கரடி இளவரசன்

மலையடிவாரத்தில் ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தின் ஒரு கோடியில் ஏழைக் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. அவர்கள் வீட்டில் நிறையக் குழந்தைகள். ஆறு ஆண் குழந்தைகள், ஆறு பெண் குழந்தைகள் என்று பெரிய குடும்பம்.

ஒருநாள் இரவு நேரத்தில், நன்றாக மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தார்கள். கதவுக்கு வெளியே, ஒரு பெரிய கரடி மழையில் நனைந்தபடி நின்றுகொண்டிருந்தது.

மழையில் நனைந்த கரடிக்குக் கம்பளி போர்த்தி உணவு தரும் கருணா

“இன்று இரவு மட்டும் உங்கள் வீட்டுத் திண்ணையில் ஒதுங்கிவிட்டுக் காலையில் போகட்டுமா? பலத்த மழை பெய்துகொண்டிருப்பதால் காட்டிற்குள் திரும்பிப் போக முடியவில்லை. இருட்டில் வழி சரியாகத் தெரியவில்லை. குளிர் வேறு அதிகமாக இருக்கிறது” என்று பணிவோடு பேசியது அந்தக் கரடி.

வீட்டின் பெரியவர்கள் சம்மதம் தெரிவிக்க, கரடியும் வீட்டிற்கு வெளியே இருந்த திண்ணையில் படுத்துக்கொண்டது. கடைசிக் குழந்தையான சிறுமி கருணா மட்டும் கரடியைப் பார்த்து இரக்கம் கொண்டு, பழைய கம்பளிகளைக் கொண்டு வந்து கொடுத்தாள். மற்ற குழந்தைகள் எல்லோரும் அந்தக் கரடியை அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்கள். கருணா, வீட்டில் மிஞ்சியிருந்த உணவையும் கொண்டு வந்து கரடிக்குக் கொடுத்தாள்.

அடுத்த நாள் காலையில் கரடி, அந்தக் குடும்பத்திற்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பியது. சிறிது நேரம் கருணாவையே உற்றுப் பார்த்தது.

“இந்தச் சிறுமியை என்னோடு கூட்டிக்கொண்டு போக நீங்கள் அனுமதித்தால், நான் உங்களுக்கு நிறையப் பணம் தருகிறேன். நீங்கள் எதிர்பாராத அளவிற்கு எக்கச்சக்கமான பணம் என்னால் தரமுடியும்” என்று கேட்டது. கருணா, அதைக் கேட்டு பயந்துபோனாள்.

கருணாவின் அப்பா, குழம்பிப் போய்விட்டார். ஒரே ஒரு குழந்தையை இழக்க முடிவுசெய்தால் மற்ற குழந்தைகள் வசதியாக வாழுமே என்று நினைத்தார். கருணாவின் அம்மாவும் அதையே நினைத்தார். அவர்களுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட கருணா, கரடியுடன் கிளம்புவதற்குத் தயாரானாள். குடும்பத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்ய முன்வந்தாள் கருணா.

கரடி, நிறையப் பணம் அடங்கிய மூட்டையை அந்தக் குடும்பத்தின் தலைவரிடம் கொடுத்துவிட்டு கருணாவை அழைத்துக்கொண்டு போனது. காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்து சென்றபிறகு ஒரு பெரிய மாளிகை தெரிந்தது. அந்த மாளிகைக்குள் நுழைந்த கரடி, கருணாவிற்கு ஒரு பெரிய அறையைக் காட்டியது. அவளிடம் ஒரு வெள்ளி மணியைக் கொடுத்தது.

“உனக்கு என்ன வேண்டுமோ, இந்த மணியை ஆட்டிச் சத்தம் போட்டுக் கேட்டால், நீ கேட்பது உனக்கு உடனே கிடைத்து வரும்” என்று சொன்னது கரடி.

மணியை ஆட்டி, “எனக்குப் பசிக்கிறது. உணவு வேண்டும்” என்று கருணா கேட்க, அவளெதிரே ஒரு மேசை உடனடியாகத் தோன்றியது. அதன் மேலே, ஒரு பெரிய தட்டில் நல்ல சுவையான உணவு பரிமாறப்பட்டிருந்தது. விதவிதமான பதார்த்தங்கள், குடிப்பதற்கு பானங்கள், இனிப்புகள், பழங்கள் என்று அனைத்தும் அந்தத் தட்டில் வைக்கப்பட்டிருந்தன. வயிறார உண்டாள் கருணா.

மீண்டும் மணியை ஆட்டினாள் கருணா.

“எனக்குத் தூக்கம் வருகிறது. படுத்துத் தூங்குவதற்கு நல்ல படுக்கை வேண்டும்” என்று கேட்டாள்.

உடனே அவளெதிரே பெரிய கட்டில், அதன் மேல் மெத்தை, தலையணை, போர்வை என்று அனைத்தும் கிடைத்தன. படுத்து நன்றாகத் தூங்கினாள். கரடி, அவளுடைய காலடியில் படுத்துக்கொண்டது. கருணாவிற்கு எந்தக் குறையும் இல்லை. வேளாவேளைக்கு உணவு, விதவிதமான ஆடைகள், சுகமான வாழ்க்கை என்று நாட்கள் அமைதியாகக் கழிந்தன. மாளிகையில் எல்லா வசதிகளும் இருந்தன. வெளியே அழகான தோட்டம் இருந்தது. அதில் நிறைய நேரம் விளையாடினாள். இருந்தாலும் ஒருநாள் கருணாவிற்குத் தன் அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

கரடியும் அவளுடைய ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அவளைக் கூட்டிக்கொண்டு கிளம்பியது.

“ஒரே ஒரு விஷயம். நீ அவர்களைப் பார்த்துவிட்டுச் சீக்கிரமாகக் கிளம்பவேண்டும். யாரிடமும் தனியாக உட்கார்ந்து நீண்ட நேரம் பேசக்கூடாது” என்று சொன்னது. கருணாவும் சம்மதித்தாள்.

வீட்டை அடைந்து எல்லோரையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள் கருணா. கரடி சொன்ன எச்சரிக்கையை மறந்துவிட்டு அம்மாவிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தாள். தாங்கள் வசிக்கும் மாளிகை பற்றி, அதன் வசதிகள் பற்றி, படுக்கை பற்றி எல்லாம் அம்மாவிடம் சொன்னாள்.

“முட்டாள் பெண்ணே! கரடியை ரொம்பவும் நம்பாதே. அது ஒருவேளை கரடி உருவில் ஒளிந்திருக்கும் பூதமாகக்கூட இருக்கலாம். இரவு தூங்கும்போது ஜாக்கிரதையாக இரு. எழுந்து அடிக்கடி கரடி எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று கவனித்துக் கொள். எச்சரிக்கையுடன் நடந்துகொள்” என்று மகளுக்கு அறிவுரை கூறி அனுப்பினாள் கருணாவின் அம்மா.

அன்று இரவு தங்களுடைய மாளிகைக்கு வந்து சேர்ந்ததும் களைத்துப்போயிருந்த கரடியும், கருணாவும் தூங்கப் போனார்கள்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தூங்கும் இளவரசனைக் காணும் கருணா

கொஞ்ச நேரம் கழித்து விழித்து எழுந்த கருணா, கையில் மெழுகுவர்த்தியுடன் கரடி எங்கே படுத்துத் தூங்குகிறது என்று பார்த்தாள். அவளுடைய காலடியில் கரடி இல்லை. அழகான இளவரசன் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அந்த மெழுகுவர்த்தியில் இருந்து உருகிய சூடான மெழுகு, அவன் மீது விழ, அந்த இளவரசன் துள்ளி எழுந்தான்.

“என்ன காரியம் செய்துவிட்டாய் கருணா? ஒரு சூனியக்காரியின் சாபத்தால் நான் இவ்வளவு நாட்கள் பகல் நேரத்தில் கரடியாக இருந்தேன். இன்னும் சில நாட்களில் சாபம் தீர்ந்திருக்கும். இப்போது நீ அவசரப்பட்டுச் செய்த காரியத்தால் நான் மறுபடியும் சூனியக்காரியின் பிடியில் மாட்டிக்கொள்ளப் போகிறேன்” என்று வருத்தத்துடன் சொல்ல, அதிர்ச்சியுடன் நின்றாள் கருணா.

“இப்போது நான் சூனியக்காரியிடம் திரும்ப வேண்டும். சூரியனுக்குக் கிழக்கில், நிலாவிற்கு மேற்கில் இருக்கும் மாளிகைக்குப் போய் அந்த நீள மூக்கு இளவரசியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தப்பிக்க முடியாது நான்” என்று கண்ணீருடன் சொல்லிவிட்டுச் சட்டென்று அங்கிருந்து மறைந்துபோனான். உடனே அந்த மாளிகையும், அதைச் சுற்றியிருந்த தோட்டம் எல்லாமே மறைந்துபோயின. கருணா, காட்டின் நடுவில் தன்னந்தனியாக நின்றாள்.

‘என்னுடைய முட்டாள்தனத்தால் இளவரசன் மாட்டிக்கொண்டான். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்’ என்று மனதிற்குள் முடிவெடுத்த கருணா, நடக்க ஆரம்பித்தாள்.

கொஞ்ச தூரத்தில் இருந்த ஆற்றங்கரையில் ஒரு பாட்டி உட்கார்ந்திருந்தாள். அவளிடம் சென்று உதவி கேட்க முடிவு செய்தாள்.

“பாட்டி, பாட்டி, சூரியனுக்குக் கிழக்கில், சந்திரனுக்கு மேற்கில் இருக்கும் கோட்டைக்குப் போகவேண்டும் நான். எனக்கு வழி சொல்கிறீர்களா?” என்று கேட்டாள்.

“எனக்குத் தெரியாது. கொஞ்ச தூரம் நடந்து போனால் என்னுடைய அக்காவை நீ சந்திக்கலாம். அவளிடம் கேள்” என்று சொன்ன பாட்டி,

“இந்தா, இந்தத் தங்க ஆப்பிளை வைத்துக்கொள். உனக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு, ஒரு தங்க ஆப்பிளை அவளிடம் கொடுத்து வழியும் காட்டினாள்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும், ஒரு மரத்தடியில் இன்னொரு பாட்டி இருந்தாள்.

“பாட்டி, பாட்டி, சூரியனுக்குக் கிழக்கில், சந்திரனுக்கு மேற்கில் இருக்கும் கோட்டைக்குப் போகவேண்டும் நான். எனக்கு வழி சொல்கிறீர்களா?” என்று கேட்டாள்.

“எனக்குத் தெரியாது. கொஞ்ச தூரம் நடந்து போனால் என்னுடைய அக்காவை நீ சந்திக்கலாம். அவளிடம் கேள்” என்று சொன்ன பாட்டி,

“இந்தா, இந்தத் தங்கச் சீப்பை வைத்துக்கொள். உனக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு, ஒரு தங்கச் சீப்பை அவளிடம் கொடுத்து வழியும் காட்டினாள்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் அடுத்து இன்னொரு பாட்டியைச் சந்தித்தாள். அவரிடமும் உதவி கேட்டபோது,

“எனக்குத் தெரியாது. என்னுடைய நண்பன் காற்றிடம் சொல்லி உனக்கு உதவச் சொல்கிறேன். இந்தா, இந்தத் தங்கத்தாலான நூல் நூற்கும் இராட்டினத்தை வைத்துக்கொள். உனக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு, தங்க இராட்டினத்தைக் கொடுத்தாள். காற்றை அழைத்து உதவி கேட்க, முதலில் வடக்குக் காற்று, அடுத்துத் தெற்குக் காற்றும் பலமாக வீசி, அவளைத் தூக்கிக்கொண்டு போய் அந்தக் கோட்டையின் முன்னால் நிறுத்தின.

கோட்டையின் மேற்பகுதியில் ஒரு ஜன்னல் வழியாக, மூன்று அடி நீளமான மூக்குள்ள இளவரசி ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். கருணா, அவளைக் கூப்பிட்டாள். இளவரசி, கருணாவின் கையில் இருந்த தங்க ஆப்பிளைப் பார்த்தாள். அவளுடைய கண்களில் பேராசை தெரிந்தது.

“பெண்ணே, யார் நீ?” என்று கேட்டாள்.

“என் பெயர் கருணா. இந்தக் கோட்டையில் தங்கியிருக்கும் இளவரசனைப் பார்த்துப் பேச வேண்டும்” என்றாள் கருணா.

“இன்று ராத்திரி வா. அவன் இருக்கும் இடத்திற்கு உன்னை அனுப்புகிறேன். ஆனால், நீ எனக்கு அதற்குப் பதிலாக அந்தத் தங்க ஆப்பிளைத் தரவேண்டும்” என்றாள்.

“சரி” என்று சொன்ன கருணா, இரவு வரை காத்திருந்தாள். தங்க ஆப்பிளை வாங்கிக்கொண்டு இளவரசன் இருந்த அறைக்கு அனுப்பிவைத்தாள் அந்த நீளமூக்குக்காரி.

ஆனால், இளவரசனோ தூங்கிக்கொண்டிருந்தான். காலை பொழுது விடிந்துவிட்டது. அவனோ கண் விழிக்கவே இல்லை. அந்தப் பெண், கருணாவிடம்,

“உன் நேரம் முடிந்தது” என்று சொல்லி விரட்டிவிட்டாள்.

அடுத்த நாளும் அதே போலத் தன்னிடம் இருந்த தங்கச் சீப்பைக் கொடுத்துவிட்டு இளவரசனைச் சந்திக்கப் போனாள் கருணா. அன்றும் தூங்கிக்கொண்டே இருந்தான் இளவரசன். கருணா, ஏமாற்றத்துடன் திரும்பினாள்.

மூன்றாவது நாள், கடைசி முயற்சியாகத் தன்னுடைய தங்க இராட்டினத்தைக் கொடுத்துவிட்டு இளவரசனைப் பார்க்கப் போனாள் கருணா.

‘இனிமேல் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. இன்றும் இளவரசன் தூங்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது?’ என்ற கவலையுடன் இளவரசன் இருந்த அறைக்குச் சென்றாள்.

ஆனால், அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அங்கே இளவரசனைக் கவனித்துக்கொள்ள வைத்திருந்த பணியாள், இளவரசனிடம் கருணா வந்து இரவு முழுவதும் இரண்டு முறை காத்திருந்ததைச் சொல்லிவிட்டான். சூனியக்காரி, இளவரசனுக்குப் பாலில் வழக்கம்போலத் தூக்கமருந்து கலந்து கொண்டு வந்தாள். அதைக் குடிப்பது போலப் பாவனை செய்துவிட்டுக் கொட்டிவிட்டான் இளவரசன். அதனால்தான் அன்று தூங்காமல் விழித்திருந்தான்.

கருணாவைப் பார்த்ததும், மகிழ்ச்சி அடைந்த இளவரசன், அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டான்,

“என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாயா? நன்றி கருணா” என்று சொல்லிவிட்டு அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான். உடனே வெளியே டமாலென்று ஒரு சத்தம். அந்த நீள மூக்கு சூனியக்காரி, வெடித்துச் சிதறிக் காற்றில் கரைந்துவிட்டாள்.

கருணாவும் இளவரசனும் அரண்மனையில் மகிழ்ச்சியுடன் நிற்க, சூனியக்காரியின் சாபம் நீங்கும் காட்சி

அந்தக் கோட்டை, பெரிய அரண்மனை ஆனது. வெளியே இருந்த காடு, ஒரு பெரிய நகரமானது. அரண்மனையில் அரசர், அரசி, அமைச்சர்கள், வீரர்கள், பணியாட்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். பொக்கிஷம் நிறையப் பொன்னும், பொருளும் நிறைந்து வழிந்தன.

சூனியக்காரியின் சாபத்தால் மறைந்துபோயிருந்த எல்லாப் பொருட்களும், கருணாவின் பொறுமையால் திரும்பக் கிடைத்தன.

இளவரசன், கருணாவைத் திருமணம் செய்துகொண்டு, அந்த இராஜ்ஜியத்தை மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்தான். ஏழைப் பெண் கருணா, தன் பொறுமையாலும், அன்பாலும் ஒரு நாட்டின் அரசியாகிவிட்டாள்.

நிறைவு.

புவனா சந்திரசேகரன்.

Leave a Reply