நான்காவது நண்பன் வந்தான்!
தேரை, மூஞ்சுறுவையும் எலியையும் தன் வீட்டுக்கு ஒரு நாள் விருந்துண்ண வருமாறு அழைத்தது. “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் தங்கப் போறோம். நான் இவனுக்குப் படகு ஓட்டவும் நீச்சலடிக்கவும் கத்துத் தரப் போறேன். அதுக்கு அப்புறமா நாங்க வரோம்” என்று எலி கூறியது. மூஞ்சுறுவுக்கு மிக்க மகிழ்ச்சி. எலியும் மூஞ்சுறுவும் ஒன்றாகத் தங்கி மகிழ்ச்சியாக இருந்தனர்.
அதன் பின் இருவரும் சேர்ந்து தேரையின் வீட்டுக்கு ஒரு நாள் பயணப்பட்டனர். இவர்களைப் பார்த்ததில் தேரைக்கு மிகுந்த மகிழ்ச்சி. “உன்னோட படகை எங்கே?” என்று எலி தேரையைக் கேட்க,
“நான் இப்ப படகு ஓட்டுறதில்ல.. படகு ஓட்டுறதால நிறைய நேரம் வீணாப் போகுது.. நான் புதுசா ஒன்னு வாங்கி இருக்கேன், இங்க பாருங்க!” என்று தன் வீட்டின் பின்புறம் கூட்டிச்சென்று காண்பித்தது. அங்கு ஒரு அழகான சிவப்பு நிறக் குதிரை வண்டி இருந்தது.
“பாத்தீங்களா? இப்போ இதுல தான் நான் தினமும் ஜாலியாப் போறேன்.. வாங்க நாம சாப்பிட்டுட்டு இதுல கொஞ்ச தூரம் உலாப் போகலாம்” என்று கூறிய தேரை, உணவுக்குப் பின் நண்பர்கள் இருவரையும் தன் குதிரை வண்டியில் வெளியில் அழைத்துச் சென்றது. அன்று நல்ல வெளிச்சமான தினம் என்பதால் மூவருக்குமே அந்தக் குதிரை வண்டிப் பயணம் மிகவும் பிடித்திருந்தது.
அன்றைய இரவு மூவரும் ஒன்றாகப் படுத்து உறங்கினர். இதுவல்லவோ உண்மையான வாழ்க்கை என்று சந்தோஷமாகக் கூறியது தேரை. ஆனால் இந்த வாழ்க்கையும் தேரைக்கு சீக்கிரமே சலித்து விடும் என்று எலிக்குத் தோன்றியது.
மறுநாள் குதிரை வண்டியில் சென்ற மூன்று நண்பர்களும் குதிரை வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு கொஞ்ச தூரம் நடைபயணம் செல்லலாம் என்று நடந்தார்கள். கொஞ்ச தூரத்திலேயே ஏதோ ஒரு சத்தம் அவர்களுக்குப் பின்னால் கேட்டது. அது ஒரு பெரிய மோட்டார் வாகனம். நண்பர்கள் மூவரும் வேகமாக வந்த மோட்டார் காரைப் பார்த்து ஒதுங்கி நிற்க, அந்தக் கார் இவர்களது குதிரை வண்டியைக் கீழே தள்ளி விட்டு விரைந்து போய்விட்டது. கார் இடித்ததில் குதிரை வண்டி மிகுந்த சேதம் அடைந்திருந்தது. ஓடிய குதிரைகளைக் கஷ்டப்பட்டு நண்பர்கள் பிடித்து நிறுத்தினர்.
“பார்த்துப் போகக்கூடாதா? இடிச்சுட்டு அவன் பாட்டு நிக்காமப் போறானே..?” என்று எலி மோட்டார் காரின் ஓட்டுனரைப் பார்த்து சத்தம் போட்டது. ஆனால் தேரையோ தன் குதிரை வண்டி உடைந்து போனதை நினைத்து கவலைப்படவே இல்லை.
“அருமை! அழகான கார்! இதே போல நானும் ஒரு வண்டி வாங்கப் போறேன்” என்று இடித்து விட்டுப் போன மோட்டார் காரைப் பற்றியே பெருமையாகப் பேசியது. எலிக்குக் கோபம் கோபமாக வந்தது. அது மூஞ்சுறுவிடம், “இவன் இப்படித்தான்.. பாரு அவனோட வண்டி உடைஞ்சுருக்கே.. அதுக்குக் கவலைப்படாம என்ன பேசுறான் பாரு..
வா! நாமாவது இதைக் கொண்டுபோய் பழுது பார்க்க விட்டுட்டு வரலாம்” என்று கூறி பழுதுபார்க்கும் கடைக்குச் சென்று அந்த வண்டியை விட்டனர். மறுநாளே ஒரு புதிய மோட்டார் காருக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகக் கூறியது தேரை.
தேரையிடம் விடைபெற்று எலியின் வீட்டுக்கு எலியும் மூஞ்சுறுவும் சென்றனர். மூஞ்சுறுவுக்கு அடர்ந்த காட்டில் வசிக்கும் பேட்ஜர் என்ற தேன்வளைக் கரடியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அது ஒரு நல்ல நட்பான மிருகம், நண்பர்களை அதிகம் மதிக்கும் என்று மூஞ்சுறு கேள்விப்பட்டிருந்தது. அந்தக் கரடியைப் பார்க்கப் போகலாமே என்று மூஞ்சுறு எலியைக் கேட்க,
“வேண்டாம்! அடர்ந்த கானகம் ரொம்ப ஆபத்தானது. அதனால நாம இங்கேயே இருப்போம்” என்றது எலி. ஒரு நாள் எலி தூங்கிக் கொண்டிருக்கும்போது ஆர்வம் தாங்காமல் மூஞ்சுறு தனியே காட்டுக்குச் சென்று விட்டது. கண்ணில் எதிர்ப்படும் மிருகங்களிடம் எல்லாம், “பேட்ஜர்ங்கிற தேன்வளைக் கரடியைப் பாத்தீங்களா?” என்று கேட்டது.
காட்டுக்குள் வெகுதூரம் சென்ற மூஞ்சுறுவுக்கு திடீரென்று வழி மறந்துவிட்டது. எவ்வளவு யோசித்தும் தான் வந்த வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பயந்துகொண்டே ஒரு மரத்தின் பொந்தில் ஒளிந்திருந்தது. “சீக்கிரம் வந்து என்னை எப்படியாவது காப்பாற்றி விடு” என்று மனதிற்குள் தன் எலி நண்பனை நினைத்து வேண்டிக் கொண்டிருந்தது.
தூங்கி எழுந்த எலி மூஞ்சுறுவைக் காணாமல் வெளியேவந்தது. மூஞ்சுறுவின் காலடித்தடங்கள் காட்டை நோக்கிச் செல்வதைக் கண்டு கொண்ட எலி, தானும் காட்டினுள் வந்தது. “மூஞ்சூறு நண்பா! எங்க இருக்க?” என்று சத்தமிட்டுக் கொண்டே வந்த எலி ஒரு இடத்தில் மூஞ்சுறுவின் தீனமான குரலைக் கேட்டது.
உடனே ஓடிச்சென்று கட்டிப் பிடித்துக்கொண்டது. மூஞ்சுறு ஆனந்தக் கண்ணீர் வடிக்க, இருவரும் சேர்ந்து வீடு நோக்கி நடந்தனர். ஆனால் அது பனிக்காலம் என்பதால் இரவு நெருங்க, நெருங்க பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தது. எப்படி வீட்டுக்குப் போவது என்று இருவரும் குழம்பியபடியே நடக்க, குவிந்திருந்த பனியின் நடுவே திடீரென்று எதன் மேலோ கால் தடுக்கி விழுந்தது எலி. காலில் தட்டுப்பட்டது என்னவென்று சற்றுத் தோண்டிப் பார்க்க அது ஒரு வீட்டின் வாசல் என்று தெரிந்தது.
தொடர்ந்த பனியால் குளிர் தாங்க முடியாத இரண்டு நண்பர்களும் அந்த வீட்டின் வாசலைத் தட்டினார்கள். உள்ளிருந்து சத்தம் கேட்டு வெளியே வந்தது தேன்வளைக் கரடி. அது தான் அந்த வீட்டின் உரிமையாளர். “ஓ! குளிர்ல கஷ்டப்படுறீங்களா? வாங்க வாங்க” என்று நண்பர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டது.
-தொடரும்.
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.