ஹாய் சுட்டீஸ்!
எல்லாரும் எப்டி இருக்கீங்க?
இன்னிக்கு நம்ம சச்சின் அவங்க அத்தை கிட்ட என்னென்ன கேள்வி கேட்டுத் தெரிஞ்சுகிட்டான்னு பாக்கலாமா?
சச்சின் அந்தப் புறா முட்டையப் பாத்தப்றம் அவனோட அத்தை கிட்ட நிறைய கேள்வி கேட்டான். அத்தை சொன்ன விஷயம்லாம் அவனுக்கு ரொம்பப் புதுசாவும் ஆச்சர்யமாவும் இருந்துச்சு.
புறா முட்டை போட்டு இருபது (20) நாட்கள்ல குஞ்சு பொரிஞ்சிடும். குஞ்சு பொரிஞ்ச அடுத்த இருபது நாட்கள்ல அது பறக்க ஆரம்பிச்சிடும்.
முட்டையா இருக்கும் போது அம்மா புறாவும், அப்பா புறாவும் சேர்ந்து ஒண்ணு மாத்தி ஒண்ணா அடை காக்கும். குட்டிப் புறா பொறந்தப்றம் அம்மா அப்பாவோட மற்ற புறாக்களும் சேர்ந்து அதுக்குப் பறக்கச் சொல்லித் தரும்.
இப்டி அவனோட அத்தை நிறைய விஷயங்கள் சொல்லச் சொல்ல அவனும் ஆ.. ன்னு வாயத் தொறந்து கேட்டுட்டு இருந்தான்.
அவனுக்குப் புறா, பறக்கக் கத்துக்கறத பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு.. ஆனா அது வரைக்கும் அத்த வீட்லயே இருக்க முடியாதுல்ல.. ஸ்கூலுக்குப் போகணுமே?! அதனால ரொம்ப வருத்தமாயிட்டான்.
“என்னடா கண்ணா! சோர்ந்து போயிட்ட?”, அப்டீன்னு அத்த கேட்டாங்க.
“எனக்குக் குட்டி புறா பறக்கக் கத்துக்கறத பாக்கணும் அத்த!”, அப்டீன்னு சொன்னான்.
“அவ்ளோ தானே! புறா முட்டை குஞ்சு பொரிஞ்சதும் நா சொல்றேன். நீ அப்ப வந்து அத பாக்கலாம்.. முடிஞ்சா நா அத செல்ஃபோன்ல வீடியோ எடுத்து வாட்ஸ்அப் பண்றேன்.. சரியா?!”, அப்டீன்னு சொன்னாங்க.
“ம்.. ஜாலி! ஜாலி! நீங்க வீடியோ அனுப்புங்க அத்த.. நா அத என் ஃப்ரண்ட்ஸ்க்கும் காட்டுவேன்..”, அப்டீன்னு சச்சின் சொன்னான்.
அத்தையோட ஜாலியா விளையாடிட்டு சச்சின் அவங்க வீட்டுக்குப் போனான்.
தினமும் அத்தைக்குப் போன் பண்ணி, புறா முட்டை குஞ்சு பொரிஞ்சிடுச்சான்னு கேட்டுட்டே இருந்தான்.
“இன்னும் இல்லடா! இன்னும் இல்லடா!” அப்டீன்னு அவங்களும் சொன்னாங்க!
ஒரு சண்டே அன்னிக்கு, அந்தப் புறா முட்டை பொரிஞ்சி அழகான புறாக் குஞ்சு வெளிய வந்துச்சு.
அத அவனோட அத்தை வீடியோ எடுத்து அனுப்பானாங்க.
அவன் ரொம்ப ஜாலியா தன் ஃப்ரண்ட்ஸ் எல்லார் கிட்டயும் அந்த வீடியோவக் காட்டிக் காட்டி மகிழ்ந்தான்.
அந்தக் குட்டிப் புறா கொஞ்சம் கொஞ்சமா அழகா வளர்ந்தது. அது பறக்கக் கத்துக்கும் போது திரும்பவும் அத்தை வீட்டுக்குப் போய் அது பறக்கக் கத்துக்கற அழகைப் பாத்துட்டு் வந்தான்.
அவனுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்நது.
ஒவ்வொரு பறவையும் விலங்கினமும் இப்டிதான் பறக்கவும் நடக்கவும் கத்துக்கும்னு அவனுக்குப் புரிஞ்சது.
அவன் பறவைகளையும் விலங்குகளையும் பத்தி இன்னும் நிறைய விஷயங்களைத் தேடித் தேடிக் கத்துகிட்டான்.
அவனோட அம்மாவும் அத்தையும் அவனை நிறைய இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் புது புது விஷயங்கள் கத்துக்க உதவி செய்தாங்க.
அவன் சுட்டிப் பையனா வளர்ந்து வந்தான்.
என்ன சுட்டீஸ்? அவன் வேற என்ன புது விஷயம்லாம் கத்துகிட்டான்னு உங்களுக்குத் தெரியணுமா?
அடுத்த இதழ்ல அதப் பத்தி சொல்றேன். இப்ப எல்லாரும் சமத்தா பை சொல்லுங்க பாக்கலாம்.
பை! பை! டாட்டா! டாட்டா!
👋👋👋👋👋👋👋👋👋
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.