான பைபிளை அவருக்குப் படிக்கக் கொடுத்தார். நாள் முழுவதும் செருப்பு தைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மார்ட்டின் மாலை ஆனதும் பைபிளைப் வாசித்துவிட்டே  உறங்குவார்.

அப்படி ஒரு நாள் இரவு இயேசுவின் போதனைகளைப் படித்துவிட்டு அவர் தூங்கும் பொழுது ஒரு குரல் கேட்டது. “நாளை நான் உன் வீட்டுக்கு வருவேன். உன்னை சந்திப்பேன்” என்றது அந்தக் குரல். அது கனவா நினைவா என்று பிரித்தரியாத முடியாத சூழ்நிலை. இருந்தும் அவரது உள்ளுணர்வு கடவுள் மறுநாள் அவரை சந்திக்க வருவார் என்று உணர்த்தியது. காலையில் தன் வழக்கமான இடத்தில் செருப்புத் தைக்க அமர்ந்தார். அவரது வீட்டில் இருந்து பார்த்தால் தெருவில் நடப்பவர்கள் எல்லாருடைய கால்களும் நன்றாகத் தெரியும். ஊரில் இருக்கும் அத்தனை நபர்களையும் அவர்களது செருப்புக் கால்களை வைத்தே அடையாளம் கண்டுபிடித்து விடுவார் மார்ட்டின்.

 அதனால் சாலையில் செல்லும் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே இருந்தார். மிகப் பழைய கிழிந்த காலணி அணிந்த ஒரு மனிதர் எதிரில் இருந்த வீட்டின் முன்புறம் பனிக்கட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அது யார் என்று மார்ட்டின் எட்டிப் பார்க்க, அந்தப் பெரியவர் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. பக்கத்து வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த ஏழை மனிதர் தான் அவர். தன் வேலையை நிறுத்திவிட்டு தெருவுக்குச் சென்ற மார்ட்டின், அவரை அழைத்து, “ஐயா! உள்ளே வாருங்கள். உங்கள் உடல் குளிரால் நடுங்குகிறது. என் வீட்டில் சூடாகத் தேநீர் இருக்கிறது. கொஞ்ச நேரம் வந்து கணப்புக்கு அருகில் இளைப்பாறி, தேநீர் அருந்திப் போகலாம்” என்று அழைத்தார்.

“மிக்க நன்றி! நீங்கள் ரொம்பவும் அன்பானவர். இந்தக் குளிரில் விரைத்து எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்தே போனேன்” என்று கூறிய அந்த நபரும் வீட்டிற்கு வந்தார். இரண்டு குவளை தேநீரை மார்ட்டின் அளித்து அவரை உபசரித்தார். வெகுவாக உடல் நிலை தேறிய நிலையில் அந்த முதியவர் நன்றி கூறிவிட்டுக் கிளம்பினார். மார்ட்டின் மீண்டும் தன் செருப்பு தைக்கும் பணியைத் தொடர்ந்து கொண்டே தெருவை கவனித்தார். இதுவரை பார்த்திராத ஒரு பெண்ணின் கால்கள் தெரிந்தன. மார்ட்டின் அது யார் என்று நிமிர்ந்து பார்க்க, கிழிந்த ஆடைகளுடன் பசியால் வாடும் ஒரு பெண் தன் குழந்தையை மார்புடன் அணைத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது.

 எங்கே செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அழைத்த மார்ட்டின் தன் உணவை அவளுடன் பகிர்ந்து, குளிருக்குப் போர்த்திக் கொள்ள தன்னுடைய பழைய ஆடைகள் சிலவற்றையும் கொடுத்தார். குழந்தைக்கும் கொஞ்சம் பால் இருந்தது. முதலில் வந்த முதியவரைப் போலவே அந்தப் பெண்ணும் மார்ட்டினுக்கு நன்றி கூறிவிட்டு விடைபெற, மார்ட்டின் ஏன் இன்னும் இயேசு தன் வீட்டிற்கு வரவில்லை என்று யோசித்தபடியே காத்திருந்தார்.

திடீரென தெருவில் ஒரு சிறுவனின் அலறல் சத்தம் கேட்டது. ஆப்பிள் விற்கும் பாட்டி ஒருவர் அவனது முடியைப் பிடித்துக் கொண்டு அடிப்பதும் தெரிந்தது. “அம்மா அவனை விடுங்கள்!” என்று விரைந்து சென்று அவரைத் தடுத்தார் மார்டின்.

“என் கூடையிலிருந்து ஆப்பிள் பழம் ஒன்றைத் திருடி விட்டான். நான் இந்தத் தள்ளாத வயதில் என் பேரக் குழந்தைகளுக்காக ஆப்பிள் விற்றுப் பிழைக்கிறேன். இப்படித் திருடி சாப்பிடுவது என்ன பழக்கம்?” என்று பாட்டி சிறுவனை மேலும் அடிக்க, “பாவம்! அவன் பசியில் தவறு செய்து விட்டான். எனக்காக அவனை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமானாலும் அந்த ஆப்பிளுக்கு பணம் செலுத்தி விடுகிறேன்” என்றார் மார்டின். மார்டினின் அன்பான பேச்சும் கனிவான குரலும் பாட்டியை யோசிக்க வைத்தன.

“இவனைப் போலத் தான் என் பேரன் பேத்திகளும். அவர்களுக்காகத்தான் உழைக்கிறேன்” என்று தன் குடும்பத்தைப் பற்றி வெகுநேரம் பேசினார். “சரி! அடுத்த தெருவுக்கு வியாபாரத்துக்குப் போகிறேன்” என்று அவர் எழுந்திருக்க, “பாட்டி! நான் உங்கள் கூடையைத் தூக்கி வருகிறேன்” என்று  ஆப்பிளைத் திருடிய சிறுவனும் உடன் சென்றான்.

மார்ட்டின் மூன்றாவது முறையாக, தன் வீட்டிற்குள் வந்து தன் செருப்பை தைக்கும் பணியைத் தொடர்ந்தார். ஒரு அழகான பூட்ஸ் அவரது கைவண்ணத்தில் தயாரானது. இரவு கவிழும் நேரம் வந்தது. கடவுள் வருவதாக தன்னிடம் சொன்னது கனவு தான் போலும் என்று நினைத்துக் கொண்டு மார்ட்டின் தன் பைபிளை எடுத்தார். அப்போது அவரது வீட்டின் மூலையில் ஏதோ அரவம் தென்பட்டது. ஒரு வெளிச்சம் எழ, அதன் நடுவே முதலில் பனிக்கட்டிகளை சுத்தம் செய்த அந்த பெரியவர் தோன்றினார். ஒரு புன்னகையை வீசிவிட்டு மறைந்து போனார். அதே இடத்தில் கிழிந்த ஆடைகள் அணிந்த ஏழைப் பெண்ணும் அவளது குழந்தையும் தோன்றி, ஒரு கணத்தில் அவர்களும் மறைந்து போக, அதன் பின் ஆப்பிள் விற்கும் பாட்டியும் அந்தப் பையனும் வந்து போனார்கள்.

 பைபிளில் மார்ட்டின் வாசித்துக் கொண்டிருந்த பக்கத்தில், “என் இத்தகைய சகோதரர்களில் ஒருவனுக்கு நீ செய்யும் உதவி சிறிதளவாய் இருப்பினும் அது எனக்கே செய்த மாதிரி தான்” என்ற வாசகங்கள் இருந்தன. மார்ட்டின் தன் வீட்டிற்கு பல வடிவங்களில் வந்தது கடவுள் தான் என்பதையும் தன் கடமையிலிருந்து தவறாமல் அவரை அன்போடு உபரிசரித்துத்தான் அனுப்பி இருக்கிறோம் என்றும் உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments