அதிகாலை நான்கு மணிக்கு சேவலின் கூவல் ராமுவின் தாத்தாவை எழுப்பிவிட்டது. படுக்கையிலிருந்து எழுந்த அவர் தனது தோட்டத்திற்கு செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். 5 மணிக்கு மீண்டுமொரு முறை சேவல் கூவியபோது ராமுவையும் தாத்தா எழுப்பி விட்டார்.
பாட்டியும் இவர்களுடன் வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். கௌரியும் கௌதமும் அவர்களது அலுவல் பணியின் காரணமாக வீட்டிலிருந்து லேப்டாப் மூலம் வேலை பார்க்க வேண்டுமென்று கூறி வர மறுத்து விட்டார்கள்.
இருள் மெல்ல அகன்று சூரியன் உதிப்பதற்கு முன்பே விடிந்த வெளிச்சத்தில் மூவருமாக அருகே இருக்கும் தோட்டத்திற்கு நடந்து சென்றார்கள். இரண்டு அடி மட்டுமே அகலம் இருந்த வயல் வரப்பின் நடுப்பகுதியில் மண்ணும் அதன் இருபுறமும் பசுமையான கோரைப் புற்கள் வளர்ந்தும் கண்ணுக்கு அழகாக இருந்தது.
தோட்டத்தில் இருந்த புல்வெளியில் நல்ல சிவப்பு நிறத்தில் வெல்வெட் பூச்சிகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே ஊர்ந்து கொண்டிருந்தன. வெல்வெட் மேலே விரலை வைத்தால் மெது மெதுவென்று இருக்கும் அல்லவா? அதனை தொட்டுப் பார்க்க ராமுவிற்கு மிகவும் ஆசை.
தாத்தா ஒரு காலித் தீப்பெட்டியை அவனிடம் கொடுத்து, அதில் சிறிது பசும் புல்லை பரப்பி விட்டு, ஒரு வெல்வெட் பூச்சியை அதனுள் வைத்து அழகு பார்ப்பதற்காக கொடுத்தார். இன்னும் சிறிது காலாற நடந்து செல்லும் பொழுது மல்பெரி தோட்டத்தில் பல வண்ண பட்டுப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்து கொண்டிருப்பதை காண்பதற்கு கொள்ளை அழகு.
தட்டான் பூச்சி தாழ்வாகப் பறந்து கொண்டிருப்பது, எங்கோ அருகில் மழை பெய்து கொண்டிருப்பதையும் அறிவித்தது. தாத்தா சேற்றில் இறங்கி வயல்வெளியில் வரப்புகளை உடைத்து பாத்திகளில் நீரை பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
வயல்வெளியில் தாத்தாவுடன் தானும் இறங்குவதற்கு ஆசைப்பட்ட ராமுவிற்கு மண்புழுவை பார்த்தவுடன் பயமாகிவிட்டது.
ராமு: தாத்தா மண்ணுல புழு எல்லாம் இருக்கு! இதுல எப்படி நீங்க நிக்கிறீங்க? அது கடிக்காதா?
தாத்தா: மண்புழு மண்ணோட வளத்தை உயர்த்தும் ராமு. அதனுடைய கழிவு செடிக்கு இயற்கை உரம். நம்மள கடிக்காது. நாம அதை ஒன்னும் செய்யாம இருந்தா சரி.
ராமு: ஆனா தாத்தா நான் எங்க வீட்டில இதை பார்க்கிறதே இல்லையே?
தாத்தா: நகரத்துல மண்ணை எங்கே இயற்கையா இருக்கிற மாதிரியே விடறாங்க! எதற்கெடுத்தாலும் நெகிழிகளை அதிகமா பயன்படுத்தி குப்பையும் கூளமுமா குமுஞ்சு கிடக்குது.
ராமு: ஆமாம் தாத்தா! எனக்குக் கூட அது பிடிக்கவே இல்ல. அதையெல்லாம் தடுக்கவே முடியாதா?
தாத்தா: யாராவது செய்வாங்க அப்படின்னு நினைக்கிறதை விட அவங்கவங்க நினைச்சா தானே தடுக்கமுடியும் ராமு?
ராமு: அப்ப நான் என்ன பண்ணட்டும் தாத்தா?
தாத்தா: கடையில ஏதாவது வாங்கி சாப்பிடும் போது நெகிழிக் குப்பை சேகரமாகுதுதானே? அதை சரியான முறையில் அப்புறப்படுத்தணும். அயல்நாடு மாதிரி நம்ம நாட்டுல சட்டம் கட்டாயமாக இல்லாததால கண்ட இடத்துல போடக் கூடாது.
ராமு: நான் பார்க்கிற இடத்துல குப்பைத் தொட்டி இருக்கவே மாட்டேங்குது தாத்தா. அப்போ என்ன செய்யறது?
தாத்தா: நீ குப்பைக் கூடைய பார்க்கிற வரைக்கும் அதை உன்னோட பையிலேயே வச்சிருக்க வேண்டியதுதான். எங்க பார்க்கிறயோ அப்ப அதை அப்புறப்படுத்து ராமு.
பாட்டி: என்ன? தாத்தாவுக்கும் பேரனுக்கும் பேச்சு நடக்குதா ? முதல்ல சாப்பிட வாங்க!
ராமு: ஆமாம் பாட்டி! எனக்கு ரொம்ப பசிக்குது.
பாட்டி: வாழை தோட்டத்துல இலையை அறுத்துட்டு வருவதற்கு கொஞ்ச நேரம் ஆயிடுச்சுடா கண்ணா.
ராமு: ஹைய்யா! இலையில சாப்பாடா?!! எனக்கு ரொம்பப் புடிக்கும்.
பாட்டி: நகரத்தில் ஒரு தடவை சாப்பிட்டுட்டு தூக்கிப்போடுற நெகிழித் தட்டு, டம்ளர் எதுவும் இங்க பயன்படுத்துறதில்ல ராமு குட்டி.
தாத்தா உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரே… ஒரு தனி மனுஷனா நீ அதையெல்லாம் பயன்படுத்தாத. கடையில பொருள்கள் வாங்குறதுக்கு வெளியே போகும்போது கையில பையோட போகணும். நெகிழியை தவிர்க்கணும்னா வீட்டிலிருந்து ஒரு ஸ்பூன் உன் பையில வச்சுக்கலாம். தண்ணீர் பாட்டில் வீட்டிலிருந்து எடுத்துட்டுப் போகலாம்.
தாத்தா: பாட்டி சொல்றதெல்லாம் நல்லா நினைவில் வச்சுக்கோ ராமு! நீ கண்டிப்பா கடைபிடித்து வந்தா, கிராமத்தோட இயற்கை அழகை கொண்டு வர முடியாவிட்டாலும் நகரத்தை ரொம்ப அசிங்கப்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா?
ராமு: சரிங்க தாத்தா. கண்டிப்பா கடைபிடிக்கிறேன். என்னோட நண்பர்களுக்கும் சொல்றேன்.
பாட்டி: சமத்துக் குட்டி ராமு! நல்லதுன்னு நினைக்கிற விஷயத்தை நாலு பேர் கிட்ட பகிர்ந்துகிட்டா இன்னும் நல்லது. நம்மால முடிஞ்சது நாம பண்ணுவோம். நல்லதே நடக்கட்டும். உச்சந்தலைக்கு மேல இருந்த சூரியன் மேற்கு பக்கமா சாஞ்சுகிட்டு வருது. பொழுது சாயறதுக்கு முன்னால நாம வீட்டுக்கு கிளம்பிடலாம்.
சூரியன் நகரும் பொழுது, சாயும் நிழலை வைத்து நேரத்தை கணித்த பாட்டி, இவ்வாறாக சொன்ன பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் முடிக்க வேண்டிய வேலைகளில் ஆயத்தமானார்கள்.