லட்சுமி சாகல் (Lakshmi Sahgal) (1914-2012)

சென்னை மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் முடித்த லட்சுமி சாகல் இளம் வயது முதலே, நம் நாட்டின் விடுதலை குறித்து அக்கறை  கொண்டு இருந்தார். இவர் தந்தை சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். இவர் அன்னை அம்மு சுவாமிநாதனுக்குக் காந்தியடிகளின் கொள்கைகள் மீது, மிகுந்த ஈர்ப்பு இருந்தது. லட்சுமியும் கல்லூரிப்பருவம் முதல், கதராடை அணிந்து காங்கிரசின் தொண்டராக இருந்தார்.

1940இல் மருத்துவர் லட்சுமி சிங்கப்பூர் சென்றார். தென்னிந்திய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில், மருத்துவமனை திறந்து மருத்துவப் பணி செய்தார். 1941இல் ஜப்பான் சிங்கப்பூரைத் தாக்கியது. பிரிட்டிஷ் இந்தியப் படை, ஜப்பானிடம் சரண் அடைந்தது.

சிங்கப்பூரில் செயல்பட்ட இந்திய சுதந்திர லீக்கின் அழைப்பின் பேரில், சுபாஷ் சந்திர போஸ், சிங்கப்பூர் வந்தார். “பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்று சுபாஷ் சந்திர போஸ் அப்போது அழைப்பு விடுத்தார். அதையேற்று 1943இல் லட்சுமியைத் தளபதியாகக் கொண்டு, ஜான்சிராணி படை உருவானது. அதன் பிறகு கேப்டன் லட்சுமி என்று இவர் அழைக்கப்படுகிறார். இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படை என்ற சிறப்பைப் பெற்று வரலாற்றில் தடம் பதித்தது.

கேப்டன் லட்சுமி நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின், ஒரே பெண் அமைச்சராகவும் பதவி வகித்தார். நாடு விடுதலை பெற்ற பின், கான்பூரில் குடியேறி, மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்கள் அவைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998இல் இந்திய அரசின் பத்மவிபூஷன் பட்டம் பெற்றார்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *