அன்று மாலை பூங்காவிற்கு வந்த குழந்தைகள், சிட்டுவின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர்.  “எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்!” என்று சொன்னபடி, சிட்டு மரக்கிளையில் வந்து அமர்ந்தது.

சிட்டுவிற்குப் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி விட்டுக் குழந்தைகள் அமர்ந்தனர்.

“போனவாட்டி டைனோசர் அழிஞ்சதுக்கான காரணத்தைக் கயல் கேட்டா. அதுக்கு முன்னாடி, இன்னும் சில வகை கொம்புள்ள டைனோசர் பத்தி நாம தெரிஞ்சுக்கலாம்” என்றது சிட்டு.

“ம். சொல்லு. சொல்லு!” என்று ஆர்வத்துடன், குழந்தைகள் அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள். 

இதுவரைக்கும் நம்ம பூமியில, எத்தனை வகையான டைனோசர்களைக் கண்டுபிடிச்சிருக்காங்கன்னு, யாராவது யூகிச்சிச் சொல்லுங்க, பாப்போம்?

“என்ன ஒரு நூறு இருக்குமா?” இது கயல்.

“ஹூகும்”

“முந்நூறு?” பாபு சொன்னான்..

“ஐநூறு தானே?” என்றான் கதிர்.

“இல்ல”.

“அப்ப நீயே சொல்லு” என்றாள் மலர்.

“எழுநூறு கண்டுபிடிச்சிருக்காங்க”. 

“அடேயப்பா! எழுநூறா?  கேட்கவே பிரமிப்பா இருக்கு!” என்றான் வினோத். 

“இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது, நிறைய இருக்கலாம்னு  ஆராய்ச்சியாளர் சொல்றாங்க”. 

“சிட்டு! இதெல்லாம் ஆராய்ச்சி பண்றவங்களை, ஆர்க்கியாலஜிஸ்ட் (Archaeologist) ன்னு  தானே சொல்வாங்க?”  முத்து கேட்டான். 

“இல்ல முத்து.  ஆர்க்கியாலஜிஸ்டுன்னா, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்ன்னு அர்த்தம்.. அதாவது மண்ணுக்கடியில புதைஞ்சிருக்கிற கட்டிடம், சாமான்களை வச்சு பழங்காலத்துல மனுஷன் எப்பிடி வாழ்ந்தான், அவன் கட்டிடக்கலை எப்பிடியிருந்துச்சி? அவனுக்கு என்னவெல்லாம் தெரிஞ்சி இருந்துச்சு? அவன் நாகரிகம் எப்படி இருந்துச்சுன்னு ஆராய்ச்சி பண்றது, ஒரு வருஷம் முன்னாடி தமிழ்நாட்டுல ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு நடந்து, டிவி, பத்திரிக்கையில எல்லாம் சேதி வந்துச்சே! அது பத்தி யாருக்காவது தெரியுமா?” என்றது சிட்டு.

WhatsApp Image 2020 11 14 at 9.34.20 PM
கீழடி – நன்றி இணையம்

“எனக்குத் தெரியும்.  மதுரைக்குப் பக்கத்துல கீழடியில, மண்ணுக்குக் கீழ புதைஞ்சிருந்த கட்டிடத்தைக் கண்டுபிடிச்சிருக்காங்க. நெறையச் சுட்ட மண்பானை, சட்டியெல்லாம் தோண்டி எடுத்திருக்காங்க. அதுல ஆதன்ங்கிற தமிழ்ப் பேரெல்லாம் இருக்காம். அந்தக் காலத்துலேயே மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரிஞ்சிருக்குதுதாம்”  

“வெரிகுட் கயல்! சரியாச் சொன்னே!” என்று பாராட்டியது சிட்டு.

“இதெல்லாம் ஒனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் பாபு சற்று வியப்புடன்.

“நான் தெனமும் பத்திரிக்கை வாசிப்பேன். எங்க வீட்டுல அப்பாம்மா டிவியில சேதி கேட்கும் போது, நானும் கேட்பேன். அதுல சந்தேகம் வந்தா அம்மா விளக்கிச் சொல்வாங்க”    

“பத்திரிக்கை வாசிக்கிறதும் டிவியில சேதி கேட்கிறதும் ரொம்ப நல்ல பழக்கம்.  அப்பத் தான் நம்மளைச் சுத்தி என்ன நடக்குதுன்னு, நம்மால தெரிஞ்சுக்க முடியும்” என்றது சிட்டு. 

“சரி சிட்டு. எனக்கொரு சந்தேகம்? டைனோசர் ஆராய்ச்சி செய்றவங்களும் மண்ணுக்குள்ள புதைஞ்சி கிடக்கிறதை வைச்சித் தானே ஆராய்ச்சி பண்றாங்க?  அவங்களுக்கும், இந்த ஆர்க்கியாலஜி ஆராய்ச்சி பண்றவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்றான் பாபு..

“சூப்பர் கேள்வி பாபு!  டைனோசர் மாதிரி, நம்ம ஒலகத்துல இருந்து அழிஞ்சி போன பழைய விலங்கு, தாவரங்களோட புதைபடிவத்தை (Fossils) வைச்சி ஆராய்ச்சி பண்றவங்களுக்கு, ஆங்கிலத்துல பாலியான்டாலஜிஸ்ட் (Palaeontologist) ன்னு பேரு. இவங்க புதைஞ்சு கிடக்கிற கட்டிடம் பொருட்களை ஆராய்ச்சி பண்றதில்ல. 

விலங்கு, தாவரத்தோட புதைபடிவத்தை மட்டும் வைச்சி தான், ஆராய்ச்சி பண்ணுவாங்க.  அது மூலமா பழங்காலத்துல பூமியில உயிரினம் எப்பிடி இருந்துச்சி? என்னென்ன மாதிரியான உயிரினம் இருந்து, அழிஞ்சி போயிருக்கு? இப்ப இருக்குற உயிரினங்களோட மூதாதையர் யாருன்னு ஆராய்ச்சி பண்ணிச் சொல்வாங்க. அந்த ஆராய்ச்சி மூலமாத் தான், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த டைனோசர் பத்தி இப்ப நாம தெரிஞ்சிக்க முடியுது.”.

“ஓஹோ!  உண்மையாலுமே, ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான ஆராய்ச்சி தான்; நான் பெரியவனா ஆனப்புறம், டைனோசர் பத்தி ஆராய்ச்சி பண்ணனும்னு, ரொம்ப ஆசையாயிருக்கு சிட்டு!” என்றான் கதிர். 

“ஆர்வமும், முயற்சியும் இருந்தாக் கண்டிப்பாச் செய்யலாம் கதிர். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்து!”

“நன்றி சிட்டு!” என்றான் கதிர். 

“சரி. இன்னிக்குப் புதுசா சில டைனோசர் வகையைப் பத்திச் சொல்லணும்னு வந்தேன். ஆனா நம்ம பேச்சு, வேற எங்கெங்கேயோ போயிடுச்சி. ஆனா அதுவும் கண்டிப்பாத் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் தான். அதனால இன்னிக்குச் சுருக்கமாச் சொல்றேன். அடுத்த தடவை, ஒவ்வொன்னா விரிவாப் பார்க்கலாம்”

“கொம்பு உள்ள டைனோசர் பத்தி, இன்னும் நீ சொல்லவேயில்ல சிட்டு! அதைப் பத்தி மட்டும் இன்னிக்குச் சொல்லிட்டுப் போயேன் சிட்டு!” என்றாள் மலர், கெஞ்சும் குரலில்.

“கண்டிப்பா அடுத்தடுத்த தடவை சந்திக்கும் போது, சொல்றேன் மலர்.  அதுக்கு முன்னாடி, டைனோசர் வகை பத்தி, சில விபரங்களைக் கோர்வையாச் சொன்னாத் தான், ஒங்களுக்கு நல்லாப் புரியும்”

“ஓ.கே சிட்டு!” என்று தலையாட்டினாள் மலர்.

“டைனோசரோட இடுப்பெலும்பு அமைப்பை வைச்சி, பல்லி இடுப்பு வகை (Lizard-hipped), பறவை இடுப்பு வகை (Bird-hipped) ன்னு இரண்டு பெரிய பிரிவாப் பிரிக்கிறாங்க.  இந்தப் பல்லியிடுப்பு (Lizard hipped dinosaurs)  டைனோசர் வகையோட பேரு சாரிஸ்சியா (Saurischia).

இந்த வகையில ரெண்டு காலால நடக்குற டைனோசருக்கு, தெரோபோடு (Theropod) ன்னு பேரு.  நாலு காலால நடக்குறதுக்கு, சாரோபோடு (Sauropod) ன்னு பேரு. மற்ற விலங்குகளைக் கொன்னு, இறைச்சியைத் திங்கிற (Meat eating) டைனோசர் எல்லாமே, தெரோபோடு (Theropod) வகையைச் சேர்ந்தது தான்.  இந்த தெரோபோடு பத்தி, ஏற்கெனவே ஒரு விஷயம், ஒங்களுக்குச் சொல்லியிருக்கேன்.  யாருக்காவது நினைவிருக்கா?”

“ம்.. எனக்கு நினைவிருக்கு” என்றான் முத்து.

“எங்க சொல்லு, பார்ப்பம்”

“குரங்குலேர்ந்து மனுசன் தோன்றுன மாதிரி, இந்த தெரோபோடு டைனோசர்லேர்ந்து தான், இப்ப இருக்குற பறவை இனம் தோன்றுச்சின்னு சொன்னே”.

“வெரிகுட் முத்து. நல்ல ஞாபக சக்தி ஒனக்கு! நான் ஏற்கெனவே சொன்ன  ஜூராசிக் பார்க் படத்தோட ஹீரோ டி-ரெக்ஸ் (T-rex) இந்த வகையைச் சேர்ந்தது தான். 

டி-ரெக்ஸுக்கு அடுத்தபடியா வெலோசிராப்டர் (Velociraptor) னு ஒரு வகை. இந்தப் பேருக்கு, வேகமான கொள்ளைக்காரன்னு அர்த்தமாம். செம வேகத்துல ஓடி, வேட்டையாடி இரையைப் பிடிச்சதினால, இந்தப் பேரு வைச்சிருக்காங்க.

WhatsApp Image 2020 11 14 at 9.34.21 PM
Velociraptor – Source Wikipedia

1971 ஆம் ஆண்டு மங்கோலியாவில இதுவும், புரோட்டோசிராடாப்ஸ் (Protoceratops)ங்கிற டைனோசரும் சண்டை போட்டுக்கிட்டிருக்கிற, புதைவடிவக் காட்சி கிடைச்சிருக்கு”.

dinosaur3
Fighting fossils – நன்றி https://www.sciencekids.co.nz

“அப்படியா சிட்டு?” என்று கேட்ட மலரின் கண்கள், வியப்பால் விரிந்தன.

“ஆமாம். கிரிட்டேசியஸ் (Cretaceous) காலத்துல வாழ்ந்த இதுக்கு, பறவை மாதிரி றெக்கை இருந்துருக்கு. ஆனா இதோட கைகள் ரொம்ப சின்னதாயிருந்ததால, இதால பறக்க முடியாது. உருவம் வான்கோழி அளவு தான். இரண்டாவது பாதத்துல, அரிவாள் மாதிரி வளைஞ்சிருந்த கூரான நகத்தால, வேட்டையாடி இரையைப் பிடிச்சிருக்குது. ஊர்ந்து போற  சின்ன விலங்குகள், மெதுவாப் போற சின்ன டைனோசர், இதெல்லாம் இதோட முக்கியமான உணவு. 

இதுவும் டைய்னானிக்கஸ் (Deinonychus) டைனோசரும், கிட்டத்தட்ட ஒரே ரகம் தான்.  இந்த டைய்னானிக்கஸ் பத்தியும், ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லியிருக்கேன்”

WhatsApp Image 2020 11 14 at 9.34.22 PM
Deinonychus – Source wikiwand.com

“ஆமாம். அது காலுல இருந்த அரிவாள் மாதிரி, வளைஞ்ச கூரான நகத்தை வைச்சி வேட்டையாடி இரையைப் பிடிச்சிதுன்னு சொன்னே” என்றான் வினோத்.

“ஆமாம் வினோத். இது ஆசியா கண்டத்துல இருந்திருக்கு. அது வட அமெரிக்காவில இருந்துருக்கு. சரி, நேரமாயிட்டுது.  இதோட இன்னிக்கு டாட்டா! மீதி அடுத்த மாசம்!” என்று சொல்லிவிட்டுச் சிட்டாகப் பறந்தது சிட்டு!  குழந்தைகள் அனைவரும் சிட்டுவிற்கு டாட்டா சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினர்.

என்ன குழந்தைகளா? சிட்டு சொன்ன டைனோசர் கதை பிடிச்சிருக்கா?  உங்கள் கருத்துகளை எழுத வேண்டிய முகவரி:- feedback@poonchittu.com.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments