முன்னாடி ஒரு காலத்துல, முன்னாடின்னா ரொம்ப ரொம்ப முன்னாடி.
ரொம்ப ரொம்ப தொடக்க காலத்துல ஒரு வயதான மந்திரக்காரர் எல்லாத்தையும் தயார் செஞ்சிட்டு இருந்தார்.
அவர் முதல்ல உலகத்தை உருவாக்கினார். அப்புறம் அதுல நிறைய தண்ணீர் இருக்கிற கடலை கொண்டு வந்து வச்சார். அப்புறம் உயிரினங்களை உருவாக்கினார்.
எல்லாத்தையும் உருவாக்கின பின், அவர் அந்த உயிரினங்கள்ட்ட சொன்னாரு, “உயிரினங்களே, வாங்க வந்து இந்த உலகத்துல வாழுங்க”
“மந்திரக்காரரே, நாங்க எப்படி வாழனும்னு எங்களுக்குத் தெரியாதே! நீங்க சொல்லுங்க. நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்கிறோம்” அப்படின்னு அந்த உயிரினங்கள் எல்லாம் சொன்னாங்க.
உடனே மந்திரக்காரர் என்ன செஞ்சார் தெரியுமா?
முதல்ல ஒரு யானையை எடுத்தார்.
“நீ யானையா வாழனும்” என்று அதுகிட்ட சொன்னாரு.
உடனே யானை யானையா வாழ ஆரம்பிச்சது.
அடுத்து ஒரு குதிரையை எடுத்தார். “நீ குதிரையா வாழனும்”னு அது கிட்ட சொன்னாரு.
உடனே குதிரை குதிரையா வாழ ஆரம்பிச்சது.
கரடியை எடுத்து, “நீ கரடியா வாழணும்”னு சொன்னாரு. கரடி கரடியா வாழ ஆரம்பிச்சது.
ஆமையை எடுத்து, “நீ ஒரு ஆமையா வாழனும்”னு சொன்னாரு. உடனே ஆமையும் ஆமையா வாழ ஆரம்பிச்சது.
இப்படியே ஒவ்வொரு உயிரினத்தையும் கூப்பிட்டு அது எப்படி வாழனும், அதோட குணநலன்கள் எப்படி இருக்கணும்னு அதுக்கு சொல்லிட்டு இருந்தார்.
அப்ப அங்க கடவுளோட குழந்தையான மனிதன் வந்தார்.
அந்த மனிதர் தன்னோட குட்டி மகளை தன் தோள்களின் மேல சுமந்துட்டு வந்தார்.
மனிதர் வரவும் அந்த மந்திரக்காரர் அந்த மனிதரோட பேச ஆரம்பிச்சுட்டாரு. மனிதர் கேட்டார், “மந்திரக்காரரே, இந்த உலகத்தை எனக்கு ஏத்த மாதிரி தயார் பண்ணிட்டீங்களா? உலகம் என் சொல்பேச்சு கேக்குமா?”
“ஆமா மனிதரே, இந்த உலகம் உங்களுக்கு ஏத்த மாதிரி தயாராகிட்டு இருக்கு. எல்லா உயிரினங்களும் உங்க சொல்பேச்சு கேட்கும்” என்றார் மந்திரக்காரர்.

அடுத்ததா தான் எப்படி வாழனும்னு கேட்க வேண்டிய இடத்திலிருந்து ஒரு நண்டு.
அந்த நண்டு இந்த மனிதரும் மந்திரக்காரரும் பேசுவதை கேட்டது. அதுக்கு பிடிக்கவே இல்லை.
நாம ஏன் இன்னொருத்தர் சொல்பேச்சு கேட்டு வாழனும். நான் நானா தான் வாழ்வேன். நான் எப்படி வாழனும் நினைக்கிறேனோ அப்படித் தான் வாழ்வேன்” அப்படின்னு அது தன் மனசுக்குள்ளேயே சொல்லிகிட்டது.
அப்படியே வரிசையில் இருந்து விலகி கடலுக்குள்ள போக ஆரம்பிச்சது. இதை மந்திரக்காரரும் மனிதரும் பார்க்கவே இல்லை.
இந்த மனிதரோட குட்டிப் பெண் தான் தான் ஒரு உயிரினம் வரிசையில் இருந்து விலகி கடலுக்குள்ள போவதைப் பார்த்தாள். அவள் மட்டும் தான் பார்த்தாள்.
அப்புறம் மனிதர் தன் மகளோடு வீட்டிற்கு போய் விட்டார்.
மந்திரக்காரர் எல்லா உயிரினங்களுக்கும் அவங்க என்ன வேலை செய்யணும்னு திரும்பவும் சொல்ல ஆரம்பிச்சாரு.
இப்படி ஒரு உயிரினும் கூட மிச்சம் இல்லாமல் எல்லாருக்குமே அவங்க வேலை என்னன்னு சொல்லிட்டாரு. அப்படி சொல்றதுக்கே ரொம்ப காலம் ஆகிவிட்டது.
எல்லாருக்கும் அவங்க அவங்க வேலையை சொல்லி முடிச்சதும், அவர் தன்னுடைய கைகளை உதறி எழுந்தார்.
அப்புறம் எல்லா உயிரினங்களும் அவர் சொல்படி அவங்க அவங்க வேலையை சரியா செய்றாங்களா என்று தெரிந்து கொள்ள உலகத்தைச் சுற்றி வந்தார்.
கிழக்குப் பக்கம் போய் பார்த்தார். அங்க எல்லா உயிரினங்களும் அவர் சொன்ன மாதிரி வாழ்ந்துட்டு இருந்தது.
மேற்குப் பக்கம் போனார். அங்கேயும் எல்லா உயிரினங்களும் அவர் சொன்னபடி வாழ்ந்துட்டு இருந்தது.
அப்புறம் வடக்குப் பக்கம் போனார். அங்கேயும் எல்லா உயிரினங்களும் அவரவர் வேலையை சரியா செஞ்சிட்டு இருந்தாங்க.
அப்புறம் தெற்குப் பக்கம் போனாரு. அங்க தான் நதிவந்து கடலோட இணைகிற கழிமுகப் பகுதியில, அந்த கடவுள் குழந்தையான மனிதர் வீடு கட்டி வாழ்ந்துட்டு இருந்தார்.
இந்த மந்திரக்காரர் அவர் கிட்ட போய் “மனிதரே, உலகத்தில் உள்ள எல்லா விலங்குகளும் உங்க சொல்பேச்சு கேக்குதா?”
“ஆமாம், எல்லா விலங்குகளும் என் சொல் பேச்சு கேக்குது”
“உலகத்தில் உள்ள எல்லா பறவைகளும் உங்க சொல்பேச்சு கேக்குதா?”
“ஆமாம், எல்லா பறவைகளும் என் சொல் பேச்சு கேக்குது”
“மரம் செடி கொடிகள் எல்லாம் உங்க சொல்பேச்சு கேக்குதா?”
“ஆமா ஆமா அதெல்லாம் என் சொல்பேச்சு கேக்குது”
“இந்தக் கடல் உங்க சொல்பேச்சு கேக்குதா?”
“இல்லை, கடல் எனக்கு அடிபணிகிறதே இல்லை” என்றார் மனிதர்.
மந்திரக்காரருக்கு ஒரே ஆச்சர்யம், “என்ன சொல்றீங்க?”
“ஆமா, தினமும் பகல்ல ஒரு முறையும் இரவில் ஒரு முறையும் கடல் இந்த இனிப்பான நீர் இருக்கிற நதியில் நுழைந்து காடு வரைக்கும் போகுது. அதனால என்னுடைய வீடு மொத்தமா நனைஞ்சுடுது.
பின், பகல்ல ஒரு முறையும் இரவுல ஒரு முறையும் நதியில் இருக்கிற நீரை இழுத்துட்டு கடல் உள்ள போயிடுது. அப்ப என்னுடைய நதியிலும் என்னுடைய வீட்டிலும் வெறும் மணல் மட்டும் தான் இருக்கு.
இப்படித் தான் இந்தக் கடலையும் நதியையும் நீங்க வாழ சொன்னீங்களா?” அப்படின்னு கேட்டாரு மனிதர்.
“இல்லையே நீங்க சொல்றது ரொம்ப விசித்திரமா இருக்கு. நான் அப்படி எந்த உயிரினத்துக்கும் சொல்லவே இல்லையே. சரி வாங்க நம்ம அது என்னன்னு விசாரிப்போம்” அப்படின்னு அந்த மந்திரக்காரர் மனிதரையும் அவருடைய குட்டி மகளையும் அழைச்சிட்டு நதிக் கரையோரம் போனாரு.
கழிமுகப் பகுதியில் இருந்த ஒரு பெரிய பாறை மேலே ஏறி நின்றார் மந்திரக்காரர். பகுதியில் இருந்த ஒரு பெரிய பாறை மேலே ஏறி நின்றார் மந்திரக்காரர்.
ஒவ்வொரு விலங்கா கூப்பிட்டு அவங்க ஏதாவது தவறு செய்தார்களா என்று கேட்டார்.
“மீனே நீ ஏதாவது தவறு செஞ்சியா?”
“இல்ல மந்திரக்காரரே, நீங்க எப்படி சொல்லி குடுத்தீங்களோ அதே மாதிரி தான் நான் வாழ்கிறேன்” அப்படின்னு மீனு சொல்லுச்சு
“ஜெல்லி மீனே நீ ஏதாவது தவறு செய்தாயா?”
“இல்ல மந்திரக்காரரே, நீங்க எப்படி வாழ சொல்லிக் கொடுத்தீர்களோ அப்படித்தான் நான் வாழ்கிறேன்”
“திமிங்கலமே நீ ஏதாவது தவறு செய்தாயா?”
“இல்ல மந்திரக்காரரே, நீங்க கற்றுக் கொடுத்த படி தான் நான் வாழ்கிறேன்”
“கடல்வாழ் உயிரினங்களே, நீங்க யாராவது ஏதாவது தவறா செஞ்சீங்களா?” எனக் கேட்டார்.
உடனே கடல்ல இருந்த எல்லா உயிரினங்களும் ஒன்று போல, “இல்ல மந்திரக்காரரே, நீங்க சொல்லிக் கொடுத்தது போலத் தான் நாங்க வாழ்கிறோம். நாங்களும் எங்களோட குழந்தைகளும் அவங்களோட குழந்தைகளும் அவங்களோட குழந்தைகளும் நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி தான் வாழ்கிறோம்” என்றன உயிரினங்கள்.
அப்ப மனிதரோட குட்டிப் பெண், “மந்திரக்காரரே, முதன் முதல்ல உலகத்தை உருவாக்கும் போது, நீங்களும் எங்க அப்பாவும் பேசிட்டு இருந்தீங்க இல்ல”
“ஆமா”
“அப்ப ஒரே ஒரு உயிரினம் மட்டும் நீங்க அது எப்படி வாழனும்னு சொல்லிக் கொடுக்கிறதுக்கு முன்னாடியே வரிசையில் இருந்து விலகி கடலுக்குள்ள போயிடுச்சு”
“அப்படியா? அது எப்படி இருந்தது?”
“அது வட்ட வடிவமா இருந்தது. ரொம்ப கடுமையான ஓடு இருந்தது. அப்புறம் நீள நீளமா கால்கள் இருந்தது” என விளக்கினாள் குட்டிப் பெண்.
“இந்த வயசுலயே இவ்வளவு தெளிவா கவனிச்சு ஞாபகம் வச்சிருக்கியே? நல்லது” என பாராட்டினார் மந்திரக்காரர்.
“சரி வாங்க, அந்த உயிரினம் எங்கே எனப் பார்க்கலாம்” ஒரு படகில் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு போனார்.
படகு ஓட்டி ஓட்டி கடலோட மத்திய பகுதிக்கு போயிட்டாங்க. அந்த பகுதி தான் கடலோட இதயம்னு சொல்லுவாங்க.
அங்க போனதும் மந்திரக்காரர் தன்னுடைய உள்ளங்கையை எடுத்து கடல்ல வைத்தார்.
அப்ப கடலுக்கு அடி ஆழத்துல ஒரு உயிரினம் இருக்கிறது அவருக்கு தெரிந்தது.
“இங்கே என்ன பண்ற பௌமா?” ஆமா அந்த நண்டு பேர் பெளமா தான்.
“நான் நானா தான் வாழ்கிறேன்”
“எப்படி வாழ்ற என்ன செய்ற”
“நான் தினமும் பகல்ல ஒரு முறையும் இரவில் ஒரு முறையும் உணவு தேடி கடல்ல இருந்து வெளில போறேன்.
பகல்ல ஒரு முறையும் இரவுல ஒரு முறையும் உணவு சாப்பிட்டு திரும்ப கடலுக்குள்ள வர்றேன். நான் வேற எதுவும் செய்யல. என்ன தொந்தரவு பண்ணாம இங்க இருந்து போங்க” என்றது பெளமா.
“நீ வாழ்ற முறை கடலையும் நதியையும் எவ்வளவு பாதிக்குது தெரியுமா? கொஞ்சம் வெளியில வா நாம பேசலாம்” அப்படின்னு சொன்னாரு மந்திரக்கார்.
“நானெல்லாம் வரல என்ன தொந்தரவு பண்ணாம போங்க”
“உனக்கு என்னைப் பார்த்தா பயமா இருக்கு. அதனால தான் நீ வெளியில வர மாட்டேங்குற”
“எனக்கு எந்த பயமும் இல்லை” அப்படின்னு கடல்ல இருந்து வெளில வந்தது நண்டு.
பெளமா தான் நண்டுகளோட அரசன்.
அது கிட்ட இருந்து தான் அதோட குழந்தை நண்டுகள் அதோட குழந்தை நண்டுகள் என எல்லா நண்டுகளும் உருவானது.
அந்த நண்டு கடல்ல இருந்து எழுந்ததும் நிலாவையே மறைத்தது. அவ்வளவு பெருசா இருந்தது வட்ட வடிவத்தில்.
அதனுடைய ஓடுகள் எல்லாம் ரொம்ப கடினமா இருந்தது. அதனோட கை எல்லாம் ரொம்ப கூர்மையா இருந்தது. கடல்ல இருந்து நண்டு வெளியில் வரும்போது பெரிய பெரிய அலைகள் உருவானது.
“நான் இவ்வளவு முக்கியமான ஆளுன்னு எனக்கு தெரியாம போச்சே” அப்படின்னு சொல்லுச்சு பெளமா.
“நீ அவ்வளவு முக்கியமான ஆள் எல்லாம் இல்ல ஹா ஹா” என சொல்லி சிரித்தார் மந்திரக்காரர்.
அவருடைய இடது கை சுண்டு விரலை அசைத்தார்.
உடனே அந்த பெரிய நண்டோட கடினமான ஓடுகள் அவிழ்ந்து கீழே விழுந்துடுச்சு.
நண்டு ரொம்பவும் மென்மையான உடல் அமைப்போட நின்றது.
“மந்திரக்காரரே, ஏன் இப்படி செஞ்சீங்க? இந்த மெலிதான உடலை வச்சிக்கிட்டு என்னால கடல் மத்தியிலிருந்து வெளியில போக முடியாது.
அப்படி போனா மீன்கள், ஜெல்லி மீன்கள், கடல் நாய்கள் எல்லாமே என்னைய சாப்பிட்டு விடும்.
இந்த கடல் மத்தியில் இருக்கிறது தான் எனக்கு பாதுகாப்பா இருக்கும்.
ஆனா கடல் மத்தியிலேயே இருந்தால் எனக்கு உணவு கிடைக்காது. அப்போ பசியில நான் செத்துடுவேன். எதனால இப்படி பண்ணீங்க? எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க” பெளமா அழுதது.
“சரி நீ யாருக்கும் தெரியாம கடல்ல இருந்து வெளில போயிட்டு வர்றதுக்கு நான் உனக்கு உதவி செய்றேன்” என மந்திரக்காரர் அவருடைய வலது கையின் ஐந்து விரல்களையும் அசைத்தார்.
உடனே அந்த நண்டு அதோட பெரிய உருவத்திலிருந்து அதைவிட குட்டியா குட்டியா அதை விட குட்டி அதை விட குட்டியா ரொம்ப குட்டியா ஆயிடுச்சு.
இந்த குட்டி நண்டை பார்த்ததும் அந்த மனிதரோட குட்டிப் பெண்ணிற்கு ரொம்ப பாவமா இருந்தது.
அதனால அவ தன் கிட்ட இருந்த ஒரு கத்திரிக்கோலை நண்டுக்கு கொடுத்தாள்.
அது போய் நண்டோட கொடுக்கா மாறிடுச்சு.
நண்டு இந்த கொடுக்க அசைத்துப் பார்த்தது. தட்டிப் பார்த்தது. மேலே கீழே ஆட்டிப் பார்த்தது.
“எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு. இதை வைத்து நான் கொட்டைகளை உடைக்கலாம். வளை கட்டலாம். நிறைய உணவு கிடைக்கும். நன்றாக சாப்பிடலாம்” தன்னுடைய கொடுக்கை டக் டக் டக் என அடித்தது.
திரும்பவும் மந்திரக்காரரிடம் கேட்டது. “என்னோட ஓடுகளை திரும்ப குடுங்க. இப்படி மென்மையாக இருந்தால் குட்டி மீன்கள் கூட என்னை சாப்பிட்டு விடும்”
“சரி உன்னோட ஓடுகளை உனக்கு திரும்ப கொடுக்கிறேன். ஆனால் வருஷத்துல 11 மாதங்கள் தான் உன்னுடைய ஓடு கடினமா இருக்கும். ஒரு மாதம் உனக்கு மென்மையான ஓடு தான் இருக்கும். அப்பதான் உனக்கும் உன்னோட குட்டிகளுக்கும் நீங்க ஒரு சாதாரண உயிரினம் தான் அப்படிங்கறதும் நீ செஞ்ச தவறு ஞாபகம் இருக்கும். என்னோட மந்திர வலிமையையும் நீ நியாபகம் வைத்திருப்பாய்”
நண்டோட ஓடை அதற்கு திரும்ப கொடுத்தார் மந்திரக்காரர்.
அப்புறம் மந்திரக்காரரும் மனிதரும் குட்டிப் பெண்ணும் திரும்பவும் அவங்க வீட்டை நோக்கி படகில் போனாங்க.
நீங்க பாத்திருக்கீங்களா? இப்ப கூட நண்டுகள் பகல்லையும் இரவிலும் உணவு தேடி கடல்ல இருந்து கடற்கரைக்கு வரும்.
அங்க அந்த குட்டி பொண்ணு கொடுத்த கத்தரிக்கோல் கொடுக்கை வைத்து பாறைகளுக்கு அடியிலும், கற்களுக்கு அடியிலும் குழி தோண்ரும்.
உள்ள போய் உட்கார்ந்துக்கும். உணவு சாப்பிட்டு திரும்பவும் கடலுக்குள்ள போயிடும்.
இப்படித்தான் இந்த உலகத்தை உருவாக்கின மந்திரக்காரர் எல்லா உயிரினங்களையும் கட்டுப்பாடா வேலை செய்ய வைத்தார்.
மொழிபெயர்ப்பு : ராஜலட்சுமி நாராயணசாமி
Writer: Rudyard Kipling