பவ் பவ் – கீச்கீச்

ஒரு ஊரில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் வினு என்ற ஒரு சின்ன பையன் இருந்தான். அவன் ஆசைப்பட்டுக் கேட்டதால் ஒரு நாய்க்குட்டி வளர்த்து வந்தான். அந்த நாய்க்குட்டியின் பெயர் மின்னல். ரொம்பத் துருதுருன்னு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஒருநாள் வினு ரொம்ப ஆசைப்பட்டுக் கேட்டதால் அவங்க அம்மா, அப்பா அவனுக்கு கிளி ஒன்று வாங்கிக் கொடுத்தாங்க. அந்தக் கிளிக்கு சிகப்பின்னு பேர் வச்சாங்க. வினுவுக்கு சிகப்பின்னா ரொம்பப் பிடிக்கும். நம்ம மின்னலுக்கும் சிகப்பியை ரொம்பப் பிடிச்சது. அதற்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது அதோட குரல்தான். கீகீன்னு அது கத்துவது ரொம்ப இனிமையா இருந்துச்சு. அது கீகீன்னு சொல்லும்போது அதுவும் அதேபோல் சொல்ல முயற்சி செய்தது. ஆனா பவ் பவ்ன்னுதான் சத்தம் வந்தது. வினு சிரிச்சிட்டான். மின்னலுக்கு ஒரே வெட்கமா போச்சு. எப்படியாவது தனக்கும் சிகப்பி மாதிரி இனிமையான குரல் வரணும்னு ஆசைப்பட்டுச்சு. ஆசைப்பட்டா போதாதில்லையா?

சிகப்பி கிளியின் இனிய குரலைக் கேட்டு பவ் பவ் என்று குரைக்கும் மின்னல் நாய்க்குட்டி

நம் மின்னல் அதற்கான முயற்சியிலும் தீவிரமா ஈடுபட்டுச்சு. தன்னோட குரலை வேற வேற மாதிரி மாற்றி முயற்சி செஞ்சது. திடீர்னு ஒரு முறை குரல் உச்சஸ்தாயியில் பவ் பவ் என்று வர மின்னலுக்கு ஒரே சந்தோஷம். பவ் பவ் என்று கரகரக் குரலில் கத்தாமல் பவ் பவ் என்று மெல்லிசான குரலில் கத்த ஆரம்பித்தது. வினுவுக்குப் பயமாகிவிட்டது. மின்னலுக்குச் சளி பிடித்து தொண்டை கட்டிவிட்டதுன்னு நினைச்சு அம்மாவிடம் சொன்னான். இருவரும் கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போய் மின்னலைக் காட்டினாங்க. அவர் எல்லாப் பரிசோதனையும் செய்து எல்லாம் நல்லாத்தான் இருக்கு என்று சொல்லிட்டார். வினுவுக்கு மின்னல் தன் சுயகுரலில் பவ் பவ் என்று கத்த வேண்டும் என்று ஆசை. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தத்தில் இருந்தான்.

ஒருநாள் மதிய நேரம் அவர்கள் வீட்டிற்குள் ஒரு பொல்லாத பூனை வந்துவிட்டது. சிகப்பியைப் பிடிக்கப் பக்கத்தில் போனது. சிகப்பிக்குப் பெரிய இறக்கை கிடையாது. அதனால் பறக்க முடியாது. கீச் கீச் என்று அங்கும் இங்கும் குதித்தது. பூனை பக்கத்தில் வந்துவிட்டது. கிளியைத் தொடப்போகும் நேரத்தில் நம்ம மின்னல் வந்துவிட்டது.

பூனையைப் பார்த்ததும், ‘அச்சச்சோ… நாய்க்குட்டி இருக்கே! என்ன செய்வது!’ என்று சில விநாடிகள் தயங்கியது. அளவில் அந்தப் பூனை நம் மின்னலின் உயரத்திற்கு இருந்தது. ‘தைரியமாக முன்னேறலாமா?’ என்று பூனை யோசித்துக்கொண்டிருந்தபோது மின்னல் தன் மெல்லிய குரலில் பவ் பவ் என்றது. அதைக் கேட்டதும் பூனைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘இது மிகவும் குட்டி நாய். குரலில் வயதிற்கான மாற்றமில்லை; நாய்க்கான கம்பீரமில்லை’ என்று எண்ணியது. நம் மின்னலை அலட்சியமாக எண்ணி சிகப்பியை நோக்கி அடி எடுத்து வைத்தது. நம் மின்னல் பவ் பவ் என்று தன் கீச்சுக் குரலில் கத்திப் பார்த்தது. பூனை பயப்படாமல் முன்னேறி வந்தது.

பூனையிடமிருந்து சிகப்பி கிளியைக் காக்கத் துணிவுடன் குரைக்கும் மின்னல் நாய்க்குட்டி

அவ்வளவுதான்! மின்னலுக்கு செம கோபம் வந்துவிட்டது. சிகப்பிக்கும் அந்தப் பூனைக்கும் நடுவில் போய் நின்று தன் கம்பீரக் குரலில் பவ் பவ் என்றது. அந்தச் சத்தத்தில் தெரிந்த கோபத்தில் பூனை நின்றது; மின்னலைப் பார்த்தது. கோபத்தில் கண்கள் சிவந்து, முன்னங்கால்களை அழுந்த ஊன்றி, பின்னங்கால்கள் எம்பிப் பாய்வதற்குத் தயார் நிலையில் இருந்தபடி பவ் பவ் என்று குரைத்த மின்னலைப் பார்த்த பூனை பயத்தில் ஓடிவிட்டது. சிகப்பிக்கு ஒரே சந்தோஷம். மின்னலின் முதுகில் உட்கார்ந்து செல்லமாய் அதைக் கொத்திக் கொத்திப் பார்த்தது. சிகப்பியை மின்னல் காப்பாற்றியதைப் பார்த்த வினுவுக்கு ஒரே சந்தோஷம்.

“மின்னு! நல்ல வேளை, சரியான நேரத்தில் உன் அழகான குரல் வெளியே வந்துச்சு. அதைக் கேட்டுத்தான் அந்தப் பொல்லாத பூனை ஓடிவிட்டது. தேங்க்யூ!” என்று மின்னலைக் கட்டிப்பிடித்துக்கொண்டே கூறினான்.

அப்போதுதான் மின்னலுக்குத் தன் குரலின் அருமை புரிந்தது. கடவுளும் இயற்கையும் எனக்குக் கொடுத்த திறன்களின் அருமை தெரியாமல் அடுத்தவர் மாதிரி என்னைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்தேனே! இனி அடுத்தவர் திறமையைப் பாராட்டுவேன்; என் திறமையை வளர்த்து முன்னேறுவேன்; அடுத்தவரைப் போல இருக்க முயற்சி செய்யமாட்டேன் என்று முடிவு செய்தது. அன்று முதல் பவ் பவ் என்று கூறியபடி சந்தோஷமாய் சுற்றித் திரிந்தது.

Leave a Reply