(ANNE OF GREEN GABLES)
Lucy Maud Montgomery
(தமிழாக்கம் – ஞா. கலையரசி)

மறுநாள் பிற்பகலில் அடுப்பங்கரை சன்னல் அருகே அமர்ந்து தையல் வேலை செய்து கொண்டிருந்தாள் ஆனி. அப்போது அவள் தற்செயலாகச் சன்னல் வழியே வெளியே பார்த்த போது அங்கே டயானா நின்று சைகை செய்து கூப்பிட்டாள், அடுத்த கணம் ஆனி வீட்டை விட்டு வெளியே பாய்ந்து ஓடினாள். அவள் கண்களில் ஆச்சரியமும் நம்பிக்கையும் தென்பட்டன. ஆனால் டயானாவின் வாடிய முகத்தைக் கண்டவுடன் அவள் நம்பிக்கை தகர்ந்தது.
“உன் அம்மாவின் மனம் இன்னும் மாறவில்லையா?” என்று ஆனி மூச்சிரைக்கக் கேட்டாள். டயானா சோகத்துடன் தலையாட்டினாள்.
“இல்லை ஆனி. இனிமேல் எப்போதுமே உன்னுடன் விளையாடக்கூடாது என்று அம்மா சொன்னார். நான் அழுதேன், அழுதேன், அப்படி அழுதேன். அது உன் தவறே இல்லை என்று சொன்னேன். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. உன்னிடம் வந்து சொல்லிவிட்டு விடை பெறுவதற்கே மிகவும் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்றேன். அதற்குப் பத்து நிமிடம் மட்டுமே கொடுத்திருக்கிறார். அம்மா வீட்டில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.”
“நிரந்தரமாக நாம் பிரியப் போவதைச் சொல்லப் பத்து நிமிடம் ரொம்பக் குறைவு தான்,” என்றாள் ஆனி அழுது கொண்டே.
“டயானா! எதிர்காலத்தில் உனக்கு எத்தனை நெருக்கமான தோழிகள் கிடைத்தாலும், உன் சிறுவயது தோழியான என்னை எப்போதும் மறக்கமாட்டேன் என்று உன் நெஞ்சைத் தொட்டு ஒரு வாக்குறுதி தருவாயா?”
“நிச்சயமாகத் தருகிறேன். இனிமேல் எனக்கு இன்னொரு நெருங்கியத் தோழி கிடையாது. வேறு யாரையும் நெருங்கியத் தோழியாகக் கொள்ள விரும்பவில்லை. உன்னை நேசிப்பது போல வேறு யாரையும் என்னால் நேசிக்க முடியாது.”
“ஓ, டயானா! ‘நீ என்னை நேசிக்கிறாயா?’ என்று ஆனி கைகளைச் சேர்த்துக் கொண்டு கூவினாள்.
“நிச்சயமாக. ஏன் உனக்குத் தெரியாதா?”
“தெரியாது.” ஆனி நீண்ட பெருமூச்சு விட்டாள். “உனக்கு என்னைப் பிடிக்கும் என்று நிச்சயமாகத் தெரியும். ஆனால் என்னை நேசிக்கிறாய் என்று எப்போதும் நம்பியதில்லை. யாருமே என்னை நேசிக்க முடியாது என்று நினைத்திருந்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் யாரும் என்னை நேசித்ததில்லை. ஆஹா! இது எவ்வளவு அற்புதம்! உன்னிடமிருந்து பிரிந்த பிறகான என் இருண்ட வாழ்க்கைப் பாதையில் எப்போதும் ஒளி வீசும் ஓர் ஒளிக்கதிர் இது! டயானா, எங்கே, அதை இன்னொரு முறை சொல்லேன்.”
“உன் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன் ஆனி. என்றென்றும் அப்படியே இருப்பேன். அது உறுதி” என்றாள் டயானா.
“நானும் என்றென்றும் உன் மீது அன்பு செலுத்துவேன், டயானா,” என்று சொன்னபடி ஆனி கையை நீட்டினாள். “நாம் சேர்ந்து வாசித்த அந்தக் கதையில் வந்தது போல இனி வரும் காலத்தில் என் தனிமையான வாழ்க்கையின் மேல் ஒரு நட்சத்திரமாக உன் நினைவு ஒளி வீசும். நம் பிரிவின் நினைவாக உன் கருங்கூந்தலில் இருந்து ஒரு சின்னச் சுருள் முடியை எனக்குத் தருவாயா?”
“அதை வெட்ட ஏதாவது உன்னிடம் இருக்கிறதா?” கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சகஜ நிலைக்குத் திரும்பிய டயானா கேட்டாள்.
“நல்லவேளை, என் முன்சட்டைப் பையில் தையல் கத்தரிக்கோல் இருக்கிறது,” என்றாள் ஆனி.
அவள் மிகுந்த கவனத்துடன் டயானாவின் ஒரு சுருள் முடியைக் கத்தரித்தாள்.
“போய் வா என் அன்புத் தோழியே, இனிமேல் நாம் அக்கம் பக்கத்தில் வாழ்ந்தாலும் அந்நியர்களைப் போல இருக்க வேண்டும். ஆனால் என் இதயம் என்றும் உன்னை உண்மையாக நேசிக்கும்.”
டயானா கண்ணில் இருந்து மறையும் வரை ஆனி அங்கேயே நின்று அவள் திரும்பிப் பார்த்த போதெல்லாம் கைகளை ஆட்டி டாட்டா காட்டினாள். வீட்டுக்குத் திரும்பிய ஆனி, “எல்லாம் முடிந்துவிட்டது” என்று மரிலாவிடம் கூறினாள்.
“எனக்கு இனிமேல் நெருங்கியத் தோழி என்று யாரும் இல்லை. இப்போது நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். டயானாவும் நானும் உணர்வுபூர்வமாக விடை பெற்றோம். அந்த நிகழ்வு என்றும் புனிதமாக என் நினைவில் இருக்கும். டயானா தன் முடியிலிருந்து ஒரு சின்னச் சுருளைக் கொடுத்தாள். அதை ஒரு சிறிய பையில் தைத்து என் கழுத்தில் வாழ்நாள் முழுவதும் அணிந்து கொள்வேன். நான் இறந்த பிறகு அதை என்னுடன் புதைக்க வேண்டும். நான் நீண்ட காலம் உயிர் வாழ்வேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஒருவேளை என் இறந்த உடலைப் பார்த்த பிறகாவது திருமதி பேரி தாம் செய்த தவறுக்காக வருந்தி, டயானாவை என் இறுதிச் சடங்குக்கு அனுப்பக்கூடும்.”
“நீ இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் வரை துக்கத்தால் இறந்து விடுவாய் என்று நான் பயப்படத் தேவையில்லை ஆனி” வருத்தம் சிறிதுமின்றி மரிலா சொன்னார்.
அடுத்த திங்கட்கிழமை, புத்தகக் கூடையுடன் கீழே வந்த ஆனியைப் பார்த்து மரிலா ஆச்சரியமடைந்தார்.
“நான் மறுபடியும் பள்ளிக்குச் செல்கிறேன்,” என்று ஆனி அறிவித்தாள். “என் தோழி என்னிடமிருந்து கொடூரமாகப் பிரிக்கப்பட்ட பிறகு என் வாழ்வில் எஞ்சி இருப்பது பள்ளி ஒன்று தான். அங்கே அவளைப் பார்த்துக் கொண்டு, கடந்து போன பழைய இனிய நாட்களை நினைத்துக் கொண்டிருப்பேன்.”
“அதை விட உன் பாடங்களையும் கணக்குகளையும் நினைத்தால் நல்லது” என்றார் மரிலா, தம் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல்.
“மீண்டும் பள்ளிக்குப் போகும் நீ, சிலேட்டால் யார் தலையையும் உடைக்கமாட்டாய் என்று நம்புகிறேன். ஒழுங்காக நடந்து கொண்டு உன் ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய்.” என்றார் மரிலா.
“நான் ஒரு முன்மாதிரி மாணவியாக இருக்க முயற்சிப்பேன்,” என்று ஆனி சோகமாகச் சொன்னாள். ஆசிரியர் மிஸ்டர் பிலிப்ஸ், மின்னி ஆண்ட்ரூஸ் ஒரு முன்மாதிரி மாணவி என்று சொன்னார். ஆனால் அவளிடம் கற்பனையோ உயிர்ப்போ இல்லை. அவள் மிகவும் மந்தமானவள். ஆனாலும் இப்போது நான் மிகவும் மனம் உடைந்திருப்பதால், அவளைப் போல இருப்பது எனக்கு எளிது தான்.”

ஆனி பள்ளிக்குத் திரும்பி வந்தவுடன் அனைவரும் அவளை அன்புடன் வரவேற்றனர். விளையாட்டுகளில் அவளது கற்பனைத் திறனும், பாடல்களில் அவளது குரலும், மதிய நேரத்தில் புத்தகங்களை நாடகத் தன்மையுடன் வாசிக்கும் திறனும் அனைவரையும் கவர்ந்தவை. அவள் இல்லாததால் அவற்றை எல்லாம் இழந்து வருத்தத்தில் இருந்தனர். ஆளாளுக்கு ஒரு பரிசுப் பொருளைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தனர். மாணவிகள் மட்டுமின்றி மாணவர்களும் அவளைப் பாராட்டி வரவேற்றனர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆனி தன் இருக்கைக்கு வந்த போது முன்மாதிரி மாணவியான மின்னி ஆண்ட்ரூஸ் பக்கத்தில் மிஸ்டர் பிலிப்ஸ் அவளை அமரச் சொன்னார். ஆனி மேசையின் மேல் ஒரு பெரிய சுவையான ஸ்ட்ராபெரி ஆப்பிள் இருந்தது.
ஆனி அதை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கடிக்கப் போனாள். அவோன்லியாவில் கில்பர்ட் தோட்டத்தில் மட்டுமே அந்த ஆப்பிள் விளையக் கூடியது என்று அப்போது அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே நெருப்பைத் தொட்டது போல் அந்த ஆப்பிளைக் கீழே போட்டுவிட்டுக் கைக்குட்டையில் விரல்களைத் துடைத்தாள். மறுநாள் காலையில் வகுப்பைக் கூட்டிச் சுத்தம் செய்யும் சிறுவன் அந்த ஆப்பிளை எடுத்துக் கொண்டான்.
எல்லாரிடமிருந்தும் பாராட்டு கிடைத்தாலும் டயானாவின் பாராமுகம் ஆனியை வருத்தமடையச் செய்தது. “டயானா ஒரு முறை என்னைப் பார்த்துப் புன்னகை செய்திருக்கலாம்” என்று அன்று இரவு மரிலாவிடம் ஆனி வருத்தத்துடன் கூறினாள்.
ஆனால் மறுநாள் காலை, மடிக்கப்பட்ட ஒரு கடிதமும், ஒரு சிறிய பொட்டலமும் ரகசியமாக ஆனியிடம் வந்து சேர்ந்தன. கடிதத்தைப் பிரித்து வாசித்தாள் ஆனி.
“அன்புள்ள ஆனி,
உன்னுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என்று அம்மா சொல்லி இருக்கிறார். அது என் தவறில்லை. என் மீது கோபப்படாதே. நான் எப்போதும் போல உன்னை நேசிக்கிறேன். என் எல்லா ரகசியங்களையும் உன்னிடம் சொல்ல முடியாமல் மிகவும் வருந்துகிறேன். என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் கெர்டி பையை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. சிவப்பு டிஷ்யூ காகிதத்தால் ஒரு புதிய புத்தகக் குறிப்பு அட்டையை (bookmark) உனக்காகச் செய்திருக்கிறேன். அது தான் இப்போது ஃபேஷன். பள்ளியில் மூன்று பெண்களுக்கு மட்டுமே அதைச் செய்யத் தெரியும். அதைப் பார்க்கும் போதெல்லாம் என்னை நினைத்துக்கொள்.
உன் உண்மையான தோழி,
டயானா.”
ஆனி கடிதத்தை வாசித்துவிட்டுப் புத்தகக் குறிப்பு அட்டைக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். உடனே பதில் எழுதி டயானாவுக்கு அனுப்பினாள்.
“என் அன்பு டயானா,
நீ உன் அம்மா சொல்படி தான் நடக்க வேண்டும் என்பதால், உன்மீது கோபம் இல்லை. நாம் பேச முடியாவிட்டாலும் நம் ஆன்மாக்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும். நீ கொடுத்த அழகான பரிசை நான் என்றும் பாதுகாப்பேன்.
மின்னி ஆண்ட்ரூஸ் மிகவும் நல்ல பெண். ஆனால் அவளுக்கு கற்பனைத் திறன் இல்லை. ஒரு காலத்தில் டயானாவின் நெருங்கியத் தோழியாக இருந்த பிறகு, என்னால் மின்னியின் நெருங்கியத் தோழியாக இருக்க முடியாது. என் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக் கொள். என் எழுத்தில் நிறைய முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் சிறப்பாக அமையவில்லை.
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை,
உன் ஆனி.
பி.கு.: இன்று இரவு உன் கடிதத்தை என் தலையணைக்குக் கீழே வைத்துத் தூங்கப் போகிறேன்.”
ஆனி மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பிறகு ஏதாவது பிரச்சினை வரக்கூடும் என்று மரிலா கவலையுடன் எதிர்பார்த்தார். ஆனால் அவர் பயந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை முன்மாதிரி மாணவியான மின்னி ஆண்ட்ரூஸிடம் இருந்த குணம் ஆனியிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எப்படியோ அதற்குப் பிறகு அவள் ஆசிரியர் மிஸ்டர் பிலிப்ஸுடன் மிகவும் நன்றாகப் பழகினாள்.
ஆனி முழு மூச்சாகப் படிப்பில் மூழ்கினாள். எந்தப் பாடத்திலும் கில்பர்ட்டை விட மதிப்பெண் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். இருவருக்கும் இடையிலான போட்டி விரைவில் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது. கில்பர்ட் அதை ஆரோக்கியமான போட்டியாகக் கருதினான், ஆனால் ஆனி அப்படிக் கருதவில்லை. ஒருவர் மேல் ஏற்பட்ட கோபத்தை மறக்காமல் நீண்ட காலம் மனதில் வைத்திருக்கும் குணம் ஆனியிடம் இருந்தது. ஒருவர் மீது அன்பு செலுத்துவதில் அவள் எவ்வளவு தீவிரம் காட்டினாளோ, அதே அளவு தீவிரத்தை ஒருவரை வெறுப்பதிலும் காட்டினாள்.
ஒரு நாள் கில்பர்ட் எழுத்துத் தேர்வில் முதலிடம் பிடித்தான். அடுத்த நாள் ஆனி அவனை முந்தினாள். ஒரு நாள் கில்பர்டின் எல்லாக் கணக்குகளும் சரியாக இருந்ததால், அவன் பெயர் கரும்பலகையில் எழுதப்பட்டது. அன்றிரவு முழுவதும் தசம எண்களுடன் போராடிய ஆனி மறுநாள் கணக்கில் முதலிடம் பிடித்தாள். இருவரும் சம மதிப்பெண் பெற்ற நாளில், இருவர் பெயர்களையும் சேர்த்துக் கரும்பலகையில் எழுதினர். ஆனிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஆனால் கில்பர்ட் மகிழ்ச்சியடைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.
ஒவ்வொரு மாத இறுதியிலும் தேர்வு முடிவுகள் வரும்போது, எதிர்பார்ப்பும் பதற்றமும் உச்சத்தை எட்டியது. முதல் மாதம் கில்பர்ட் மூன்று மதிப்பெண் அதிகம் எடுத்து முன்னிலை பெற்றான். இரண்டாவது மாதம் ஆனி ஐந்து மதிப்பெண் அதிகம் எடுத்து வெற்றி பெற்றாள். அப்போது கில்பர்ட் பள்ளி மாணவர்களின் முன்னிலையில் அவளை மனமாரப் பாராட்டினான். அதனால் அந்த வெற்றி அவளுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அவன் தோல்வியால் வருந்தியிருந்தால் தான், அந்த வெற்றி ஆனிக்கு இன்னும் இனிமையாக இருந்திருக்கும்.
அந்தக் கல்வியாண்டு முடிந்த போது, ஆனியும் கில்பர்ட்டும் ஐந்தாம் வகுப்பிற்குச் சென்றனர். அங்கே அவர்கள் “மேம்பட்ட பாடங்கள்” என்று அழைக்கப்பட்ட லத்தீன், வடிவியல் (Geometry), பிரெஞ்சு, அல்ஜீப்ரா ஆகியவற்றைப் படிக்கத் தொடங்கினர். வடிவியல் கற்பது ஆனிக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
“மரிலா, அது பயங்கரமான பாடம்!” என்று ஆனி புலம்பினாள். “தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. எப்போதுமே என்னால் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதில் கற்பனைக்கு இடமே இல்லை. நான் பார்த்ததிலேயே மிக மோசமான மாணவி நீதான் என்று மிஸ்டர் பிலிப்ஸ் சொல்கிறார்.
கில்—அதாவது சில மாணவர்கள் அதில் மிகவும் திறமையானவர்கள். அது எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது, டயானாவுக்குக் கூட என்னைவிட நன்றாகப் புரிகிறது. ஆனால் டயானாவிடம் தோற்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இப்போது நாங்கள் அந்நியர்களைப் போல நடந்துகொண்டாலும், நான் இன்னும் அவளை அதே அன்புடன் நேசிக்கிறேன்.
சில நேரங்களில் அவளை நினைக்கும் போது மிகவும் சோகமாக இருக்கிறது. ஆனால் உண்மையாகச் சொன்னால், இந்தச் சுவாரசியமான உலகத்தில் ஒருவர் நீண்ட காலம் சோகமாக இருக்க முடியுமா என்ன?” என்று மரிலாவிடம் கேட்டாள் ஆனி.
(தொடரும்)
