வீட்டில் ஒரே ரகளை. கல்யாணிப் பாட்டியின் கிராமத்து வீட்டிற்குப் பிள்ளைகள், மருமகள்கள், மகள் மற்றும் மருமகன், பேரக்குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்குள் சண்டை, அடிதடி. ஒரே ரகளையாக இருந்தது. எல்லோரையும் கூப்பிட்டுத் தன்னைச் சுற்றி உட்கார வைத்த பாட்டி அந்தக் குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தாள்.

 கொஞ்ச நேரத்தில் கதை கேட்கப் பெரியவர்களும் வந்து உட்காரக் கதை சொல்லிப் பாட்டி, தனது கதையை ஆரம்பித்தார். அந்த இடமே களை கட்டி ஜேஜே வென்று ஆகியது.

“ஒரு பெரிய வனம் இருந்தது. அந்த  வனத்துக்குள்ளே ஒரு நாள் திடீர்னு ஒரே பரபரப்பு. விலங்குகள், பறவைகள் எல்லாமே தனித்தனியாகக் கூட்டம் கூட்டமாக நின்னுக்கிட்டு ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. குசுகுசுன்னு இரகசியமாப் பேசிக்கிட்டாங்க. எல்லா மிருகங்களும், பறவைகளும் கவலையோட வேற இருந்தாங்க.

என்ன பிரச்சினையா இருக்கும்? நேத்து வரைக்கும் எல்லாருமே சந்தோஷமாத் தானே இருந்தாங்க! திடீர்னு என்ன ஆயிருக்கும்? வாங்க, நாம போயிக் கண்டுபிடிக்கலாம்.

ஒரு குருவியும் ஒரு புறாவும் அந்த அடர்த்தியான மரக்கிளையில உக்காந்து பேசிக்கிட்டிருந்தாங்க.

“என்ன ஆச்சு புறா அக்கா? எல்லாருமே கவலையோட பரபரப்பா இருக்காங்க. என்னன்னு புரியலையே!” என்று குருவி புறாவிடம் கேட்டது.

“அதுவா, நேத்திலே இருந்து நம்ப சிங்க ராஜாவுக்கு உடம்பு சரியில்லையாம். காய்ச்சலா இருக்காம். குகைக்கு வெளியில ரொம்ப பலகீனமாப் படுத்துட்டு இருக்காரு. அவரால எழுந்து குகைக்குள்ள கூடப் போக முடியலையாம்” என்று புறா சொன்னது.

vanathil galatta

“அப்படியா? டாக்டர் வந்து பாக்கலையா?” என்று குருவி கேட்டுக் கொண்டிருக்கும் போது காட்டின் தலைமை டாக்டரான வரிக்குதிரை ஸ்டெதாஸ்கோப்புடன் வந்துவிட்டார். கூடவே முயல் கம்பவுண்டர். டாக்டர், சிங்கராஜாவை சோதித்துப் பார்த்துவிட்டு முயலிடம் ஏதோ சொல்ல, முயல் ஒரு பெரிய இஞ்செக்ஷனை எடுத்து சிங்கராஜாவுக்குப் போட்டது.

அங்கேயிருந்த சேனாதிபதி புலியிடமும் மந்திரியான நரியிடமும் ஏதோ சொல்லிட்டு டாக்டரும் கம்பவுண்டரும் அங்கிருந்து கிளம்பிட்டாங்க.

அன்னைக்கு சாயந்திரம் காட்டில அவசர மீட்டிங் ஏற்பாடு செஞ்சாங்க. காட்டுல இருந்த எல்லா மிருகங்களும் பறவைகளும் பூச்சி இனங்களுமா ஒரு பெரிய மரத்தடியில கூடினாங்க‌. அப்ப அங்கே ஒரு சிறுத்தை வந்து எல்லார் கிட்டயும் பேச ஆரம்பிச்சதாம்.

“நாம எல்லோரும் ஒரு முக்கியமான முடிவை எடுக்கறதுக்காக இங்கே கூடியிருக்கோம். நம்ப சிங்க ராஜாவுக்கு ஒடம்பு சரியில்லை. பயங்கரமான விஷக் காய்ச்சலாம். டாக்டர் வந்து அவரு பிழைக்கறது கஷடம்னு சொல்லிட்டாரு. அதுனால நாம இப்போ நமக்கு அடுத்த ராஜாவாகப் போறது யாருன்னு முடிவு செய்யணும்”  என்று பேசி முடிச்சது.

உடனே அங்கே பயங்கர சலசலப்பு. விலங்குகளும் பறவைகளும் சின்னச் சின்னக் குழுக்களா நின்னு தங்களுக்குள்ளேயே காரசாரமாப் பேசிக்கிட்டே இருந்தாங்க.

சிறுத்தைப் புலிக்குப் பொறுமையே போயிடுச்சு. “எல்லோரும் தங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டே நிக்காம, எல்லோருக்கும் கேக்கற மாதிரி நடுவில வந்து தங்களோட கருத்தைச் சொன்னா எல்லாருக்கும் புரியுமே! ” ன்னு சொல்லிச்சு.

அப்ப ஒரு காக்கா வந்து தன்னோட கருத்தைச் சொன்னது.

“இவ்வளவு நாட்களா விலங்குகளோட பிரதிநிதியா சிங்கம், ராஜாவா இருந்ததால இந்தத் தடவை பறவைகள் இனத்தில இருந்து யாரையாவது நாம ராஜாவாத் தேர்ந்தேடுக்கணும்” அப்படின்னு ஒரு போடு போட்டுச்சு.

உடனே பருந்து வந்து, “நான் தான் பறவைகளின் ராஜா. அதனால காட்டுக்கும் நான் தான் இனி ராஜா” அப்படின்னு சொல்ல,

“இல்லை. எனக்குத் தான் பார்வைத் திறன் அதிகம். நான் தான் ராஜா” ன்னு கழுகு சொன்னது.

“நான் தான் ரொம்ப அழகு. அதுனால நான் தான் ராஜாவாக லாயக்கு” இது ஆண் மயிலின் வாதம்.

“என்னோட குரல் இனிமை”ன்னு குயிலும், “என்னோட நிறம் அழகு”ன்னு கிளியும், “நாங்க தான் எல்லோருக்கும் நண்பர்கள்” னு காகங்களும் கத்திச் சண்டை போட்டு விவாதம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

அங்கே விலங்குகளின் கூட்டத்திலும் ஒரே சண்டை.

“என்னோட உருவம் ரொம்பப் பெரிசு. நாந்தான் கம்பீரம். அதுனால நான் தான் ராஜாவாகத் தகுதியானவன்” அப்படின்னு யானை தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறுச்சு.

“சிங்கத்தை மாதிரி தான் நானும். மனுஷங்க என்னைப் பாத்துத் தானே பயப்படுவாங்க. அதுனால நான் தான் அடுத்த ராஜா” இது புலியின் வாதம்.

“தந்திரத்துல என்னை யாராலும் மிஞ்ச முடியாது” ன்னு நரி சொல்லுச்சு.

“நான் தான் அழகு. நான் தான் ராஜா” இது மான் சொன்ன வார்த்தைகள்.

“என்னோட கழுத்து நீளமா இருக்கறதுனால நான் உங்க எல்லாரையும் விட உயரம். நான் தான் ராஜா”ன்னு ஒட்டகச்சிவிங்கி சொன்னது.

“என்னைப் பாத்து மனுஷங்க எவ்வளவு பயப்படறாங்க! என்னைப் பாத்தாலே ஓடறாங்களே! நான் தான் ராஜா” ன்னு சொல்லிப் பாம்பு சீறுச்சு.

 “அதே மாதிரி நானும் எல்லோரையும் கொட்டி வெரட்டுவேன். என்னை ராஜாவாக்கினால் எல்லாருக்கும் தேன் தரேன்”ன்னு தேனீ சொல்லுச்சாம்.

“நான் தான் சுறுசுறுப்பு. ஒழுங்கா விதியைக் கடைப்பிடிக்கறதுக்கும், உழைச்சுத் திட்டமிட்டு உணவைச் சேத்து வைக்கறதுக்கும் என்னை விட்டா யாரும் கெடையாது” ன்னு எறும்பு சொல்லுச்சாம்.

ஒரே சண்டை அங்கே. சத்தம்; அடிதடியாகி எல்லா விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் கோவிச்சுக் கிட்டு அங்கேருந்து போயிட்டாங்க. அடுத்து அஞ்சாறு நாட்களுக்கு யாரும் யார் கூடயும் பேசலை. முகத்தைத் திருப்பிட்டுப் போயிட்டாங்க.

காட்டுல நிலவரம் சரியில்லைன்னு காட்டுக்கு வெளியிலயும் தகவல் பரவிடுச்சு. காட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஊரில ஒரு சர்க்கஸ் கம்பெனிக் காரங்க வந்து தங்கியிருந்தாங்க. அவங்க எப்படியாவது சில விலங்குகளையும் பறவைகளையும் பிடிக்கணும்னு நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கிட்டு இருந்தாங்க.

அதைத் தவிர விலங்குகளையும் பறவைகளையும் பிடிச்சுக்கிட்டுப் போய் விக்கற வேடர்களும் காத்துக்கிட்டே இருந்தாங்க. காட்டில ஏதோ பிரச்சினைன்னு அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு, இப்பத் தான் நமக்கு சரியான சந்தர்ப்பம் னு காட்டுக்குப் பக்கத்தில வந்துட்டாங்க.

காக்காவும் புறாவும் பாத்துட்டுக் கோபமா இருந்ததுனால காட்டுக்குள்ள போயித் தகவலை யாருக்கும் சொல்லலை. சாதாரணமாக ஏதாவது ஆபத்து, யாராவது காட்டை நோக்கி வராங்களான்னு அந்தப் பறவைங்க தான் கண்காணிச்சிக்கிட்டே இருந்து காட்டுக்குள்ள தகவல் சொல்லுவாங்க.

 சர்க்கஸ் கம்பெனிக் காரங்களும், வேடர்களும் வலைகள், கூண்டுகள் எல்லோமே எடுத்துக் கிட்டுக் காட்டுக்கு ரொம்பப் பக்கத்தில வந்துட்டாங்க. அப்ப அங்கே விளையாடிக்கிட்டிருந்த முயல் குட்டிகளுக்கும் பறவைக் குஞ்சுகளுக்கும்  பயம் வந்துடுச்சு.  கீச்கீச்னு பறவைக் குஞ்சுகள் பயத்தில கத்த, முயல்குட்டிகள் எல்லாம் வேகமா சிங்கத்தோட குகைக்குத் தகவல் சொல்ல ஓடினாங்களாம். அவங்க  போயிச் சொன்னதும் தான் காட்டில இருந்த மத்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நெலைமையோட தீவிரம் புரிஞ்சுது.

அதுக்குள்ள வரிக்குதிரை டாக்டர் கொடுத்த சிகிச்சையால சிங்கத்துக்கும் உடம்பு சரியாகி அதுவும் எந்திரிச்சு கர்ஜனை செஞ்சுச்சு. அதோட கர்ஜனைச் சத்தம் கேட்டு எல்லா மிருகங்களும் பறவைகளும் வந்து ஆச்சர்யமாப் பாத்துக்கிட்டே நின்னாங்க.

அதுக்குள்ள மிருகங்களைப் பிடிக்க மனுஷங்க வந்திருக்கற விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டு எல்லா மிருகங்களும் ஒத்துமையாத் தங்களைப் பிடிக்க வந்தவங்களை எதிர்த்துக் காட்டின் முகப்பில் வந்து நின்னாங்களாம். வந்தவங்கள்ளாம் அதைப் பாத்துட்டு பயந்து பின்வாங்கி ஓடியே போனாங்களாம்.

அப்பத்தான் எல்லா மிருகங்களுக்கும் பறவைகளுக்கும், ‘நாம ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டா நமக்குத் தான் நஷ்டம். எல்லோருமே‌ ஒத்துமையா இருந்தாத் தான் நாம எல்லோரும் காட்டில சுதந்திரமா சந்தோஷமா இருக்கலாம்’னு புரிஞ்சுக்கிட்டு ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருந்தாங்களாம். சிங்க ராஜாவும் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கப் போச்சாம்”

என்று கல்யாணிப் பாட்டி கதை சொல்லி முடிக்கக் குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம்.

“நாங்களும் இனிமே சண்டை போடமாட்டோம். ஒத்துமையா இருப்போம்” என்று குழந்தைகள் கத்தினார்கள். “காட்டில் மட்டும் இல்லை, வீட்டிலும் நாட்டிலும் ஒற்றுமை தேவை தான்” என்று சிரித்துப் பேசிக் கொண்டே பெரியவர்களும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments