யானையை வென்ற முயல்

பஞ்சதந்திரக் கதைகள்

யானைகளின் கூட்டம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. யானைகளின் அரசன் தனது கூட்டத்துடன் அருகிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தி விளையாடி சந்தோஷமாக அங்கு வாழ்ந்து வந்தது.

அந்த நீர்நிலையில் நீர் வற்றிப் போக யானைகள் நீர் அருந்த முடியாமல் கஷ்டப் பட்டன. உடனே யானைகளின் அரசன் தனது கூட்டத்திலிருந்த ஒரு யானையை அனுப்பிக் காட்டில் வேறு நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடிப் பார்த்து அறிந்து வரச் சொன்னது.

அந்த யானையும் தேடிப் பார்த்து அருகில் இருந்த ஒரு குளமொன்றைக் கண்டு பிடித்து யானை அரசனிடம் வந்து சொன்னது.

யானை அரசனும் மனதில் மகிழ்ச்சியுடன் அந்தப் புதுக் குளத்திற்குத் தன் கூட்டத்துடன் சென்று வர ஆரம்பித்தது.

அந்தக் குளத்தின் அருகே ஒரு முயல் கூட்டம் வசித்து வந்தது.யானைகள் வந்து போவதால் அவர்களுடைய நிம்மதியான வாழ்க்கையில் மிகுந்த அசௌகரியம் ஏற்பட்டது.

“வலிமை மிகுந்த யானைகளை எதிர்க்க முடியாது. நீர் அருந்த வரும் அவற்றைத் தடுக்கவும் முடியாது”

என்று முயல்களின் தலைவன் கவலையில் ஆழ்ந்தது.

உடனே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு புத்திசாலி முயல்,

” நான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு தருகிறேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.’

என்று தலைவனிடம் கோரிக்கை விடுத்தது. உடனே தலைவனும் சம்மதம் தெரிவிக்க முயல் யானைகள் வசிக்கும் இடத்திற்குச் சென்று ஓர் உயரமான பாறையில் அமர்ந்து கொண்டு யானைகளின் அரசனை அழைத்தது.வலிமை மிக்க

காட்டு யானைகள் பார்க்கவே அச்சமாக இருந்தாலும் முயல் துணிவுடன் பேசியது.

” நான் தூதுவன் வந்திருக்கிறேன்.”

“தூதுவனா? யாரிடமிருந்து தூது?”

“நிலா அரசருடைய விசேஷ தூதுவன். எங்கள் அரசர் தனது மனைவிகளுடன் வந்து நீராடும் குளத்தை உங்களுடைய கூட்டம் வந்து உபயோகிப்பதும் தண்ணீரைக் கலக்கி அசுத்தமாக்குவதும்  அவருக்குப் பிடிக்கவில்லை. உங்களை இனி அங்கு வரவேண்டாம் என்று சொல்லச் சொன்னார். உங்களுடைய செயலால் அவர் மிகவும் மனம் வருந்துகிறார்.”

இதைக் கேட்டதும் யானைகள் பயந்து போயின. உடனே யானைகளின் அரசன் முயலிடம் சொன்னது.

“தூதுவனே! நாங்கள் தவறிழைத்து விட்டோம்.நிலா அரசனிடம் நான் நேரில்

மன்னிப்பு கேட்க வேண்டும்.”

இந்தச் சொற்களைக் கேட்டு பயந்து போன முயல் சற்றே யோசித்துப் பின்னர் பதில் கூறியது.

“இன்று இரவில் குளத்திற்கு வாருங்கள். அவரிடம் பேசலாம்.”

என்று சொல்லி அங்கிருந்து சென்றது.

இரவில் யானைகள் குளத்தருகே சென்றன. குளத்து நீரில் பிரதிபலித்த நிலவு, மற்றும் நட்சத்திரங்களின் பிம்பங்களைப் பார்த்து நிலவும் அதன் மனைவிகளும் நீராட வந்திருக்கின்றன என்று நினைத்துக் கொண்ட யானைகள்,

” நிலா அரசரே! எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் வேறு குளத்தைத் தேடி இனிப் போய்க் கொள்ளுகிறோம். தெரியாமல் தவறு செய்து விட்டோம்.”

என்று வேண்டிக் கொண்டு அங்கிருந்து சென்றன.

முயல் கூட்டமும் அதற்குப் பின்னர் குளத்தருகே நிம்மதியாக வசித்து வந்தன.

அறிவுக் கூர்மையால் பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *