சச்சுவும் சாராவும் நெருங்கிய நண்பர்கள், அவர்களுக்கு விலங்குகள் பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் அவர்கள் தாங்கள் காணும் விலங்குகள், பறவைகள் பற்றி நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான தகவலை நமக்கு தருவார்கள் அதுவும் சும்மா வார்த்தையால் இல்லை அழகிய சிறார்களுக்கு பிடித்த பாடல்களாய்.
பாடல் -1(மைனா )
“சாரா, இன்னிக்கு நான் ஒரு புதிய பறவை ஒன்னு பார்த்தேன்” என்று சச்சு கூற “அப்படியா! என்ன பறவை எப்படி இருந்தது? சீக்கிரம் சொல்லு எனக்கு ரொம்ப ஆவலாய் இருக்கு” என்று சச்சுவிடம் கேட்டாள் சாரா.
“அந்த பறவை பேரு மைனாவாம் , பார்க்க ரொம்ப அழகா இருந்தது தெரியுமா”என்றான் சச்சு.

“பேரே அழகாதான் இருக்குது, அப்பறம் வேற என்னலாம் இருந்தது அந்த பறவைக்கு, என்ன நிறத்துல இருக்கும் எல்லாம் சொல்லு” என்று சச்சுவை சாரா நச்சரிக்க” அவசரப் படாத எல்லாத்தையும் பொறுமையா பாட்டில் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ” என்று பாடத் தொடங்கினான் சச்சு.
‘மஞ்சள் நிறத்தின் அலகிலே
மரத்தில் வாழும் குருவியே
நெஞ்சை மயக்கும் குரலிலே
நிறைவாய் பாடும் நாளுமே
கருப்பாய் இருக்கும் தலையிலே
கறுத்த கொண்டை அழகுமே
இருட்டை கண்ட கூட்டமே
இரவில் கூடி அடையுமே
இரையாய் பூச்சி புழுவையே
இனிதாய் புசித்து மகிழுமே
விரைந்து பறந்து களிக்குமே
விடியல் பொழுது ஒலிக்குமே!'”
“நீ பாடுறதை கேட்கறப்ப எனக்கும் அந்த மைனா குருவியை பார்க்கணும் போல இருக்கு சச்சு”
“கவலைப் படாத சாரா அடுத்த தடவை மைனாவை பார்க்கும் பொழுது உன்னையும் கண்டிப்பா கூட்டிட்டு போறேன்”
-தொடரும்