நன்றியுள்ள தேவதை

முன்னொரு காலத்தில் ஒரு பெரிய நூலகம் இருந்தது. அதில் ஒரு தேவதை வாழ்ந்து வந்தது. குடியிருக்க அது ஒரு நல்ல இடம் இல்லை என்றாலும், அந்த அமைதி அதற்குப் பிடித்து இருந்தது.

ஒரு நாள் திடீரென்று அந்த அறையில் அதிகச் சத்தம் கேட்டது. ஒரு கவிதை புத்தகத்தில் குடியிருந்த அந்தத் தேவதை, தலையை வெளியே நீட்டிப் பார்த்தது. அங்கு இரண்டு குழந்தைகள், விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் பெரிய புத்தகங்களை வைத்து வீடு கட்டினார்கள். மாட்டுத் தோலினால் ஆன புத்தக அட்டையை, வீட்டுக் கூரையாக அமைத்தார்கள்.

‘நான் குடி இருக்க இந்த வீடு நல்லாயிருக்கும்; அந்தக் கவிதை புத்தகம் ரொம்ப மெல்லிசா இருக்கு; இந்தப் பெரிய வீட்டுல எனக்கு நிறைய அறையெல்லாம் இருக்கும்’ என்று தேவதை நினைத்தது. பழங்கால வரலாற்றுப் புத்தக அட்டையைக் கூரையாக வைத்துக் கட்டப்பட்ட அந்த வீட்டுக்குள் தேவதை குடியேறியது.

அழுக்குப் படிந்த புதிய வீடு, பயங்கரமாக நெடி அடித்தது. ஆனாலும் வீடு பெரியதாகவும் வசதியாகவும் இருந்தது. தேவதை அங்கு வந்து, கொஞ்ச நேரம் தான் ஆகியிருக்கும்.

ஒரு பெண் குண்டு நாயுடன், அங்கு வந்தாள். தன் குட்டித் தம்பியையும், தங்கையையும் திட்டினாள். பிறகு அந்த வரலாற்றுப் புத்தகத்தை எடுத்து மூடி மீண்டும் அலமாரியில் வைத்துவிட்டாள். தேவதை அந்தப் புத்தகத்துள் மாட்டிக் கொண்டது. 

அந்தப் பக்கங்களுக்குள் இருக்க வசதியாகத் தேவதை தன் உடலை மிகவும் சுருக்கிக் கொண்டது. “இந்தப் புத்தகத்தைத் திறக்கும் போது, நான் கண் விழிப்பேன்” என்று சொல்லிவிட்டு, அது தூங்கிவிட்டது.  அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழிந்தன. ஆனால் அந்தப் புத்தகத்தை யாரும் திறக்கவே இல்லை.

பல ஆண்டுகள் கழித்து, ஒரு வரலாற்றுப் பேராசிரியர், அந்தப் புத்தகத்தைத் திறந்தார். கண்ணாடி போட்டுக் கொண்டு வாசித்த அவர் அந்தத் தேவதையைக் கவனிக்கவே இல்லை.

“இந்தப் புத்தகத்தை வைத்து, வீடு கட்டிய குட்டிப் பையன் நீ தானே?” என்று தேவதை கேட்டது.

“நானா?” என்று கேட்டுவிட்டுப் பெருமூச்சு விட்டார் அவர்.

“ஏன் உனக்கு ஞாபகம் இல்லையா?” என்று கேட்ட தேவதை அவர் தோள்களில் சென்று உட்கார்ந்தது. அவர் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தது.  தேவதை காதில் சொன்னது எல்லாம், தனக்குத் தோன்றும் எண்ணம் என்று அவர் நினைத்தார்.   

அவர் பழைய காலத்தை நினைத்துப் பார்த்தார். ‘குழந்தையா இருந்தப்போ எப்படி எல்லாம் மகிழ்ச்சியோட விளையாடினேன்?’ என்று நினைத்தார்.

‘இப்போ நெறைய படிச்சி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துல பேராசிரியர் ஆயிட்டேன். ஆனா இப்ப எப்படி விளையாடறதுன்னே எனக்கு மறந்து போச்சு! நான் மறுபடியும் குட்டிப் பையனா ஆக விரும்புறேன்” என்றார்.

“நான் அதைச் செய்றேன்; ஒனக்கு இப்போ எத்தனை வயசு?” என்று தேவதை கேட்டது.

“எனக்கு அம்பது ஆகப் போவுது” என்றார் அவர்.

‘இந்தப் பயங்கரமான புத்தகத்தில இருந்து, என்னை வெளியே விட்டதற்காக, இவனை மறுபடியும் இளமையா ஆக்குறேன்’ என்று தனக்குள் தேவதை சொல்லிக் கொண்டது “சன்னலுக்கு வெளியே பார்!” என்றது தேவதை.

அவர் சன்னலுக்கு வெளியே பார்த்தார். அவர் சிறுவனாய் இருந்த போது விளையாடிய அந்தக் குட்டிப் பெண்ணைப் பார்த்தார். இப்போது பெரிய பெண்ணாக வளர்ந்திருந்த அவளும், குட்டிப்பெண்ணாக நின்று இருந்தாள்.  திடீரென்று இவரும் குட்டிப் பையனாக மாறிவிட்டார். அவளிடம் சென்ற போது அவள் புன்னகையுடன் வரவேற்றாள். இருவரும் புல்வெளிக்குச் சென்று பூக்களையும், பழங்களையும் பறித்து விளையாடினார்கள்.

“குழந்தையாய் இருப்பது ரொம்பவும் நல்லா இருக்கு” என்றார் அந்தப் பேராசிரியர்.  அவருடைய வாழ்நாள் முழுக்க, தேவதை அவரை இளமையாகவே வைத்து இருந்தது.

(ஆங்கிலம் – ஈ.நெஸ்பிட்)

(தமிழாக்கம் – ஞா.கலையரசி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *