பள்ளியில் இருந்து திரும்பி வந்த பாலு, புத்தகப்பையைத் தன்னுடைய மேசையில் வைத்தான். அம்மா தந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு, அவசர அவசரமாக விளையாடக் கிளம்பினான்.
பாலு ஆறு வயதுச் சிறுவன். அவனுடைய தங்கை மகிழினி, மூன்றரை வயதுச் சிறுமி. இன்னும் பள்ளி செல்ல ஆரம்பிக்கவில்லை. அவர்கள் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். கிராமத்தின் எல்லையில் அடர்ந்த காட்டுப் பகுதி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் அவர்களுடையது.
பாலு கிளம்பிக் கொண்டிருந்தபோது, மகிழினி அவனிடம் ஓடிவந்தாள்.
“அண்ணா, அண்ணா, நானும் வரேன் உன் கூட” என்று சொன்னபடி அவனுடைய காலைக் கட்டிக்கொண்டாள்.
“இல்லை பாப்பா, அண்ணா ரொம்ப தூரம் நடந்துபோவேன். ஒண்ணால நடக்கமுடியாது. அப்புறம் நாங்க எல்லாரும் அங்கயும், இங்கயும் ஓடிட்டே இருப்போம். நீ நடுவில வந்தாக் கீழே வந்து காயம் பட்டுக்குவே. பக்கத்துல எங்கயாவது வெளையாடப் போகும்போது ஒண்ணைக் கூட்டிட்டுப் போறேன், சரியா?” என்று கெஞ்சினான் பாலு, தங்கையிடம்.
மகிழினியின் கண்களில் கண்ணீர் தளும்பியது. பரிதாபமாக அண்ணனைப் பார்த்தாள்.
“நான் வரும்போது உனக்கு நவாப்பழம் நிறையக் கொண்டு வரேன். உனக்கு ரொம்பப் பிடிக்குமே!” என்று ஆசை காட்டினான்.
“கண்டிப்பாகக் கொண்டு வரணும். சரியா?” என்று அவளும் பதிலுக்குக் கூற, சரியென்று தலையாட்டி விட்டுச் சிரித்த முகத்துடன் கிளம்பினான் பாலு.
மகிழினிக்கு நிஜத்திலும் நவாப்பழம் மிகவும் பிடிக்கும். அதுவும் பழத்தைச் சாப்பிட்டு விட்டு நாக்கு, நீலநிறமாக மாறியதைப் பார்த்துப் பார்த்து ரசிப்பாள் மகிழினி.
பாலு விளையாடப் போன இடத்திற்கு அருகில் காட்டுப்பகுதி ஆரம்பித்துவிடுகிறது. அங்கு நிறைய மரங்கள் உண்டு. சில நவா மரங்களும், அத்தி மரங்களும் உண்டு. விளையாடப் போகும் சிறுவர்கள், கனிந்த பழங்களை வீட்டிற்குக் கொண்டு வருவதுண்டு. வழியில் கிடக்கும் பாதாம் கொட்டைகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து கல்லால் உடைத்துத் தங்கைக்குத் தருவான் பாலு.
விளையாடிக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருட்ட ஆரம்பித்ததும் தான் பாலுவுக்கு, நவாப்பழ ஞாபகமே வந்தது. காட்டுப் பகுதியின் ஆரம்பத்தில் இருந்த நவா மரத்தில் அன்று பழங்களே கிடைக்கவில்லை. எல்லோரும் ஏற்கனவே எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
“அச்சச்சோ, என் தங்கை மகிழினி கிட்டக் கண்டிப்பாக் கொண்டு வருவேன்னு சொன்னேனே? இப்போ என்ன செய்வேன்?” என்று நண்பனிடம் வருத்தத்துடன் சொன்னான் பாலு.
“கவலைப்படாதே பாலு, காட்டுக்குள்ள இன்னும் கொஞ்ச தூரம் நடந்துபோனா, ஆத்தங்கரை கிட்ட, ஒரு பெரிய நவாமரம் இருக்கு. அதுல இன்னும் பெருசாப் பழம் இருக்கும். சாதாரணமா இங்கே யாரும் போகமாட்டாங்க. அங்கே போய் நீ எடுத்துட்டு வரலாம்.”
“நீயும் வரியா?”
“இல்லைடா பாலு. ஸாரி. வீட்டில் அம்மாக்கு உடம்பு சரியில்லை. சீக்கிரம் போய் அப்பாக்கு ஹெல்ப் பண்ணனும். சீக்கிரமாப் போ. இருட்டிடப் போகுது” என்று சொல்லிவிட்டுப் பறந்துவிட்டான் நண்பன்.
பாலு, வேறு வழியில்லாமல் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தான். வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்ப அவனுக்கு இஷ்டமில்லை. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். அந்தப் பக்கம் பாலு முதல் தடவையாகப் போனதால் நவா மரத்தை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால், அவனுடைய நண்பன் சொன்னது போல நிறைய நவாப் பழங்கள், அதுவும் பெரிது பெரிதாக அவனுக்குக் கிடைத்தன. கையில் இருந்த பையில் நிறையப் பழங்களை நிரப்பிக் கொண்டான். திடீரென்று பார்த்தால் நன்றாக இருட்டிவிட்டது. மனதில் பயம் கூடியது.
பதட்டத்துடன் ஓட்டமும், நடையுமாகத் திரும்ப ஆரம்பித்தான். பதட்டத்தினாலோ என்னவோ தெரியவில்லை, வந்த வழியை மறந்துவிட்டான். சுற்றிச் சுற்றி வந்ததில் காட்டுக்குள் நீண்ட தொலைவு வந்துவிட்டதை உணர்ந்தான். சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான். அப்போது,
“அண்ணா, அண்ணா” என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. பார்த்தால் ஒரு முயல் குட்டி, தாவித் தாவிக் குதித்து அவன் அருகில் வந்துநின்றது.
‘இந்த முயலா என்னோடு பேசிச்சு?’ என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான் பாலு.
“ஆமாம், நானேதான். எதுக்கு அழறீங்க? ஏதாவது உதவி வேணுமா உங்களுக்கு?” என்றது முயல் குட்டி.
“நீ என்ன உதவி செய்ய முடியும் எனக்கு? வீட்டுக்குப் போற வழியை மறந்துட்டேன். என் தங்கச்சிப் பாப்பா, எனக்காக வாசல் கதவு கிட்டயே காத்துட்டிருப்பா. இந்த நவாப்பழத்தை அவ கிட்டக் கொடுக்கணும். நான் இந்தக் காட்டுக்குள்ள தனியா மாட்டிக்கிட்டேன்” என்று வருந்தினான் பாலு.
“அவ்வளவு தானே? நான் உங்களை இந்தக் காட்டோட எல்லை வரைக்கும் கொண்டு வந்து விடறேன். போதுமா?”
“நெஜமாவா சொல்லறே? ரொம்ப தேங்க்ஸ். இப்ப ராத்திரி நேரத்துல சிங்கம், புலி, கரடி, நரியெல்லாம் வந்து தாக்குமோன்னு பயந்துட்டேன்.”
“பயப்பட வேண்டாம் அண்ணா. சிங்கம், புலில்லாம் இந்தக் காட்டில இல்லை. கரடி இருக்கலாம். நரி, ஓநாய்லாம் இருக்கு. ஆனா, அப்படி அநாவசியமா எந்த விலங்கும் யாரையும் தாக்காது. பசிக்கும்போதோ, இல்லைன்னா தன்னைத் தானே காப்பாத்திக்கணுங்கற சூழ்நிலை வந்தாலோ மட்டுமே மத்தவங்களைத் தாக்கும். மனுஷங்க தான் காரணமே இல்லாமல் எங்களைப் பிடிச்சுட்டுப் போய் விலைக்கு விப்பாங்க. ஏதோ புது எடத்துக்குக் கொண்டு போய்க் கூண்டில் அடைச்சு வித்தை காமிக்க வைப்பாங்க. எங்களோட கஷ்டத்தை அவங்க யோசிச்சுப் பாக்கறதேயில்லை” என்று அந்த முயல் குட்டி சொன்ன கருத்தின் உண்மையை உணர்ந்து குற்ற உணர்ச்சியுடன் வருந்தினான் பாலு.

அப்படியே பேசிக்கொண்டே நடந்து போனார்கள். வழியில் அவர்களுடன் ஒரு மான்குட்டி, மயில், கிளி மற்றும் குரங்கு எல்லாமே சேர்ந்துகொண்டன. அனைத்து விலங்குகளும் காட்டு வாழ்க்கையைப் பற்றியும், காட்டில் அவை சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் பாலுவிடம் சொல்லிக் கொண்டே வந்தன. அவர்களுடைய வாழ்க்கையின் மொத்தப் பிரச்சினைகளுக்கும் மனிதர்களே காரணம் என்று புரிந்து கொண்டான் பாலு. காட்டை வேறு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, அவர்களுடைய இடத்தையும் மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டே வருவதையும் உணர்ந்து சிந்திக்க ஆரம்பித்தான் பாலு.
ஒருவழியாகக் காட்டின் எல்லையில் அவனை விட்டுவிட்டு அவை, காட்டுக்குள் திரும்பின. புதிய நண்பர்களைப் பற்றி மனதில் அசை போட்டபடி வருத்தத்துடன் வீடு வந்து சேர்ந்தான் பாலு.
மகிழினி, பாலுவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். நவாப்பழங்களை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் ஓடினாள்.
அன்று இரவு பாலுவின் அப்பா, தாமதமாகவே வீட்டுக்குத் திரும்பிவந்தார். பாலுவைக் கூப்பிட்டு வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

“நாளைக்குக் காட்டுக்குள்ள போயி நிறையக் கரடி, மான், பஞ்சவர்ணக் கிளி எல்லாம் பிடிக்கப் போறேன். எங்க முதலாளி பிடிச்சுட்டு வரச் சொல்லிருக்காரு. பெரிய பெரிய சர்க்கஸ் கம்பெனியில இருந்து நிறைய விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான ஆர்டர் வந்துருக்கு. அதைத் தவிர நிறைய முயல்களும் வேணுமாம்” என்று சொன்னபோது, பாலுவுக்குப் பகீரென்றது.
“அப்பா, இனிமேல் இது மாதிரிக் காட்டுக்குள்ள போயி விலங்குகளைப் பிடிக்கற வேலை வேண்டாம்பா. அதை விட்டுட்டு வேற வேலை பாருங்கப்பா. பாவம்பா அந்த விலங்குகள் எல்லாம். இன்னைக்கு நான் காட்டுக்குள்ள தனியா மாட்டிக்கிட்டேன். அவங்க உதவி பண்ணாம இருந்திருந்தா, எனக்கு என்ன ஆயிருக்கும்னு யோசிச்சுப் பாருங்கப்பா. எனக்காகவாவது இந்த வேலையை விட்டுருங்கப்பா” என்று அப்பாவிடம் கெஞ்சினான் பாலு.
மகன் சொன்ன கருத்தில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்ட பாலுவின் அப்பா, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.
நிறைவு.
புவனா சந்திரசேகரன்.
