ஹாய் சுட்டீஸ்!

எல்லாரும் எப்டியிருக்கீங்க? உங்களுக்கு ஆண்டுத் தேர்வு நடந்துகிட்டிருக்கும்னு நெனக்கிறேன்.. எல்லாரும் நல்லா சிறப்பா தேர்வுகள் எழுத இந்த அத்தையின் வாழ்த்துகள்.

சரி. இந்த மாதம் என்ன தாவரத்தைப் பத்தி நாம தெரிஞ்சிக்கப் போறோம் தெரியுமா?

நிறைய பேர் வீட்டுல இந்தச் செடி இருக்கலாம். நீங்க அடுக்குமாடிக் குடியிருப்புகள்ல இருந்தா கூட உங்க வீட்டு பால்கனியில ஒரு சின்ன தொட்டியில இத உங்க அம்மாவோ அப்பாவோ தாத்தா பாட்டியோ வளர்க்கறத நீங்க பார்க்க முடியும்.

அப்டி என்ன செடின்னு யோசிக்கறீங்களா? 🤔

ஆமாம் சுட்டீஸ்! கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க! 👏

இன்னிக்கு நாம தெரிஞ்சிக்கப் போற தாவரம் கறிவேப்பிலை செடிதான். 🌿

கறிவேப்பிலை! இதை இனிப்பு வேம்புன்னு சொல்வாங்க. ஆனா வேம்பு அதாவது வேப்பமரம்; வேப்ப மரத்துக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை.

ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட கறிவேப்பிலை புதர் போலவும் சிறிய மரமாகவும் வளரக்கூடியது. 🪴

இது நன்கு வடிகால் வசதியுள்ள, வறண்டு போகாத மண்ணில், நல்ல சூரிய வெளிச்சமும் ஓரளவு நிழலும் உள்ள பகுதிகளில் நன்றாக வளரும் தாவரமாகும். வெப்பநிலை குறைந்தபட்சம் 18 °C (64 °F) ஆக இருக்கும்போது வளர்ச்சி மிகவும் வலுவாக இருக்கும்.

இந்தச் செடியில குட்டிக் குட்டியா வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். 🌼🌼 பார்க்கவே ரொம்ப அழகாவும் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

கறிவேப்பிலையின் தாவரவியல் பெயர், முரைய்யா கொய்னீஜிஐ! Murraya koenigii – பெயர் வித்யாசமா இருக்குல்ல. 😁

சரி! சரி! மொறைக்காதீங்க! 😅😁

இது ரூட்டேசீ (Rutaceae) குடும்பத்தை சேர்ந்தது.

இந்தக் குடும்பத்தின் தாவரங்கள் ரொம்பவே வித்யாசமானது. எப்டீன்னு சொல்லவா?

எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தை, கடாரங்காய், ஆரஞ்சுப்பழம் போன்ற சிட்ரஸ் தாவரங்கள் எல்லாம் இந்த ரூட்டேசீ குடும்பத்து உறுப்பினர்கள்தான். ஆச்சர்யமா இருக்குல்ல! 😲

இது சிட்ரஸ் குடும்பம்ன்னு சொன்னேன்ல.. அதனாலயே கறிவேப்பிலையின் இலைகளில் மெல்லிய எண்ணெய்ப் படலம் இருக்கும். இதுதான் இந்த இலைகளின் பளபளப்புக்கும் வாசனைக்கும் மருத்துவ குணத்துக்கும் முக்கியக் காரணம்.

கறிவேப்பிலை இந்தியக் குடும்பங்களின் சமையலில் அதிகளவு பயன்படுத்தப்படும் இலை என்று உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

வறுவல், பொரியல், சாம்பார், ரசம், கூட்டு, குழம்புன்னு என்ன செய்தாலும் அதில கறிவேப்பிலை கண்டிப்பா இருக்கும். 🍱🥘🫕🍛🍲

இது மட்டுமில்ல, சாம்பார் பொடி, ரசப் பொடி, பருப்பு பொடி, இட்லி பொடி மாதிரி வேற என்ன வகையான மசாலாப் பொடி வகைகள் செய்தாலும் அதில கண்டிப்பா கறிவேப்பிலையும் ஒரு முக்கியமான பொருளா சேர்ப்பாங்க.

Courtesy – Internet

நிறைய பேர் சாப்பாட்டுத் தட்டில கறிவேப்பிலைய பார்த்துமே அதை எடுத்து போட்டுடுவாங்க. அப்டி தூக்கிப் போடற கறிவேப்பிலையில அப்டி என்ன இருக்குன்னு சமையல்ல சேர்க்கறாங்கன்னு நெனைக்கறீங்களா?

கறிவேப்பிலையில நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு சுட்டீஸ்!

என்னன்னு சொல்றேன் கேளுங்க!

கறிவேப்பிலை பல நன்மைகளைத் தரக்கூடிய ஒரு மூலிகை. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, முடி உதிர்வதைத் தடுக்கிறது, கண் பார்வையை மேம்படுத்துகிறது, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இது மாதிரி இன்னும் ஏராளமான நன்மைகள் இந்த கறிவேப்பிலையில இருக்கு.

அதனால இனிமே நீங்கல்லாம் உங்க சாப்பாட்டில கறிவேப்பிலையைப் பார்த்தால் அதை தூக்கிப் போட்டாம எடுத்து சாப்பிடணும். சரியா?

சமத்து சுட்டீஸ்! 😍😘

அடுத்த மாதம் வேற ஒரு தாவரத்தைப் பற்றிய தகவல்களுடன் வருகிறேன்.

அதுவரைக்கும் சமத்தா இருங்க.

டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋👋

அன்னபூரணி தண்டபாணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *