பஞ்சதந்திரக் கதைகள்

poochandi

அமுதா தன்னுடைய ஐந்து வயது மகள் யாழினிக்கு மொட்டை மாடியில் வைத்து சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். இரவு நேரம். வானத்தில் பௌர்ணமி நிலவு அவர்களைப் பார்த்து அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தது.

” நிலா நிலா ஓடிவா

    நில்லாமல் ஓடிவா

மலை மேல ஏறிவா

    மல்லிகைப்பூ கொண்டு வா! “

என்று பாடிக்கொண்டே நிலாவைக் காட்டியபடி யாழினியைச் சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். யாழினியோ வாயைத் திறக்கவே இல்லை.

” இந்தா பாரு யாழினி, சாப்பாடு கொடுக்கற நேரம் சாப்பிட மாட்டேங்கறே! அப்புறம் கண்ட நேரத்தில் பசிக்குது. அப்போ பசி தெரியாம அழுது ஆர்ப்பாட்டம் செய்யறே! வரவர உன்னோட பெரிய தொல்லையாப் போச்சு. உன்னைச் சாப்பிட வைக்கிறது பெரும் பாடா இருக்கு எனக்கு. பேசாம உன்னைப் பூச்சாண்டி கிட்டப் பிடிச்சுக் கொடுக்க வேண்டியது தான் ” என்றாள் அமுதா.

” பூச்சாண்டின்னா யாரும்மா? ” என்று உடனே யாழினி பளிச்சென்று கேட்டு விட்டாள். அமுதாவுக்கோ பதில் சொல்லத் தெரியவில்லை. திருதிருவென்று முதலில் முழித்தவள் பின்னர் சொல்ல ஆரம்பித்தாள்.

” பூச்சாண்டி ன்னா ராக்ஷஸன் மாதிரி பாக்கவே பயங்கரமா இருப்பான்”

” ராட்சசன்னா?” அடுத்த கேள்வி பிறந்தது.

” பெரிய உருவமா, தலையில் கொம்பு, திங்கு திங்குன்னு  பூமி அதிர நடந்து வருவான். அடம் பிடிக்கற குழந்தைகளைப் பிடிச்சுட்டுப் போயிடுவான். நீ இப்போ சாப்பிடலைன்னா உன்னை இப்போ வந்து தூக்கிட்டுப் போயிடுவான். சமத்தாச் சாப்பிடு பாக்கலாம் ” என்று உணவை எப்படியாவது யாழினி வாயில் திணிக்க அமுதாவும் முயற்சி செய்தாள்.

” போங்கம்மா, அப்படில்லாம் யாருமே கிடையாது. சும்மா என்னை பயமுறுத்துறதுக்காகத் தானே சொல்லறீங்க? எனக்கு நல்லாத் தெரியும் ” என்று சிரித்த யாழினியை அதற்கு மேல் அமுதாவால் ஏமாற்ற முடியவில்லை.

அன்றைய போராட்டம் முடிந்தது. யாழினி மனதில், ‘ பூச்சாண்டின்னா யாரு? அவனைப் பாக்கணும்? ‘ என்று ஆசையாக இருந்தது.

யாழினி இரவில் அம்மாவிடம் கதை கேட்டு விட்டுத் தூங்கிப் போனாள். திடீரென்று தூக்கம் கலைந்து யாழினி கண் விழித்துப் பார்த்தபோது ஒரு காட்டுக்குள் இருந்தாள். சுற்றிலும் இருட்டாக இருந்தது. நிலவு வெளிச்சம் ஓரளவு இருந்ததால் சுற்றி இருந்த மரம், செடி, கொடிகளை அவளால் பார்க்க முடிந்தது. விலங்குகளின் கனைப்பும், பறவைகளின் சிர்சிர்ரென்ற ஒலியும், வண்டுகளின் ரீங்காரமுமாகச் சேர்ந்து கேட்டன.

‘ அம்மா பயமுறுத்தின மாதிரி பூச்சாண்டி தான் நம்மைத் தூக்கிட்டு வந்துட்டானோ? இங்கே இருந்து வீட்டுக்கு எப்படிப் போறது? யாரைக் கேக்கிறது? ‘ என்று யோசித்தபடி சுற்று முற்றும் பார்த்தாள் யாழினி. அப்போது ஒரு கிளி படபடவென்று இறக்கைகளை அடித்தபடி அவளருகில் பறந்து வந்தது.

” கிளியே, கிளியே, நான் வீட்டிலிருந்து காட்டுக்குள்ள எப்படியோ வந்துட்டேன். காட்டை விட்டு வெளியே போக எனக்கு வழி காட்டறயா? ” என்று கேட்க,  உடனே அந்தக் கிளியும் அவளுக்கு உதவ முன்வந்தது. கிளி பறந்து போக, யாழினியும் கிளி காட்டிய பாதையில் நடந்தாள். கிளியோடு பேசிக் கொண்டே போனதில் களைப்பு தெரியவில்லை.

” கிளியண்ணா, நீ பூச்சாண்டியைப் பாத்திருக்கயா? பூச்சாண்டி எப்படி இருப்பான்? ” என்று கேட்க, கிளி சிரிக்க ஆரம்பித்தது.

” நான் முன்னால குட்டியா இருந்த போது என்னோட அம்மாவும் இப்படித்தான் பயமுறுத்தினாங்க. நாங்க பிறந்தவுடன் எங்களுக்கு இறக்கைகள் இருக்காது. இறக்கைகள் வளந்தாத் தானே பறக்க முடியும்? கொஞ்ச நாட்கள் ஆகும். அது வரைக்கும் என்னையும் மத்த குஞ்சுகளையும் எங்கம்மா, மரக்கிளையில் ஒரு கூட்டில் விட்டுட்டு எங்களுக்காக இரை தேடப் போவாங்க. இரை கிடைச்சதும் கொண்டு வந்து எங்களுக்கு ஊட்டி விடுவாங்க. தனியா இருக்கும் போது வெளியே போனாப் பூச்சாண்டி வந்து பிடிச்சுக்குவான்னு சொல்லுவாங்க. எங்களைப் பிடிக்க வர காட்டுப்பூனை, கழுகு, பருந்து எல்லாமே எங்களைப் பொருத்தவரை பூச்சாண்டிகள் தான். ஏன் எங்களைப் பிடிச்சுட்டுப் போற மனுஷங்க கூடப் பூச்சாண்டிகள் தான் ” என்று சொல்லிச் சிரித்தது அந்தக் கிளி.

போகும் வழியில் அவர்கள் சந்தித்த முயல், மான் போன்றவை சிங்கம், புலி போன்ற விலங்குகளையும் மனிதர்களையும் பூச்சாண்டிகள் என்று சொல்ல யாழினி ஆச்சரியம் அடைந்தாள். இதே போலப் பல விலங்குகளைச் சந்தித்துக் கேட்டபோது ஒவ்வொன்றும் ஒவ்வொரு பதில் சொன்னாலும் நிறைய விலங்குகள்ஒ, பொதுவாக மனிதர்களைத் தான் பூச்சாண்டிகள் என்று கூறின.

யாழினி மனதிற்குள் வருந்தியபடி வீடு வந்து சேர்ந்தாள். தனது படுக்கையில் படுத்துத் தூங்கிப் போனாள். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் தன் வீட்டில் இருந்த கிளிக் கூண்டைத் திறந்து கிளியை விடுதலை செய்து பறக்க விட்டாள்.

அமுதா, அவளுக்கு சாப்பாடு ஊட்டிய போது சமர்த்தாகச் சாப்பிட்டாள். ” என்ன யாழினி, பூச்சாண்டியை நினைச்சு பயந்துட்டயா? ” என்று சிரித்துக் கொண்டே அமுதா கேட்டாள்.

” இல்லைம்மா. எனக்குப் பூச்சாண்டி யாருன்னு தெரிஞ்சுடுச்சு. ஆனா பயமெல்லாம் இல்லை. உணவை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு புரிஞ்சுடுச்சு. அப்புறம் இனிமேல் யாராவது காட்டில இருக்கற விலங்குகளைப் பிடிச்சுட்டு வந்து கூண்டில் அடைச்சால் அது தப்புன்னு நான் சொல்லுவேன். அதைத் தடுக்கப் பார்ப்பேன்” என்று சொன்னாள்.

திடீரென்று பெரிய மனுஷி போலப் பேசிய மகளை அமுதா, பெருமையுடன் பார்த்தாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments