டால்ஃபியும் குட்டிக் கண்ணனும்!

நாலாவது படிக்கற சின்ன கண்ணனுக்கு பக்கத்து வீட்டு டால்ஃபி நாய் கூட விளையாட ரொம்ப பிடிக்கும். அந்த நாய் டாக்டர் மோகனுடையது. அவர் ஒரு கால்நடை மருத்துவர்.

அவன் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும் எப்பவும் பக்கத்து வீட்டுக்கு ஓடிப்போய் டால்ஃபி கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு வருவான்.

தன் வீட்டு செல்லப் பிராணி கூட கண்ணன் அப்படி விளையாட வரது டாக்டர் மோகனுக்கு மகிழ்ச்சியா இருந்தது.

ஒரு நாள் கண்ணன் டால்ஃபியோட விளையாடும்போது டால்ஃபி எதையோ பாத்து சத்தமா குரைச்சிகிட்டே, தோட்டத்து சின்ன கேட் வழியா வெளிய ஓடி போச்சு.

“நோ! டால்ஃபீ! ஓடாத! ஓடாத” என்னு கத்திகிட்டே, கண்ணனும் டால்ஃபி பின்னாடியே ஓடினான்.

டால்ஃபி ரொம்ப வேகமா ஓடினதால கண்ணனால அதை சரியா பின் தொடர முடியல. அது எங்க போச்சுன்னு புரியாம தேட ஆரம்பிச்சான்.

“டால்ஃபீ! டால்ஃபீ!” ன்னு சத்தமா கூவிகிட்டே அதத் தேடினான்.

அப்டித் தேடித் தேடி வீட்டுல இருந்து ரொம்ப தூரம் போயிட்டான்.

அவனுக்கு டால்ஃபீ எங்கன்னு தெரியல. தன் வீட்டுக்கு திரும்பிப் போற வழியும் தெரியல.

படம்: அப்புசிவா

இருட்ட ஆரம்பிச்சதால அவனுக்கு பயமா இருந்தது.  அழுகை வர ஆரம்பிச்சது.

“ம்! ம்! அம்மா!” ன்னு விசும்பி அழ ஆரம்பிச்சான்.

இருட்டில வெளிய போனா வேம்பைர் வரும்ன்னு அவனுடைய பாட்டி சொன்ன கதை அவனுக்கு ஞாபஙம் வந்துச்சு. அத நெனச்சு இன்னும் பயந்து ஓ! ன்னு அழ ஆரம்பிச்சான்.

அப்ப அவன் பின்னாடி யாரோ ஓடி வர மாதிரி இருந்துச்சு.

அவன் திரும்பி பார்த்தப்ப இருட்டில அவனுக்கு எதுவுமே தெரியல.

“யாரு?” அப்டீன்னு நடுங்கிகிட்டே குரல் கொடுத்தான் கண்ணன்.

ஆனா அவன் கேட்டதுக்கு யாருமே பதில் சொல்லல.

இப்ப என்ன பண்றதுன்னு புரியாம ஓட ஆரம்பிச்சான்.

பின்னால வந்த உருவமும் அவன பின் தொடர்ந்து ஓடி வர ஆரம்பிச்சது.

கண்ணன் பயத்தில,

“என்ன ஒண்ணும் பண்ணிடாத! ப்ளீஸ்! என்ன ஒண்ணும் பண்ணிடாத..” அப்டீன்னு சொல்லி அழுதான்.

அந்த உருவம் அவன் கிட்ட வந்து அவன் கையப் புடிக்க, அவன் இன்னும் அதிக பயத்தில நடுங்கினான்.

எங்கிருந்தோ ஒரு சின்ன லைட் வெளிச்சம் அந்த உருவத்து மேல விழ, அந்த உருவத்தோட ரெண்டு கண்களும் கொழுந்து விட்டு எரியற நெருப்பு துண்டம் மாதிரி தகதகன்னு ஜொலிச்சது.

“ஐயோ! வேம்பைர் என் கிட்ட வந்துடுச்சு. அது என்னை கடிச்சிட்டா நானும் வேம்பைர் ஆயிடுவேன். வேணாம்! என்ன கடிக்காத! பிளீஸ்!” அப்டின்னு கத்திகிட்டே கீழ விழப் போனான்.

அப்ப அவனை வேற ஒரு உருவம் தூக்கிகிச்சு. அவன் இன்னும் அதிகமான பயத்தில அலற ஆரம்பிக்க, சட்டுன்னு அந்த இடத்தில இருந்த லைட்டெல்லாம் எரிய ஆரம்பிச்சது. ஒரு நொடியில அந்த இடமே பிரகாசமா ஆயிடுச்சு.

“கண்ணா! கண்ணா! பயந்துட்டியா? இங்க பாரு! நாந்தாண்டா! கண்ண தொறந்து பாரு!” அப்டீன்னு டாக்டர் மோகனோட குரல் கேட்டுது.

உடனே கண்ணன் கண்ணைத் தொறந்து பாத்தான்.

டாக்டர் மோகன் அவனை தூக்கிட்டிருந்தாங்க. அவர் பக்கத்தில அவரோட செல்லப் பிராணி டால்ஃபி நின்னுட்டிருந்துச்சு.

“இது வேம்பைர் இல்லையா? நம்ம டால்ஃபீதானா!” அப்டீன்னு கேட்டுகிட்டே அவர் கையிலிருந்து குதிச்சு டால்ஃபி கிட்ட ஓடிப் போய் அதக் கட்டி புடிச்சிகிட்டான்.

“அவ்! அவ்!” ன்னு டால்ஃபி குரைச்சது.

“வேம்பைர்லாம் எதும் கிடையாது கண்ணா!  விலங்குகளோட கண்கள் இருட்டில எரியற நெருப்பு மாதிரி ஜொலிக்கும்னு உனக்கு தெரியாதா?” அப்டீன்னு டாக்டர் மோகன் கேட்டார்.

“தெரியாது அங்கிள்.” அப்டின்னு சொன்ன கண்ணனை டாக்டர் திரும்பியும் தூக்கிகிட்டார்.

“இந்த மாதிரி ஆவி பூதம் பேய் பிசாசு வேம்பைர் மாதிரி கதைல்லாம் சும்மா ஜாலிக்கு சொல்றாங்க. அதெல்லாம் உண்மை கிடையாதுடா கண்ணா. பயப்படாத! சரியா?” ன்னு டாக்டர் சொன்னார்.

“சரி அங்கிள்!”

“உன்னோட அம்மா அப்பா கிட்ட சொல்லாம இப்டி தனியா எங்கியும் வரக் கூடாது. சரியா?”

“இல்ல.. டால்ஃபீ பின்னாடி ஓடி வந்தேனா! அது நடுல எங்கியோ மிஸ் ஆகிடுச்சு.. எனக்கும் இருட்டில வீட்டுக்கு வர வழி தெரியல..” என்றான்.

“டால்ஃபீ எங்க போனாலும் அதுக்கு வீட்டுக்கு வர வழி தெரியும். இனிமே அது இப்டி ஓடிச்சுன்னா நீயும் அது பின்னாடி ஓடி வராத.. நீ பேசாம வீட்டு வாசல்லயே நில்லு. அதுவே உன்னத் தேடி ஓடி வந்துடும்.” அப்டீன்னார் டாக்டர்.

“ம்! சரி அங்கிள். இனிமே இப்டி வரவே மாட்டேன்.” அப்டீன்னான் கண்ணன்.

டாக்டர் கண்ணனை பத்திரமா வீட்டுக்கு தூக்கிட்டு வந்தார்.

அவனுடைய அம்மாவும் அப்பாவும் அவனக் காணலையேன்னு ரொம்ப கவலையா இருந்தாங்க.

டாக்டர் அவனை தூக்கிட்டு வரத பாத்துட்டு ஓடி வந்து அவனை தூக்கி கொஞ்சி முத்தம் குடுத்தாங்க.

“குழந்தைக்கு வேம்பைர் கதைல்லாம் சொல்லி குடுக்காதீங்க. தைரியம் வளருற மாதிரி நம்ம நாட்டு மன்னர்களைப் பத்தி சொல்லி குடுங்க!” அப்டீன்னு சொன்னார் டாக்டர்.

அப்ப திரும்பவும் கரண்ட் கட் ஆக, டால்ஃபியோட கண்ணு தகதகன்னு ஜொலிச்சது.

அதப் பார்த்த கண்ணனோட அம்மாவும் அப்பாவும், “வேம்பைர்! வேம்பைர்!” ன்னு அலறினாங்க.

உடனே கண்ணன்,

“அம்மா! அப்பா! பயப்படாதீங்க.. அது வேம்பைர் இல்ல! நம்ம டால்ஃபீதான்!” அப்டீன்னு சொல்லிகிட்டே டால்ஃபீகிட்ட ஓடிப் போய் அத கட்டி புடிச்சிகிட்டான்.

டால்ஃபி, “அவ்! அவ்!” ன்னு செல்லமா குரைச்சது.

கரண்டும் அந்த நேரத்தில வந்துச்சு.

“குட் கண்ணா! சரியா புரிஞ்சிகிட்டியே! இனிமே பேய் பிசாசு வேம்பைர் பத்தி யாராவது கத சொன்னா பயப்பட மாட்டதானே?” அப்டீன்னு டாக்டர் கேக்க,

‘பயப்படவே மாட்டேன் அங்கிள்,” ன்னு கண்ணன் சொன்னான்.

அவன் சொன்னத சரின்னு சொல்ற மாதிரி டால்ஃபீயும்,

“அவ்! அவ்!” ன்னு சொல்லிட்டே கண்ணனை கொஞ்சியது.

♥♥♥♥♥♥♥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *