இரண்டு செண்ட்டில் அழகாகப் பார்த்து, பார்த்துக் கட்டியிருந்த வீடு அது… கதிரவனுக்கு எப்போதும் அந்த வீட்டின் மேல் அத்தனை பெருமை. சொந்தமாக உழைப்பில் வாங்கியது அல்லவா…
சில நேரம் மகிழ்ச்சியாக, சில நேரம் சத்தமாக, சில நேரம் அமைதியாக எனக் கலவையான மனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வீடு அது.
கதிரவன், பூர்ணா இருவரின் செல்ல மகன் குரு பிரசாத். ஆறாம் வகுப்பு மாணவன். படிப்பில் படு சுட்டி… விளையாட்டு, ஓவியம் என எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் மாணவன். இதை நினைக்கும் போது எப்போதும் கதிரவனுக்குப் பெருமை உண்டு.
கதிரவனுக்கு மருந்துகளை மெடிக்கலிற்கு சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை. நல்ல சம்பளமும் கூட. குருவைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.
அன்று காலையிலேயே தாய்,தந்தை இருவரையும் அழைத்துக்கொண்டு இருந்தான் குரு, பள்ளிக்கு வரச்சொல்லி…
“அப்பா இன்றைக்கு ஆண்டுவிழாப்பா.. நீங்கள் வரணும். ஸ்கூல் ஃபஸ்ட்க்காக எனக்கு மெடல் தர்றாங்க… ஓட்டப்பந்தயத்தில் கூட நான் தான் முதலில் வந்திருக்கிறேன். அப்புறம் நாடகத்தில் நடித்திருக்கிறேன். நீங்கள் பார்க்க வரணும்பா..” என அழைத்துக் கொண்டிருந்தான் குரு.
“எத்தனை மணிக்கு குரு?” கதிரவன் குருவிடம் கேட்டான்.
“சாயங்காலம் ஐந்து மணிக்கு தொடங்குகிறது பா… அம்மா வரேன்னு சொல்லிட்டாங்க. நீங்கள் நேரா ஸ்கூல்க்கு வாங்கப்பா…” ஒவ்வொரு முறையும் பரீட்சை மதிப்பெண்னில் கையெழுத்துப் போட அவனது பள்ளிக்குப் போய் விட்டு திரும்பி வரும் போது எல்லாம் அத்தனை மகிழ்ச்சியாக வருபவன் தானே கதிரவன். அந்த அளவுக்கு அவனிடம் குருவைப் பற்றி அத்தனை நல்லவிதமாக அவனது பள்ளியில் அவனைப் பற்றி பேசுவர். “எப்படி இவ்வளவு நல்லா படிக்கிறான்? எங்க டியூசன் போகிறான்? இப்படிப் பல கேள்விகள்..
“அவன் வீட்டில் படிக்கறது தான்.. டியூசன் எங்கேயும் அனுப்பறது இல்லை.. அவனே படிச்சுக்குவான்” எனப் பெருமையாகச் சொல்லி விட்டு வருவான்.
இப்போது தந்தையை வரச்சொன்ன குருவிடம், “குரு உன்னோட நாடகம் எத்தனை மணிக்கு ஆரம்பம் ஆகும்? நான் சரியாக வந்திடறேன்.”
“அப்பா ஆறாங்கிளாஸ் தானே.. கொஞ்சம் முன்னாடியே வந்துவிடும் பா.. ஏன்னா சின்னப் பசங்க, தூக்கம் வரத் தொடங்கிடும்ன்னு… ஏழு மணிக்குள்ள வந்திடுங்க பா… எட்டு மணிக்குள்ள என்னோட நாடகம் முடிஞ்சிடும்.”
“சரி… நான் சரியாக அந்த நேரத்திற்கு அங்கே இருப்பேன்..” என்று வாக்குறுதி கொடுத்து விட்டு புறப்பட்டான்.
சொன்னது போலவே சரியாக அந்த நேரத்திற்கு அங்கே பள்ளிக்கூட வளாகத்திற்கு வந்திருந்தான். நிகழ்ச்சி தொடங்கி சற்று நேரம் ஆகி இருந்தது.
பெரிய ஸ்டேஜ் கட்டி இருக்க அங்கங்கே நிகழ்ச்சியைப் பார்க்க திரைகள் ஏற்பாடு செய்திருந்தனர். நிறைய இருக்கைகள் வரிசையாகப் போட்டிருக்க, அனைத்துமே நிறைந்து காணப்பட்டது.
மனைவி இருக்கும் இடத்தைத் தேடியபடி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான். குருவோடு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
ஒவ்வொரு வருடமும் ஆண்டுவிழா வெகு சிறப்பாக நடத்துவார்கள். இன்றும் அது போல நடந்து கொண்டு இருந்தது. சிறப்பு விருந்தினராக இன்று மாவட்ட கலெக்டரை வரச்சொல்லி இருந்தனர்.
அடுத்ததாக ஆறாம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெறும் நாடகம். பங்கு பெறுபவர்கள் வரிசையாக அழைக்கப்பட, ஒரு மாதிரியான நெகிழ்ச்சியோடு கவனிக்க ஆரம்பித்தான் கதிரவன்.
மது போதைக்கு அடிமையான ஒருவனின் செயல்களைச் சித்தரிக்கும் நாடகம் அது. குரு நல்ல தந்தையாக பகலில் மகனிடம் சிரித்து விளையாடி வீட்டில் நடந்து கொள்வதும், இரவு குடித்துவிட்டு வீட்டுற்கு வந்து மனைவியை அடிப்பது போல நடிக்க ஆரம்பிக்க… மொத்தமாக உடைந்திருந்தான் கதிரவன்.
மனைவியை அடிப்பது இல்லை தான் ஆனால் நிற்பது, நடப்பது என அனைத்தும் இவனை அப்படியே காபி செய்தது போல நடிக்க… தன் தவறை தன் முகத்திற்கு நேராக அறைந்து சொல்வது போல உணர்ந்தான் கதிரவன். தந்தை குடித்து விட்டு வர, மகனின் மனநிலை எப்படி இருக்கும் என்பது போல குருவிற்கு மகனாக வந்த சிறுவன் இன்னும் அருமையாக உணர்வை வெளிப்படுத்தியிருந்தான்.
அருகில் இருந்தவர் இவனைப் பார்த்தபடி “உங்கள் பையன் தானே? எவ்வளவு தத்ரூபமாக நடிக்கிறான். இதை பார்க்கறவங்களாவது கொஞ்சம் மாறினா நல்லா இருக்கும். நல்ல பையன்; திறமையான பையன்” எனப் பாராட்ட, சிரமப்பட்டு லேசாகச் சிரித்தபடி தலையாட்டினான் கதிரவன்.
நாடகம் முடிந்து வீட்டிற்கு புறப்படும் போது தன் தவறை முழுவதுமாக உணர்ந்திருந்தான் கதிரவன், கூடவே இனி குடிக்கக் கூடாது என்ற முடிவையும் எடுத்திருந்தான்.
நான் ராஜேஸ்வரி.d (கவிசெளமி),கோவையில் வசிக்கிறேன். இரண்டு வருடமாக கதைகள் எழுதுகிறேன். புதினம்2020 போட்டியில் மூன்றாவது பரிசு வாங்கி புத்தகமாக வெளிவந்தது மறக்கமுடியாத அனுபவம்