மகத நாட்டை கருணாகரன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான் .சீரும் சிறப்புமாக அந்த நாடு இருந்தது.
வருடம் முழுவதும் மழை பொழிய நெற்களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தது.
அங்கிருந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
அந்த நேரத்தில் தான் கருணாகர மன்னனுக்கு வித்தியாசமான ஒரு ஆசை தோன்றியது.
அதை நிறைவேற்ற வேண்டி அங்கிருந்த காட்டிற்குள் ஞானியை பார்க்கச் சென்றார் .
ஞானியை பார்க்கச் சென்றவர் வணங்கியபடி ..”முற்றும் அறிந்த ஞானியே ..என்னுடைய சிறிய ஆசையை நிறைவேற்றி வைக்க முடியுமா “என்று கேட்க.. அதற்கு ஞானியோ “என்ன வேண்டும் கூறுங்கள். காத்திருக்கிறேன்”என்று கூறினார் .
“எனது நாட்டில் எனது மக்கள் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.
எந்த குறையும் இல்லை .அதே போல என்னைச் சுற்றி இருக்கின்ற விலங்குகள், பறவைகள் எல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா” என்று சொல்ல ,
ஞானியோ யோசித்தவர் .கையில் இருந்த மாங்கனியை அரசனுக்கு கொடுத்தார்.
“நம்மைப் போலவே நம்மை சுற்றி இருக்கும் உயிரினங்கள் பேசினால் எப்படி இருக்கும் என்று சற்றே கற்பனை செய்து பாருங்கள் அரசே ..பிறகு முடிவு செய்துவிட்டு இங்கே வாருங்கள் .நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்று அனுப்பி வைத்தார்.

மன்னரும் மகிழ்ச்சியோடு புறப்பட்டார்.
அன்றைக்கு அந்த மாங்கனியை உண்டவர் இரவில் தூங்க அங்கே அவர் ஆசைப்பட்டது கனவாக விரிந்தது.
அரண்மனையில் விருந்து உபச்சாரம் செய்து கொண்டிருக்க ..அவரது கையில் இருந்து சில பருக்கைகள் தரையில் விழுந்தன.
அந்த நேரத்தில் அங்கே ஓடிவந்த எறும்பு ஒன்று சத்தமாக தனது கூட்டத்தினரை அழைத்தது .
“ஓடிவாருங்கள்.. ஓடிவாருங்கள் எல்லாரும் இங்கு ஓடி வாருங்கள் .
நமக்கு இன்றைக்கு நல்ல வேட்டை.. பெரிய உணவு கிடங்கே கீழே விழுந்து இருக்கிறது .
இதை எடுத்துக் கொண்டு சென்றால் வருடம் முழுவதும் வைத்து உண்ணலாம் “என்று சத்தமிட சற்றே ஆச்சரியமாக கீழே பார்த்தார் .
அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.. விழுந்ததோ சில பருக்கைகள்தான்.
இந்த எறும்புகள் என்ன இப்படி சொல்கிறது என நினைத்தவர் அங்கிருந்து நகர்ந்தார்.
தோட்டத்திற்கு செல்ல அங்கோ ஒரு புறா இன்னொரு புறாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தது..
“மழை வரும் போலிருக்கிறது நமது குஞ்சுகளை பாதுகாக்க வேண்டுமே..
சரியான அளவில் கூடுகள் இருக்கிறதா” என்று கேட்க,” நாம் அரண்மனையின் ஒரு பகுதியில் அல்லவா வசிக்கிறோம் .இங்கே மழையால் எந்த பாதிப்பும் வராது “என்று சொல்லி கொண்டு பறந்தது .
அதையும் பார்த்துக்கொண்டே நகர, சற்று தொலைவில் இருந்த குதிரையோ இன்னொரு குதிரையிடம் “பயிற்சி பயிற்சி என்று நம்மை உயிரோடு சாகடிக்கிறார்கள். எதற்காக போர் என்று நம்மை அழைத்துக் கொண்டு சென்று சாகடிக்க வேண்டும் .
இந்த மன்னன் நல்லவனே கிடையாது “என்று சொல்ல அவருக்கு சற்று அதிர்ச்சி தான் பிறகு யோசனையோடு மேலும் சற்று நேரம் சுத்திக்கொண்டிருந்தார்.
அங்கிருந்த ஒவ்வொரு உயிரினங்களுமே ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருக்க ஏனடா இதையெல்லாம் கேட்க ஆசைப்பட்டோம் என தோன்றி இருந்தது.
அடுத்த நாள் காலையில் மறுபடியும் ஞானியை பார்க்க சென்றார் .
“மன்னர் மன்னா இன்னும் உங்களுடைய ஆசை அப்படியே தான் இருக்கிறதா “என்று கேட்க,
“ இல்லை சுவாமி.. நாம் நம் வரையில் கவனித்தால் மட்டுமே போதும் .
மற்றவற்றை கவனிக்க ஆரம்பித்தால் நம்முடைய நிம்மதி போய்விடும். நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” என்று வணங்கிவிட்டு வந்தார்.
என்ன குழந்தைகளை இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா..
தேவையில்லாதவற்றையெல்லாம் நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் சில நேரங்களில் நமக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சும்..