கவிஞரின் குரல்
சின்னச் சின்னக் கண்ணா வா!
சிங்காரச் சிரிப்புடன் வா!
அம்மாவென நீயழைத்தால்
அமுதும் தேனும் பாயுதடா!
சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிரித்துக் குலுங்கி நீ நடந்தால்
சிந்தையுமே சிலிர்க்குதடா!
எந்தன் உளம் களிக்குதடா!
வானகத்து நிலவும் இங்கே
வையகத்தில் வந்தது போல்
நீயும் வந்தாய் என்னருகில!
நிலவு தென்றல் சுகம் தந்தாய்!
வண்ண வண்ணக் கனவுகள
வாழ்வினிலே தந்தவனே!
அன்னை மடி தவழுகின்ற
அழகு தமிழ்க் காவியமே!
சின்னச் சின்னக் கண்ணா உன்
செம்பவள வாய் திறந்து
சிந்துகின்ற மழலை தனில்
சிந்தையுமே கிறங்குதடா!
குழலும் யாழும் இனிமையில்
மழலை முன்னே நின்றிடுமா?
தீந்தமிழின் இனிமையுடன்
உந்தன் மொழி மயக்குதடா!
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.