அடர்ந்த வனம். அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது வனத்தின் ஊடே. காட்டில் வசிக்கும் பல்வேறு மிருகங்களும் நீர் அருந்த அந்த நதிக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும்.
ஆற்றங்கரையில் பிரம்மாண்டமான மரமொன்று. மரத்தின் அடியில் எலிகளின் கூட்டம் வசித்து வந்தது.
அந்த வனத்தில் புதிதாக ஒரு யானைகளின் கூட்டம் வசிக்க வந்தது. வனத்தின் அழகில் மயங்கி வனத்தில் வசிக்கத் தொடங்கின யானைகள்.
அவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானைகள் உண்பது என்னவோ இலையும் தழைகளும் மரப் பட்டைகளும்.
யானைக் கூட்டம் தினமும் ஆற்றங்கரைக்கு வந்து நீர் அருந்தி நீரில் விளையாடிக் களித்து உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும். தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒன்றன் மேல் ஒன்று தண்ணீரைப்
பீய்ச்சியடித்து அவை விளையாடும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அவ்வாறு யானைக் கூட்டம் வந்து திரும்பிச் செல்கையில் சின்னஞ்சிறு எலிகள் பல
யானைகளின் வலுவான கால்களின் கீழே நசுங்கி உயிரிழந்தன.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எலிகளின் தலைவன் ஒரு நாள் துணிவுடன் யானைகளின் தலைவனை சந்திக்கச் செல்கிறது.
“யானையாரே! யானையாரே! உங்களுடைய கால்களின் கீழ் நசுங்கி எங்கள் இனத்தவர் பலர் தினமும் உயிரிழக்கின்றனர். தயவு செய்து நீங்கள் நதிக்குச் செல்லும் பாதையை மாற்றிக் கொள்கிறீர்களா!
இல்லையென்றால் நாளடைவில் எங்கள் இனமே முழுவதும் அழிந்து விடும் நிலைக்கு நாங்கள் தள்ளப் படுவோம். எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் இனத்தைப் பேரழிவிலிருந்து நீங்கள் காத்து நின்றால் சமயம் வரும்போது நாங்களும் உங்களுக்கு பதில் உதவி செய்வோம்.”
என்று பணிவுடன் வேண்டிக் கொண்டது.
எலிகளின் தலைவனின் வேண்டுகோளைக் கேட்டு சிரசிரியென்று சிரித்தது யானைகளின் தலைவன்.
“யாருக்கு யார் உதவி செய்வது? உங்களுடைய உருவையும் எங்களுடைய உருவையும் ஒப்பிட்டுப் பார்த்தாலும் உங்களுக்கு உண்மை தெரியவில்லையா?”
யானைகளின் தலைவனின் சொல்லைக் கேட்டு மற்ற யானைகளும் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தன.
எலிகளின் தலைவன் வெட்கமும் அவமானமும் தாக்கத் தலை குனிந்து நின்றது.
அதைப் பார்த்த யானைகளின் தலைவனுக்கு மனதில் இரக்கமும் கருணையும் பிறந்தது. நம்மை விட எளியோர்க்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமையன்றோ என்று மனதில் எண்ணி எலிகளைப் பார்த்துக் கூறியது .
“நாளை முதல் நாங்கள் எங்கள் பாதையை மாற்றிக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் இடத்தில் நிம்மதியாக வசிக்கலாம்.”
எலிகள் யானைகளை நன்றியுணர்வுடன் பார்த்து வணங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றன.
அடுத்த நாள் முதல் யானைகள் எலிகளுக்கு கொடுத்த வாக்குப் படி வேறு வழியில் நதியில் நீர் அருந்தவும் விளையாடவும் சென்றன. எலிகளும் தங்களது இருப்பிடத்தில் சுதந்திரமாக விளையாடித் திரிந்தன அச்சமில்லாமல்.
சில நாட்கள் கழித்து சில வேட்டைக்காரர்கள் காட்டிற்குள் புகுந்து விலங்குகளைப் பிடிக்க ஆங்காங்கே வலைகளை விரித்து வைத்தனர்.
யானைகளின் தலைவனும் வேறு சில யானைகளும் வலைகளில் வசமாக மாட்டிக் கொண்டன. சில குட்டி யானைகள் வலையில் இருந்து வெளியே வரமுடியாததால் பயந்து அழ ஆரம்பித்தன.
அப்போது அங்கிருந்த வயதான யானை ஒன்று யானைகளின் தலைவனுக்கு எலிகள் உதவுவதாக அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தியது. வலையில் மாட்டாமல் வெளியே இருந்த யானையொன்றை அழைத்து எலிகளிடம் அனுப்பியது யானைகளின் தலைவன். எலிகளை உதவிக்கு அழைத்து வரச் சொல்லி யானைத் தலைவன் அனுப்பிய செய்தி கேட்டு உடனே பதறிக் கொண்டு பல எலிகள்
விரைந்து வந்தன.
தங்களது கூரிய பற்களால் வலைகளைக்
கடித்து எலிகள் அறுத்தெறிய யானைகள் வலைகளில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியே வந்தன.
வேட்டுவர் வந்து பார்க்கையில் வலைகள் அறுபட்டுக் கிடக்க விலங்குகள் எதையும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
யானைகள் எலிகளைக் கண்டு எள்ளி நகையாடியதற்கு அவற்றிடம் மன்னிப்புக் கேட்டன. தங்களது உயிரைக் காத்ததற்காக நன்றியும் கூறின.
அதன் பின்னர் கானகத்தில் யானைக் கூட்டமும் எலிகளும் ஒற்றுமையுடன் நட்பாக வாழ்ந்தன.