12/12/2024 அன்று சிங்கப்பூரில் நடந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் தொம்மராஜூ, சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளார்.

18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் முதல் வீரர் இவரே. இதற்கு முன் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ், தமது 22ஆம் வயதில் உலக சாம்பியன் ஆனார். அவரது சாதனையைக் குகேஷ் முறியடித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
இதற்கு முன் தமிழ்நாட்டின் விஸ்வநாத் ஆனந்த் ஐந்து முறை இப்பட்டத்தை வென்றுள்ளார். கடைசியாக விஸ்வநாத் ஆனந்த் 2012ஆம் ஆண்டு இப்பட்டத்தை வென்றார். 2013ஆம் ஆண்டு இந்தியாவிடமிருந்து பறிக்கப்பட்ட பட்டம், குகேஷின் இந்த வெற்றி மூலம் மீண்டும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
“2013இல் நார்வே செஸ் வீரர் மேக்னஸ் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்ற போது, அதை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என விரும்பினேன். தற்போது அது நிறைவேறி உள்ளது” என்று குகேஷ் கூறியுள்ளார்..
வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு மகனை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, அவர் தந்தை டாக்டர் ரஜினிகாந்த் தம் பணியை ராஜிநாமா செய்தார். அன்னை பத்மகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.