வெற்றியும் தோல்வியும்

கதை: மு. ஜீவசுடர், 6th std.
படம்: மு. ஜெய்சுடர், 5th Std.


வெற்றியும் தோல்வியும் நண்பர்கள்.

ஒரு நாள் வெற்றியும் தோல்வியும் ஒரு திறமையான போட்டி வைத்துக்கொள்ள முடிவு செய்தன.

வெற்றி: “இந்தக் கரடுமுரடான பாதைகளைக் கடந்து சிகரத்தைத் தொடுவோரே வெற்றியாளர் என அறிவிக்கப்படுவர்.”

தோல்வி: “எனக்கு சம்மதம்.”

வெற்றி: “அப்பொழுது வா… போட்டியைத் துவக்குவோம்.”

வெற்றியும் தோல்வியும் ஓடத் தொடங்கின.
சிறிது தூரம் ஓடியதும் தோல்வி நிலைதடுமாறி நின்றது.

தோல்வியின் முகம் வாடியது.

வெற்றியோ தோல்வியைப் பார்த்துக் கேலி செய்தது. அத்துடன் தொடர்ந்து ஓடியது. தோல்வி வெற்றியைக் கூப்பிட்டது.

தோல்வி: “வெற்றியே, என்னை ஒருமுறை சந்தித்துவிட்டுப் போ. தயவுசெய்து என்னைச் சந்தித்துவிட்டுப் போ.”

வெற்றி தோல்வியைச் சிறிதும் மதிக்காமல் தலைக்கனத்துடனும் கர்வத்துடனும் மேலும் வேகமாக ஓடியது.

ஆனால் வெற்றி தவறான பாதைக்குள் தெரியாமல் நுழைந்துவிட்டது. எந்தப் பாதை சரியான பாதை என்று தெரியாமல் அதே இடத்தில் நின்றது. அதனைப் பின்தொடர்ந்து வந்த தோல்வியோ, வெற்றியின் தோளைத் தட்டிக்கொடுத்து,

“ஏன் நண்பா, மனம் தளர்ந்துவிட்டாயா? நான் உனக்கு எதிரி அல்ல. நான் என்றுமே உனக்கு நண்பன்தான். நீ போன பாதை தவறானது என்று எனக்கு ஏற்கனவே தெரியும். சரியான பாதையை உன்னிடம் கூறுவதற்காகத்தான் அழைத்தேன். என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றதால் சிகரத்தின் அடியில் நின்றுகொண்டிருக்கிறாய். என்னைச் சந்தித்தபின் சென்றிருந்தால் அந்தச் சிகரத்தின் உச்சியை அடைந்திருப்பாய். ஏன் என்றால், தோல்வியே வெற்றிக்கு முதல் படி” என்றது.

வெற்றி கவலையாக நின்றது.

“இந்தத் தோல்வியையும் அனுபவமாக எடுத்துக்கொண்டு மேலும் உன் முயற்சியைத் தொடங்கு” என்று நண்பனுக்கு உற்சாகம் அளித்தது தோல்வி.

Leave a Reply