முன்பு ஒரு காலத்தில் பிரான்சு நாட்டில், ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அரசுக்கு எதிராக அவர் சதி செய்ததாகச் சந்தேகப்பட்டு, அரசர் அவரைச் சிறையில் அடைத்து விட்டார்.
அந்தச் சிறையின் நான்கு பக்கமும் சாம்பல் நிறக் கல் சுவர்களும், ஒரே ஒரு சின்னச் சன்னலும் இருந்தன. அந்தச் சின்னச் சன்னல் வழியாக, லேசான வெயில் உள்ளே வந்தது. அவர் அங்கு தான் பல மாதங்கள், பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு இருந்தார்.
யாரிடமும் பேச அவருக்கு அனுமதியில்லை. சிறைக்காவலர் ஒருவரிடம் மட்டுமே பேசலாம். ஆனால் அவரோ சிடுசிடுப்பும், கோபமும் நிறைந்தவர்.
நாள் முழுதும் பொழுதைப் போக்க, கைதிக்கு எந்த வேலையுமில்லை. வாசிக்கப் புத்தகங்களும் இல்லை. பல மணி நேரம் போரடிக்கும் விதமாக வெறுமையாகவே கழிந்தது. அச்சமயம், அவர் சிறையின் வெற்றுச் சுவர்களில் சிறு கரித்துண்டால் ஓவியம் வரைந்தார். அது மட்டுமே அவருக்குச் சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நல்ல வேளையாக ஒவ்வொரு நாள் காலையிலும், ஒரு மணி நேரம் அவர் அந்த அறையிலிருந்து வெளியே சென்று வர அனுமதி இருந்தது. குறுகலான படிக்கட்டின் வழியாக ஏறிச் சென்றால், அது ஒரு சின்ன முற்றத்துக்குக் கொண்டு விடும்.
படு உயரமாக எழுப்பப்பட்ட வலுவான சிறைச் சுவர்களுக்கு இடையே இருந்த அந்தச் சின்ன முற்றத்தின் மேல் கூரையில்லை. அது திறந்தவெளி முற்றம் என்பதால், அவரால் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடிந்தது. இளம் வெயிலின் கதகதப்பான சூட்டை உணர முடிந்தது. மேலே நீல வானத்தைச் சிறிதளவு பார்க்க முடிந்தது.
அடுத்தடுத்த நாளும் அவர் வாழ்க்கையில் எந்த மாறுதலோ, மாறும் என்ற நம்பிக்கையோ இல்லாமல், இப்படியே கழிந்தது. பல ஆண்டுகளாக அவர் குடும்பத்தாரிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ எந்தச் செய்தியும் வரவில்லை. அவர்களில் ஒருவரையாவது மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையும் சுத்தமாக அவருக்கு இல்லை.
ஒரு கட்டத்தில் சுவரில் கரியால் ஓவியம் வரைவதில், அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியும் குறைந்தது. ஏனென்றால், புதிதாக ஓவியம் வரைவதற்குச் சுவரில் காலி இடமே இல்லை.
அவர் மகிழ்ச்சி சிறிதுமின்றிச் சோகத்தில் மூழ்கினார். அதனால் எல்லாரையும், எல்லாவற்றையும் வெறுக்கும் மனிதராக அவர் மாறி விட்டிருந்தார்.
ஆனால் ஒரு நாள் அவருக்கு ஒரு புதிய விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவர் கெட்ட விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டார். தம்மைச் சுற்றி எல்லாவற்றிலும் நல்லதையே பார்க்கக் கற்றுக் கொண்டார்.
அவருக்கு அந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது? அந்தத் திறந்தவெளி முற்றத்தில் ஏதோ ஒரு விதை, காற்றின் மூலம் பறந்து வந்து விழுந்திருந்தது. அது இரண்டு பெரிய கற்களுக்கிடையில், முளை விட்டுக் கிளம்பியிருந்தது.
வழக்கம் போல் ஒரு நாள் அவர் அந்த முற்றத்தில் நடந்தார். அப்போது அந்தப் பிரகாசமான பச்சை நிறக் குட்டிச்செடி, அவர் கண்ணில் பட்டது. அவர் காலுக்கடியில் மாட்டி நசுங்க இருந்த செடியைச் சரியான சமயத்தில் கண்டுபிடித்துக் காப்பாற்றினார்.
அது இரண்டு கற்களுக்கிடையே இருந்த பிளவில், வேர் விட்டு முளைத்து இருந்தது. உள்ளே வந்த கம்மியான சூரிய ஒளியை இலைகள் பெறுவதற்காகச் செடி மிகவும் சிரமப்பட்டுத் தலையை மேலே நீட்டியிருந்தது.
“இந்த இருளடைந்த சிறை வளாகத்தில், இந்தக் குட்டிச்செடி, எவ்வளவு தைரியமாக வேர் விட்டுத் தன் வாழ்க்கைக்காகப் போராடுகிறது? இது எவ்வளவு வியப்பான விஷயம்”, என்று அவர் நினைத்தார்.
“தைரியமான குட்டிச் செடியே! வாழ்வதற்கான எல்லாத் தகுதியும் உனக்கு உள்ளது; நான் உன்னைப் பத்திரமாகப் பாதுகாப்பேன்; காற்றும் ஆலங்கட்டி மழையும், உன் பயங்கர எதிரிகள்”, என்று அவர் சொன்னார்.
நாளுக்கு நாள் அந்தக் குட்டிச் செடி தைரியத்துடன் மேலும் மேலும் வளர்ந்ததை, அவர் கவனித்துக் கொண்டிருந்தார். குறைவாகக் கிடைத்த சூரிய ஒளியைப் பெறுவதற்கு, அது தன் இலைகளை ஒவ்வொன்றாக விரித்துக் கொண்டிருந்தது.
ஒரு நெருங்கிய தோழியைப் பாதுகாப்பதைப் போல், அவருக்கு ஆர்வம் அதிகமாகிக் கொண்டே சென்றது. ‘குட்டிச்செடி’ என்று அவர் அதை அழைத்தார். சில நாட்களிலேயே, அது அவர் இதயத்தில் ஆழமாக வேரூன்றி விட்டது. அவர் இதயத்தில், இப்போது வெறுப்புக்கும், துயரத்துக்கும் இடமே இல்லை.
ஒரு சமயம் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது. அவர் குனிந்து செடியை மூடி, பனிக்கட்டிகள் அதன் மேல் விழாமல் பாதுகாத்தார். அவர் தலையில் அந்தப் பனிக்கட்டிகள் வந்து விழுந்தன.
“என்னருமை குட்டிச்செடியே! எல்லாச் சமயத்திலும் நான் இங்கே இருந்து உன்னைப் பாதுகாக்க முடியாது; நான் சிறையில் இருக்கும் போது, உனக்கு எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்; உன்னைச் சுற்றி நான் ஒரு சிறிய வேலி கட்டுவேன். அதற்குப் பிறகு காற்று உன்னைக் கீழே சாய்க்க முடியாது; ஆலங்கட்டி மழையின் போது, கூரான பனிக்கட்டிகள் உன்னைக் குத்திக் கிழிக்க முடியாது”, என்றார் அவர்.
இந்தச் செடியின் மீது சிறைக் கைதி, கொண்டிருந்த ஆர்வத்தையும் அதனால் அவருக்கு ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியையும், அந்தச் சிறைக்காவலர் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் அந்தச் செடி மீது ஆர்வம் ஏற்பட்டிருந்தது. முன்பு போல அவர் சிடுசிடுப்பாக இல்லாமல், இப்போது இரக்கமுள்ள மனிதராக மாறி விட்டிருந்தார்.
இப்போது அந்தக் கைதி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும், அந்தச் செடியைப் பார்க்கப் போகும் சமயம், அதில் புது வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று நம்பினார். அது முற்றத்தில் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது. இப்போது அது மேலும் மேலும் வளர்ந்து, இரண்டு முறை பூ பூத்தது. வாசத்தை வீசித் தன் தோழரின் இதயத்தை மகிழ்வித்தது.
ஆனால் ஒரு நாள் காலையில்! ஐயோ! அவர் அந்தச் செடியைப் பார்க்கப் போன போது, அது வாடித் தொங்கியதைக் கண்டார். அவர் அவ்வளவு கவனத்துடன் அதைப் பாதுகாத்து வந்த போதும், அது ஏன் வாடித் தொங்கியது? அவர் தரையில் குனிந்து, அதற்கான காரணத்தை ஆராய்ந்தார்.
இப்போது அந்தச் செடி மிகவும் பெரிதாக வளர்ந்து இருந்தது. இரண்டு கற்களுக்கிடையே இருந்த சிறிய இடைவெளி, மேலும் அது வளரப் போதுமானதாக இல்லை. அந்தக் கற்களின் கூரான முனைகள் செடியின் இளந்தண்டில் பட்டுக் குத்திக் கொண்டிருந்தன. அந்தக் கற்களைத் தூக்கி அப்புறப்படுத்தாவிட்டால், அவருடைய குட்டித்தோழி செத்துவிடும் என்று அவருக்குத் தோன்றியது.
அவருக்கு வருத்தம் அதிகமானது. தம் பலம் முழுவதையும் பயன்படுத்தி, அந்தக் கற்களைத் தூக்கிப் பார்த்தார். ஆனால் அவரால் அவற்றை நகர்த்த முடியவில்லை. தமக்கு உதவச் சொல்லிக் காவலரிடமும் கெஞ்சினார்.
“என்னால் உனக்கு உதவமுடியாது. நீ அரசரைக் கேட்க வேண்டும். இந்தக் கற்களைத் தூக்கி அப்புறப்படுத்தும் அதிகாரம், அரசருக்கு மட்டுமே உள்ளது”, என்றார் காவலர்.
“ஆனால் அரசர் வெகு தூரத்தில் இருக்கிறாரே” என்ற கைதி, “அவரிடம் கேட்க ஒரு வழி உள்ளது; நான் அவருக்குக் கடிதம் எழுதுகிறேன்”, என்றார்.
மிகுந்த வேதனையுடன் தன் குட்டித் தோழியின் வாழ்வைக் காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சி, அவர் அரசருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். வெள்ளை கைக்குட்டையில் ஒரு சின்னக் கரித்துண்டால் அதை எழுதியிருந்தார்.
அவருடைய வாழ்வுக்காகவோ, விடுதலைக்காகவோ அவர் அரசரைக் கெஞ்சவில்லை. ஆனால் ஒரு சிறு செடியின் வாழ்வைக் காப்பாற்றவே கெஞ்சினார்.
அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தவுடன், அரசர் சொன்னார்:-
“இந்த மனிதர் மனதளவில் கெட்டவர் அல்ல. இல்லையென்றால் ஒரு சின்னச் செடிக்காக இவ்வளவு கவலைப் பட மாட்டார். அந்தச் செடி உயிர் பிழைத்து வாழ அந்தக் கற்களைத் தூக்கி விடலாம். ஒரு சின்னச் செடியின் மீது அன்பு வைத்துத் தியாகம் செய்த இந்தக் கைதியை, நான் மன்னித்து சிறையில் இருந்து விடுவிக்கிறேன்”.
அவர் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டார். அங்கிருந்து வெளியேறிய போது, குட்டிச் செடியையும் தம்முடன் எடுத்துச் சென்றார். ஏனென்றால் அவர் வாழ்வில் புதிய மலர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்பட அந்தச் செடியே காரணம்.
ஆங்கிலம் – செயின்டீன் (‘PICCIOLA’ by SAINTINE)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.