அடர்ந்த காட்டின் நடுவிலொரு
ஆல மரம் இருந்ததாம்
அந்த மரப் பொந்திலொரு
ஆந்தை வசித்து வந்ததாம்
நாளெல்லாம் பொந்துக்குள்ளே
தூங்கித் தூங்கி எழுந்ததாம்
நள்ளிரவு நேரத்திலே
தூக்கம் கலைந்து விழித்ததாம்
பசி வயிற்றைக் கிள்ளவே
இரையைத் தேடிப் பறந்ததாம்
வயலோரத்து மரக்கிளையில்
அமர்ந்து நோட்டமிட்டதாம்
முட்டைக் கண்ணை உருட்டியே
உற்று உற்றுப் பார்த்ததாம்
வட்டத் தலையைச் சுழற்றியே
சுற்றுமுற்றும் பார்த்ததாம்
பயிரை அழிக்கும் எலிகளைப்
பாய்ந்து கவ்விப் பிடித்ததாம்
குண்டு பெருச்சாளிகளைக்
கூண்டோடு ஒழித்ததாம்.
வேட்டை முடிந்து போனதும்
காட்டுக்குத் திரும்பியதாம்
ஆலமரப் பொந்துக்குள்ளே
ஆனந்தமாய்த் தூங்கியதாம்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1