காடுகளில் திருட்டுத்தனமாக மரங்கள் களவாடப்படுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து விட்ட தமிழச்சியின் மனதில் அதுவே உறுத்திக் கொண்டிருந்தது. முதியோர் இல்லத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் இதைப்பற்றி ஏற்கனவே பேசி விட்டாள். அவர் ஓய்வு பெற்ற நீதிபதி. அவருக்கு இந்த விஷயத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நன்றாகத் தெரியும்.

அவர் உடனே வனத்துறை அலுவலகத்தில் பேசி உடனடியாக அந்த வனத்தில் சென்று நிலைமையைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“சமூக விரோதிகளின் வேலையாக இருக்கும். திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் மரங்களை வெட்டுறதா  கேள்விப்பட்டேன். உடனே அந்த இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கணும். தேவையான நடவடிக்கைகளைச் சீக்கிரம் எடுங்க. காடுகளைக் காப்பாத்தணும்” என்று அவர் கேட்டுக் கொள்ள, வனத்துறை அதிகாரிகள் இரண்டு, மூன்று பேர் உடனே அந்த வனத்திற்கு நிலைமையைப் பார்வையிடச் சென்றார்கள்.

அவர்கள் சென்றது பகல் நேரத்தில். வனத்தின் முகப்பில் இருக்கும் சிறிய பகுதியை மட்டும் சுற்றிப் பார்த்தார்கள். வனத்தின் உள்ளே செல்லவில்லை. தாமரையின் கிராமத்தின் ஒரு பக்க எல்லையில் வனத்தை ஒட்டி ஒரு சிறிய நதி ஓடுகிறது. அந்த நதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மின்மினி தேவதையைக் காப்பாற்றிய போது தான் தாமரைக்கு அந்த தேவதையின் நட்பும், கோல்டன் தமிழச்சியாக மாறி மக்களுக்கு சேவை செய்யும் வரமும் கிடைத்திருந்தது. அந்த நதியின் கரையில் கருவேல மரங்கள் நிறைய அடர்ந்து கிடந்தன. அவற்றை வெட்டி அகற்றும் கான்ட்ராக்ட்,  கிராமத்தின் அடுத்து இருந்த ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்குக் கிடைத்திருந்தது.

அவருடைய ஆட்கள் தான் அவருடைய உத்தரவின்படி வனத்தின் உட்பகுதியில் இருந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்துவது. வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட வரப்போகும் தகவல் அவருக்குக் கிடைத்துவிட்டது. மிகவும் சாமர்த்தியமாக வனத்தின் அடர்ந்த உட்பகுதியில் தான் தங்களுடைய திருட்டுத்தனத்தை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அன்று தாமரை வழியை மறந்து தப்பித் தவறி வனத்தின் உட்பகுதிக்குச் சென்றதால் தான் அவளுக்கு உண்மை தெரிய வந்திருந்தது.

வனத்துறை அதிகாரிகள் வந்து வனத்தில் நுழைந்தவுடனேயே அந்தத் தொழிலதிபரின் ஆட்கள் வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களை அதிக தூரம் உள்ளே செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள்.

golden
படம்: அப்புசிவா

“இங்கேயா? மரத்தை வெட்டிக் திருடறாங்களா? தினமும் நாங்க இங்கே நதிக் கரையோரமாக தானே வேலை செய்யறோம்? எங்களுக்கு ஒண்ணும் தெரியலையே? எந்த ஆரவாரமும் நாங்க கேக்கலையே? யாராவது தப்பாச் சொல்லிருப்பாங்க? ஆட்கொல்லி விலங்குகள் நடமாடற இடத்துக்கு நீங்க எதுக்கு இப்போ போகணும்? நீங்க உங்களால முடிஞ்ச அளவு செக் பண்ணுங்க. ரொம்ப தூரம் ஆபத்தான பகுதிக்குப் போக வேணாம். நாங்க, இந்தக் காட்டைப் பத்தி நல்லா விஷயம் தெரிஞ்ச கிராமத்து ஆட்களை உதவிக்கு வச்சுட்டு அடுத்த வாரம் முழுக்கத் தேடிப் பாக்கறோம். ஏதாவது தகவல் கிடைச்சவுடன் உங்க கிட்ட வந்து சொல்லறோம். எங்களுக்கென்னவோ இது வதந்தியாத் தான் இருக்கும்னு தோணுது. நீங்க கவலைப்படாமல் திரும்பிப் போங்க. உயிருக்கு ஆபத்தான வேலை எதுவும் பாக்க வேணாம்” என்றெல்லாம் அவர்களிடம் நைச்சியமாகப் பேசி அவர்களைத் திசை திருப்பி அனுப்பி விட்டார்கள்.

வனத்துறை அதிகாரிகள், தங்களது உயர் அதிகாரிகளிடம், “நாங்க நல்லாவே செக் பண்ணிப் பாத்துட்டோம். மரத் திருட்டு ஒண்ணும் நடக்கலை. யாரோ புரளியைக் கிளப்பி விட்டுருப்பாங்க. இருந்தாலும் அங்கே எதுக்கும் அலர்ட்டா இருக்கச் சொல்லிச் சில பேரை ஏற்பாடு செஞ்சிட்டு வந்திருக்கோம். சட்டத்துக்கு விரோதமா யாராவது ஏதாவது செய்ய முயற்சி செஞ்சா நமக்கு உடனே தகவல் வந்துரும். நாம போயி அவங்களைக் கையும் களவுமாப் பிடிச்சுரலாம்” என்று உறுதிமொழி தந்து விட்டார்கள்.

மரத் திருட்டு பற்றி புகார் செய்த ஓய்வு பெற்ற நீதிபதிக்கும் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. அவரும் தாமரையிடம் தனக்குக் கிடைத்த தகவலைச் சொன்னார். அவளுக்கு ஏமாற்றமாகப் போயிற்று.

“இல்லை. இவங்க எதையோ மூடி மறைக்கறாங்க. அங்கே தப்பு நடக்குது. நான் என் கண்ணால பாத்தேன். அவங்க மரங்களை வெட்டிக் காட்டை அழிக்கறதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்” என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள் தாமரை.

“ஆதாரம் இல்லாம எதுவும் செய்ய முடியாது. தப்பு நடக்குதுன்னு நிரூபிக்க  ஆதாரம், ஃபோட்டோ மாதிரி ஏதாவது நமக்குக் கிடைச்சாத் தான் நாம் ப்ரொஸீட் பண்ண முடியும்” என்றார் அவர்.

“மொபைலை எடுத்துட்டுப் போய் நான் படம் பிடிச்சு அனுப்பட்டுமா? அப்படியே அவங்க ஏதாவது பேசினா அதை ரெகார்ட் பண்ணிட்டு வரேன்” என்றாள் தாமரை.

“காட்டுக்குள்ள நெட்வொர்க் இல்லைன்னா மொபைல் வேலை செய்யாது. ஆனா காமரா உள்ள மொபைல்னா படம் எடுக்கலாம். ஆனா யாருக்கும் அனுப்ப முடியாது. நெட்வொர்க் அந்த இடத்தில் லக் இருந்து கிடைச்சுதுன்னா அனுப்பவும் முடியும். அதே மாதிரி தான் அவங்க பேசிக்கறதை ரெகார்ட் பண்ணினாலும் நெட்வொர்க் இருந்தா அனுப்பலாம். இல்லைன்னாலும் பத்திரமா இங்கே கொண்டு வந்தாப் போதும். அதையே ஆதாரமா வச்சு அவங்களைப் பிடிச்சுரலாம்.

ஆமாம், நீ எதுக்கு இதெல்லாம் கேக்கறே? தனியாப் போய் யார் கிட்டயாவது மாட்டிக்காதே. இந்த மாதிரி சட்ட விரோதமான காரியங்கள் செய்யறவங்க எதுக்கும் துணிஞ்சவங்களா இருப்பாங்க. ஜாக்கிரதையா இருக்கணும். நான் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் மூலமா இதில ஆதாரங்களை சேகரிக்கச் சொல்லறேன்” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டார்.

தாமரை அவரிடம் பேசியதற்குப் பின்னர் யோசித்துக் கொண்டே வீட்டுக்குப் போனாள்.

“இப்பவே ஏதாவது நடவடிக்கை எடுக்கலைன்னா நிறைய மரங்களை வெட்டிடுவாங்க. சேதாரம் அதிகமாயிடும். உடனே என்னவாவது செஞ்சு அவங்களை நிறுத்தணும்” என்று நினைத்துக் கொண்டே போனாள்.

அன்று வெள்ளிக்கிழமை. அடுத்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பள்ளி விடுமுறை இருந்தது. தனது பள்ளி நண்பர்கள் இருபது பேரை ஒன்று சேர்த்தாள். சிப்கோ இயக்கத்தைப் பற்றிப் பள்ளியில் ஆசிரியர் பாடம் சமீபத்தில் தான் பாடம் எடுத்திருந்ததால் அனைவருக்கும் ஞாபகம் இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுடன் கலந்து பேசினாள் தாமரை.

எல்லோருமாகக் கிளம்பி, சனிக்கிழமை காலையில் வனப்பகுதிக்கு விளையாடப் போவதாக அவரவர் வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்கள்.

கிளம்பும் போது தாமரை, தனது சித்தியின் மொபைலை ஞாபகமாக எடுத்துக் கொண்டாள். அவளுடைய நண்பர்களிலும் இரண்டு, மூன்று பேர் வீட்டிலிருந்து மொபைல் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தார்கள். எல்லோரையுமே பச்சை நிறத்தில் உடை அணிந்து வரச் சொல்லியிருந்தாள் தாமரை.

திட்டமிட்டபடி சனிக்கிழமை காலையில் நதிக்கரையில் நண்பர்கள் எல்லாரும் கூடினார்கள். எண்ணிப் பார்த்தபோது மொத்தம் பதினைந்து பேர் வந்திருந்தார்கள். ஐந்து பேரால் வர முடியவில்லை.

“முதலில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை எல்லாரும் சேர்ந்து போகலாம். எனக்கு அன்னைக்குப் போன இடத்துக்கு வழி ஓரளவு ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் வழி தெரியலைன்னா, அஞ்சஞ்சு பேரா மூணு க்ரூப்பாப் பிரிஞ்சு தேடுவோம். எல்லாரும் நான் சொன்னபடி விசில் கொண்டு வந்திருக்கீங்களா? ஏதாவது ஆபத்துன்னாலோ, இல்லை மரங்களை வெட்டிட்டிருக்கற இடம் பத்தித் தகவல் தெரிஞ்சாலோ உடனே மத்தவங்களை விசிலடிச்சுக் கூப்பிடணும்” என்று சொன்னாள் தாமரை. எல்லாருமே விசில் கொண்டு வந்திருந்தார்கள். நந்துவும், சுந்துவும் மட்டும் கொண்டு வரவில்லை.

“எவ்வளவு தூரம் படிச்சுப் படிச்சு சொன்னேன். ஏன் கொண்டு வரலை?” என்று தாமரை கோபித்துக் கொண்டாள். நந்து சிரித்துக் கொண்டே வாயில் விரல்களை வைத்து அழகாக விசில் அடித்துக் காண்பித்தான்.

“எங்களுக்கு எதுக்கு விசில்? நாங்களே விதவிதமா சூபரா விசில் அடிப்போம். குயில் மாதிரி கூவணுமா? கிளி மாதிரி கீச், கீச் பண்ணனுமா? இல்லை மயில் மாதிரி கர்ணகடூரமாக் கத்தணுமா?” என்று சுந்து பெருமையடித்துக் கொள்ள, தாமரை அவர்கள் இருவரையும் முறைத்தாள்.

“சரி சரி, தேவைன்னா விசிலடிச்சா சரி. ரொம்பப் பெருமையடிச்சுக்க வேணாம். நாம செய்யப் போறது ஸீரியஸான வேலை. அதுக்கேத்தபடி பொறுப்பா நடந்துக்கணும். யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கணும்” என்று தாமரை சொல்ல, அந்த நண்பர்கள் நதிக்கரையில் இருந்து கிளம்பினார்கள்.

வனத்திற்குள் நுழைந்து விளையாடிக் கொண்டே, மெல்ல மெல்ல வனத்தின் அடர்ந்த உட்பகுதியை அடைந்தார்கள். அந்தப் பக்கமாக வந்த ஒரு பெரியவர், “குழந்தைகளா, காட்டுக்குள் ரொம்ப நேரம் விளையாடாமச் சீக்கிரமா வீடு போய்ச் சேருங்க. லேட்டானா வீட்டில் பெரியவங்க தேடுவாங்க. கவலைப் படப் போறாங்க” என்று அறிவுரை வழங்கி விட்டுப் போனார்.

மாலை நேரம் நெருங்கிவிட்டது. மரங்கள் அடர்ந்து இருந்த உட்பகுதியில் சூரியனின் கதிர்கள் ஊடுருவ முடியாததால் வெளிச்சம் அங்கு மிகவும் குறைவாக இருந்தது.

அப்போது திடீரென்று புலி உறுமும் சத்தம் கேட்டது. எங்கிருந்தோ பல நரிகள் சேர்ந்து ஊளையிடும் சத்தமும் கேட்டது. குழந்தைகள் பயத்துடன் ஒருவர் கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய முகங்களில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *