நூல் அறிமுகம் – ஞா. கலையரசி

கொடி காட்ட வந்தவன்
ரேவதி
கதைவண்டி பதிப்பகம், சென்னை-34.
செல்: 7502340787.
விலை: ரூ. 110/-.
சிறார் எழுத்தாளர் ரேவதி குழந்தை இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். இவரது இயற்பெயர் ஹரிஹரன். ‘பவளம் தந்த பரிசு’ என்ற நூலுக்காக 2013ஆம் ஆண்டு பாலசாகித்ய புரஸ்கார் விருது வென்றவர். இவரெழுதிய ‘கொடி காட்ட வந்தவன்’ என்ற சிறார் நாவல், ஒன்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்பைக் ‘கதைவண்டி’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு சிறுவர்க்காக எழுதப்பட்ட முதல் நாவல் இது.
இந்நாவலின் கதாநாயகனான மோகன் என்ற 12 வயது சிறுவன் ஆங்கில அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் ஆங்கிலப் பள்ளியில் படிக்கிறான். இவன் நாட்டுநடப்பு தெரியாமல் கிணற்றுத் தவளையாக வளர்கிறான். தன் தாத்தா நடத்தும் துணிக்கடை முன்பும், கள்ளுக்கடை முன்பும் விற்பனையைத் தடுத்து மறியலில் ஈடுபடும் காந்தி இயக்கத் தொண்டர்களைக் கண்டு, காந்தி ஒரு கலகக்காரர் என்ற தவறான முடிவுக்கு வருகிறான். பின் அந்த மறியல் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தையும், விடுதலைக் களத்தில் காந்தியடிகளின் பங்கையும் அவன் எப்படித் தெரிந்துகொண்டான் என்பது மீதிக்கதை.
இதில் காந்தியின் ஆணையை ஏற்றுத் தம் தென்னந்தோப்புகளை அழித்துவிட்டுக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்ற தந்தை பெரியார் குறித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிகழ்வுகளை இக்கதையின் வழியே சிறார் தெரிந்துகொள்ள முடியும். நம் சமூகத்தில் நிலவும் சாதி, தீண்டாமை ஆகியவை குறித்தும் பேசுவது, இந்நாவலின் தனிச்சிறப்பு.
பதின்பருவத்தினர் மட்டுமின்றிச் சிறார் எழுத்தாளர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். ஓவியர் கோ. ராமமூர்த்தி அவர்கள் வரைந்த அட்டைப்படமும், உள் ஓவியங்களும் மிகவும் அருமை.
