
Around the World in 80 Days
ஜூல்ஸ் வெர்னே
தமிழில் – அகிலாண்டபாரதி
அத்தியாயம் 7
பாஸர்பார்ட்டவுட்டை அடித்தது வேறு யாரும் அல்ல, காவலர் ஃபிக்ஸ் ஹாங்காங் நகரில் தன் உதவிக்காக நியமித்திருந்த ஒரு மனிதர் தான். “சரியான நேரத்தில் அவன் தலையில அடிச்சே.. இப்ப இவன் மயங்கி விழுந்துட்டான். இவங்க போக வேண்டிய ‘கர்நாடிக் கப்பல்’ நாளைக்கு கிளம்புறதுக்குப் பதில் இன்னைக்கே போகுதுங்குற தகவலை இவன்தான் போய் முதலாளி கிட்ட சொல்லணும். இப்ப அவருக்கு விஷயம் தெரியாதுல்ல.. அவர் கப்பலை பிடிக்க முடியாது. நாளைக்குள்ள அவரைக் கைது செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்” என்று வெற்றிக் களிப்பில் கூறிவிட்டுச் சென்றார்.
அவர் எதிர்பார்த்ததைப் போலவே, கப்பல் முன்கூட்டிய தினமே கிளம்பும் செய்தியை அறியாத ஃபாக் மற்றும் அவ்டா இருவரும் கப்பலைத் தவற விட்டுவிட்டனர். மறுநாள் காலையில் தங்களின் தங்குமிடத்திலிருந்து கப்பலுக்குக் கிளம்பும் போது, ‘பாஸர்பார்ட்டவுட்டை நேற்றிலிருந்து பார்க்கவில்லையே, எங்கே போனான்?’ என்று ஃபாக் பரபரப்புடன் தேடினார்.
இப்போது ஏதுமறியாத பாவனையில் ஃபிக்ஸ் அவரிடம் வந்தார். “கப்பல் திட்டமிட்ட நேரத்துக்குப் பதிலா நேத்தே போயிடுச்சாம்.. எனக்கும் இப்பதான் தெரியும்” என்று வருத்தம் தெரிவிப்பது போல் நடித்தார்.
“அடடா! இது வேறயா? இப்ப கர்நாடிக் கப்பலை பிடிக்கணுமே.. பாஸர்பார்ட்டவுட்டை வேற காணோம்.. வேற ஏதாவது படகு இல்ல கப்பல் இருக்கான்னு பாத்துட்டு வரேன்” என்று கிளம்பிய ஃபாக் படகுக் குழாமிற்குச் சென்றார்.
ஒரு மணி நேரத்தில் திரும்பிய அவர், “ஷாங்காய் நகரத்துக்கு ஒரு படகு போகப்போகுது. அங்கே போய் கர்நாடிக் கப்பலை பிடிச்சுடலாம். சரியான நேரத்துக்கு கர்நாடிக் கப்பலை பிடிச்சிட்டா நாம அமெரிக்காவில் இருக்கிற சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்குப் போக முடியும்” என்றார்.
ஃபிக்ஸ் மகிழ்ச்சி அடைவது போல் நடித்து, “ரொம்ப சந்தோஷம்! நீங்க திறமைசாலி தான். ஒரு கப்பலை விட்டுட்டாலும் அதை மீண்டும் பிடிக்கிறதுக்கான வழியை கண்டுபிடிச்சிட்டீங்களே” என்றார்.
“நீங்களும் எங்க கூட வரலாமே?” என்று ஃபாக் அழைக்க, போனால் போகிறது என்று ஒத்துக் கொள்வது போல் காட்டிக்கொண்ட ஃபிக்ஸ் ஃபாக் மற்றும் அவ்டாவுடன் இணைந்து கொண்டார். கிளம்பும் முன்பாக ஹாங்காங் நகரக் காவல் துறையை அணுகிய ஃபாக்,
“என்னுடைய பணியாளர் ஒருத்தரைக் காணோம். அவர் பெயர் பாஸர்பார்ட்டவுட்” என்று கூறி அவரது விபரங்களையும் அளித்து,
“அவரைக் கண்டுபிடிச்சு குடுங்க.. கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, அவர்கிட்ட செலவுக்கு இந்த பணத்தையும் கொடுங்க. நாங்க கர்நாடிக் கப்பலைப் பிடிக்க போயிட்டு இருக்கிறோம் என்கிற தகவலை சொல்லிடுங்க.. அவன் திறமைசாலி. எப்படின்னாலும் என்கிட்ட வந்து சேர்ந்திடுவான்” என்று கோரிக்கை விடுத்துவிட்டுக் கிளம்பினார்.
ஃபாக் பிடித்திருந்த படகின் பெயர் ‘டாங்க்கடியர்’. அந்தப் படகில் நான்கு பணியாளர்கள் இருந்தார்கள். அந்தப் பயணத்தில் ஃபாகை உற்றுக் கவனித்த ஃபிக்ஸிற்கு, ‘இவர் கொஞ்சம் நல்ல மனுஷனாத் தான் இருக்கார். ஒருவேளை இவர் பக்கம் நியாயம் இருக்குமோ’ என்ற எண்ணம் தோன்றியது. இருந்தாலும், ‘எனக்கு என்னமோ இன்னும் இவர் தான் வங்கிக் கொள்ளையரா இருப்பார்னு சந்தேகமா இருக்கு’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
மூன்று நாட்கள் பயணித்த நிலையில் டாங்க்கடியர் படகு ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிக் கொண்டது. இருந்தாலும் கஷ்டப்பட்டு தொடர்ந்து பயணித்தது. ஷாங்காய் நகரத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இவர்கள் இருந்தபோது, ‘கர்னாடிக்’ கப்பல் இவர்கள் கண்ணில் பட்டது. ‘டாங்க்கடியர்’ படகின் மாலுமிகள் உதவிக்கு வருமாறு ஒரு பீரங்கி மூலம் அழைப்பு விடுக்க, கர்நாடிக் கப்பலில் உள்ளவர்கள் அதை சரியான நேரத்தில் கவனித்து டாங்கடியரை நோக்கி வந்தார்கள். கர்னாடிக் கப்பலை ஒரு வழியாகப் பிடித்து விட்டார்கள் ஃபாகும், அவ்டாவும்!
அதேசமயம் தலையில் பட்ட காயத்தினால் சுயநினைவை இழந்த பின், சற்று நேரத்தில் கண்விழித்த பாஸர்பார்ட்டவுட், கர்நாடிக் கப்பல் கிளம்புவதற்கு சற்று முன்பாக அதில் ஏறி விட்டார். ஏறிய பின்தான் அவருக்குத் தெரிந்தது. அவருடைய முதலாளியும் அவ்டாவும் அந்தக் கப்பலில் இல்லை என்பது. கப்பலில் ஏறிவிட்டாலும் அவரிடம் அந்தப் பயணத்திற்கும், கைச்செலவுக்கும் கையில் பணமில்லை. கர்நாடிக் கப்பல் யோகஹாமா நகரத்தின் துறைமுகத்தை அடைந்தபோது பாஸர்பார்ட்டவுட் கப்பலில் இருந்து கிளம்பி வெளியே நடந்து சென்றார். அங்கே அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த உடைகளை விற்றுவிட்டு எளிமையான உடைகளை வாங்கிக் கொண்டார். கையில் கிடைத்த பணத்தில் கொஞ்சம் உணவு சாப்பிட்டு விட்டு செலவுக்கு வைத்துக் கொண்டார்.
‘முதலாளி எப்படியாவது அமெரிக்காவுக்குப் போயிடுவார், நாமும் அமெரிக்கா போகிற கப்பல் எதையாவது பிடிப்போம் அங்கே அவரைச் சந்திக்க முடியுதான்னு பார்ப்போம்’ என்று நினைத்த பாஸர்பார்ட்டவுட் துறைமுகத்தில் ஒரு கோமாளியைச் சந்தித்தார். அந்த கோமாளியின் கையில் ஒரு தகவல் பலகை இருந்தது. அதைப் பார்த்தவுடன் துறைமுகத்தில் கூடும் பயணிகளை மகிழ்விக்க அமைக்கப்பட்ட இசை நாடகக் குழுவில் அந்தக் கோமாளியும் ஒருவர் என்பது பாஸர்பார்ட்டவுட்டுக்குப் புரிந்தது.
அந்த கோமாளியின் பின்னாலே சென்ற பாஸர்பார்ட்டவுட் அந்தக் குழுவின் தலைவரைச் சந்தித்தார். “உங்க குழுவுல எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா?” என்று பாஸர்பார்ட்டவுட் அவரிடம் கேட்க, “தலைகீழ நின்னு பாடுறதுக்கு எங்களுக்கு ஒரு ஆள் வேணும். உன்னால முடியுமா?” என்று கேட்டார் அந்த நாடக குழுவின் தலைவர்.
“ஓ! தாராளமாக!” என்றதும் உடனடியாக பாஸர்பார்ட்டவுட்டை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார் நாடக முதலாளி. அப்போதே அங்கு திறந்த வெளியில் ஒரு நிகழ்ச்சி துவங்கியது. இவர்களது நடனம் மற்றும் இசையில் ஈர்க்கப்பட்டு பொதுமக்கள் பாராட்டி கைதட்டினர்.

அந்த குழுவினரின் மத்தியில் முதலாளி ஃபாக் மற்றும் அவ்டா இருப்பதைப் பார்த்தார். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஃபாகுக்கும் தன் பிரியமான ஊழியரைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி! இருவரும் கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
“நான் கடைசி நேரத்தில் கர்னாட்டிக் கப்பலைப் பிடிச்சிட்டேன். ஆனா உங்க கிட்ட தகவல் சொல்ல முடியல!” என்று பாஸர்பார்ட்டவுட் கூற, “நாங்களும் கொஞ்சம் முன்னாடி ஷாங்காய் பக்கத்தில் வச்சு தான் அதே கப்பலைப் பிடிச்சோம். நாங்க ஏறியது உனக்குத் தெரிஞ்சிருக்காது. எப்படியோ மீண்டும் ஒன்றாக சேர்ந்துட்டோம். அது போதும்!” என்றார் ஃபாக்.
அடுத்ததாக ஜெனரல் கிராண்ட் என்ற கப்பல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை நோக்கிப் பயணிப்பதாக இருந்தது. மூவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் துவங்கினர்!
தொடரும்
(ஃபிலியாஸ் ஃபாகின் இதுவரையிலான பயணம்: லண்டன் —–> டோவர் ——> பாரிஸ் —–> டூரின் ——> பிரிண்டிசி ——-> சூயஸ் கால்வாய் —–> ஏடன் நகரம் ——-> பம்பாய் ——-> கல்கத்தா —–> ஹாங்காங் —–> டாங்கடியர் கப்பல் மூலமாக ஷாங்காய் நகரம் —–> அங்கிருந்து யொகஹாமா. ஜெனரல் கிராண்ட் கப்பல் மூலமாக அமெரிக்கா நோக்கிய பயணம்)

